2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விகாரைத் திறப்பில் கலந்து கொள்ளாமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோரிக்கையை ஏற்று, விகாரைத் திறப்பில் கலந்து கொள்ளாமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை நேற்று  (01) அனுப்பியுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்ட விகாரை, கடந்த மாதம் 29ஆம்திகதி ஜனாதிபதியால் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை திறந்து வைக்க ஜனாதிபதியை வருகை தர வேண்டாம் எனக் கோரி, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை வி.எஸ். சிவகரன் அனுப்பியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த கட்டடத் திறப்புக்கு வருகை தரவில்லை.

இச்சந்தர்ப்பத்தில், இது தொடர்பாக வி.எஸ். சிவகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்,

“குறித்த விடயத்தில் நீங்கள் காட்டிய ஜனநாயகப் பெருந்தன்மைக்காக, எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனநாயகமும் இலங்கை அரசமைப்பும் மத விவகாரங்களும் இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் சமம் என்பதை நீங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு. ஏனெனில் ஒரு சர்வாதிகாரத் தலைமைத்துவத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியில், தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் தாங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில், தற்போது வரை எவரும் இல்லாத சூழலில், விகாரையை தனியார் காணியில் அமைந்திருப்பது ஒருங்கிணைந்த சமூகமயமாக்கல் நல்லெண்ண செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவே காணப்படும். ஆகவே, 29 ஆம் திகதி பௌத்த சாசன அமைச்சர் இந்நிகழ்வில் கலந்த கொண்டது நல்லாட்சி ஜனநாயக விழுமியத்துக்கு உகந்த நாகரிகம் அல்ல.

ஜனநாயக ரீதியான எனது போராட்டம் தொடரும். தங்கள் புலனாய்வு அமைப்புகளின் எத்தகைய விசாரணைக்கும் தயாராகவே இருக்கின்றேன் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருவதுடன் இவ்வாறான ஜனநாயகச் செயற்பாட்டாளர்களை அடக்க முனைவது ஜனநாயகப் படுகொலையாகும்.

கடந்த ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான புலனாய்வு முகவரமைப்புகளின் தவறான தகவல்களின் பிரகாரம் பல்வேறுவிதமான பின்னடைவுகள் நாட்டுக்கு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவற்றை தாங்கள் சீர்ப்படுத்துவீர்கள் என நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .