2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

27ஆம் திகதி முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்

நாளைய தினம் வடக்கு - கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக முல்லைத்தீவிலும் மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம்,  நேற்று 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டதுடன் இன்று 50ஆவது நாளாகும்.

இதேவேளை, கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் நேற்று 56ஆவது நாளாக இடம்பெற்று வருவதுடன் இன்று 57ஆவது நாளாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள இடத்தில் நேற்று காலை 10 மணியளவில், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடுவதாக  தீர்மானிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விரைவில்  விடுவிக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க ​வேண்டும் என்று தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தகர்களையும், கடைகளை அடைத்து பூரண ஆதரவை வழங்குமாறும் அனைத்து மக்களையும் நாளை காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதியிடம் வழங்குவதற்கான மகஜரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .