2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

2020க்குள் ஒரு இலட்சம் ‘தொழில் வாய்ப்புகளை வழங்குவோம்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினூடாக வழங்க முடியும் என, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும், “கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடற்றொழிலில் ஈடுபட, படகுகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.

மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று  (25) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

"கடற்தொழில் அமைச்சினைப் பொறுத்தவரையில், இலங்கையில் முதல் முதலாக கடலட்டை இனப்பெருக்கத்துக்காக கட்டடத்தொகுதி அமையப்பெறுவது, மன்னாரிலேயே ஆகும்.

"உலக சந்தையில், கடலட்டையின் கேள்விக்கு 10 சதவீதம் கூட எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த செயற்கை முறை இனப்பெருக்கத்தின் மூலம், கடலட்டையின் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

"குறித்த நிலையம் போல் முல்லைத்தீவிலும் ஒரு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைக்கப்படுகின்ற உற்பத்தி நிலையங்கள் மூலம், சந்தை வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்.

"மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த திட்டமானது இவ்வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவடையும். அதன்பின்னர், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி குறித்த திட்டத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

"இந்த திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில், 400 குடும்பங்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

"ஒவ்வெருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், ஒரு திட்டத்தை நாங்கள் இம்முறை ஆரம்பித்துள்ளோம்.

10 இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால் மீன் பிடி அமைச்சினூடாக அவ்வாறான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"எவ்வாறாக இருப்பினும், 2020ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சினூடாக, இவ்வாறான திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் வழங்க முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .