2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'தீர்வைப் பெற்றுக்கொடுக்க கால அவகாசம் தேவையில்லை'

George   / 2017 மே 02 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“ஜனநாயக போராட்டங்களை மதிக்கின்றேன் என கூறிய ஜனாதிபதி,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 71 நாட்களாக முன்னெடுக்கின்ற போராட்டத்தை அவமானப்படுத்துகின்றாரா?” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே திங்கட்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உழைக்கக்கூடியவர்கள் இங்கே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த உலகத்தில் தமிழர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்லமுடியாது, அதற்கான நீதி கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்னர், இந்த நாட்டில் கேட்பார் இல்லாமல், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் எங்கே என்று சொல்லவில்லை. இன்று வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வருவார்கள், எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படும், அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், எங்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழர்கள் ஒரு மாற்று அரசாங்கத்தை தெரிவு செய்திருந்தோம்.

அந்த மாற்று அரசாங்கம் கூட தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. காணாமல்போக செய்யப்பட்டவர்கள் சாட்சிகளோடு சரணடைந்தார்கள். யாரும் உயிருடன் இல்லை, அவர்கள் யாரும் எங்களிடம் சரணடையவில்லை என அரசாங்கம் சொல்லமுடியாது.

சரத்பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ இந்த மண்ணில் உயிரோடு தான் உள்ளனர். இவர்கள் தான் வெள்ளை வானிலே கடத்தினார்கள். இவர்கள் தான் இந்த மக்களை கொன்றார்கள் என்பதற்கு நியாயங்களும் ஆதாரங்களும் உள்ளன.

நாங்கள்,  திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.  தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பேசியதால் சிங்களவர்களால் அழிக்கப்பட்டனர்.

இம்மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க கால அவகாசம் தேவையில்லை. உலகம் எங்களை கைவிட்டதாக கருதவில்லை. சர்வதேச சமூகம் எங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்க  துணை நிற்கின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .