2025 ஜூலை 02, புதன்கிழமை

விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக உள்ளோம்

Niroshini   / 2016 ஜூன் 03 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்” என வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வட மாகாணத்தை சேர்ந்த விவசாய இளைஞர் கழகங்களுக்கு வட மாகாண விவசாய அமைச்சினால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, வவுனியா விவசாய பண்ணையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்பட்ட இவ் விவசாய உபகரணத்தொகுதியில் நவீன முறையில் நாற்று நடும் இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

வவுனியா விவசாய பண்ணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக்ரஞ்சன், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர்.இந்திரராஜா, அ.ஜெயதிலக உட்பட விவசாய அமைச்சின் அதிகாரிகள், விவசாய இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“134 இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திர தொகுதிகள் வழங்கப்படவுள்ளன. ஒட்டுமொத்தமாக வட மாகாணத்துக்கென மத்திய அரசாங்கத்தினால் எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆக 410 மில்லியன் ரூபாய் மாத்திரமே. இத்தொகை விவசாய அமைச்சுக்கு மாத்திரமல்ல.

இந் நிதியை ஐந்து மாவட்டங்களுக்கும் பிரித்தல் வேண்டும். ஐந்து மாவட்டங்களிலும் இருக்க கூடிய அத்தனை திணைக்களங்களுக்கும் பிரிக்க வேண்டும்.

எனவே, இந் நிதியில் 240 மில்லியனை விவசாய திணைக்களத்துக்கு ஒதுக்கீடு செய்து அதில் 40 மில்லியன் ரூபாவை வவுனியா மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ளோம்.

வடக்கு மாகாணசபை எதனையுமே செய்வதில்லை என்று சொல்லி அரசியல் நோக்கம் கருத்தி செய்யப்படும் விமர்சனங்களுக்கும் நாங்கள் பதில்சொல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம். பிச்சை எடுக்கப்படுகின்ற இந்த மிகக்குறைந்தளவிலான பணத்தை வைத்தே நாங்கள் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வேண்டியுள்ளது.

வட மாகாணத்தை பொறுத்தவரையில் நெல் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு என 2016ஆம் ஆண்டு விவிசாய திணைக்களத்தினூடாக முன்னெடுத்து வருகின்றோம். நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க செய்யும் திட்டத்துக்கு ஐந்து மாவட்டத்துக்கும் 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலேயே இவ் உபகரணமும் வழங்கப்பட்டது.

நாம் கடந்த முறை முல்லைத்தீவில் நெல் அறுவடை இயந்திரத்தை வழங்கி வைத்தோம். இதற்கு முகநூலில் ஒரு விமர்சனத்தை பார்த்தேன். ஏழை விவசாயிகளின் அப்பாவிகளின் வயிற்றில் இந்த இயந்திரங்கள் அடிக்கின்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், எங்களை பொறுத்தவரையில் எங்களது உணவின் உற்பத்தி திறன் அதிகரிக்கவேண்டும். எனவே, இவ்வாறான இயந்திரங்களை வழங்குவது விவசாயத்துறைக்கு நன்மை தரக்கூடியது.

ஜனாதிபதி கூட தேசிய உணவு உற்பத்தி திட்டமொன்றினை செயற்படுத்தி வருகின்றார். மானசீகமாக மனப்பூர்வமாக அவர் இந்த திட்டத்தினை செயற்படத்தி வருகின்றார். இதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எனவே, அந்த திட்டத்துக்கும் கைகொடுக்கும் முகமாக எமது விவசாய நடவடிக்கைகள் அமையவேண்டும். அதற்கு அமைவாகவே எனது திணைக்களமும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .