2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒட்டுசுட்டானில் 3,273 குடும்பங்களுக்கு வீடு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேறியவர்களில் 2,069 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 1,204 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் எஸ்.குருபரன் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் 5600இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் இவர்களில் 3,273 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் 2,069 குடும்பங்களிற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், 1,204 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.

அதன்படி அரச சார்பற்ற நிதியுதவியின் மூலம் 1,648 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, முதலாம் கட்டமாக கற்சிலைமடு கிராமத்தில் 140 வீடுகள் அமைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக பழம்பாசி கிராமத்தில் 150 வீடுகளும் ஒட்டுசுட்டானில் 51 வீடுகளும் மணவாளன் பட்டமுறிப்பு கிராமத்தில் 80 வீடுகளுமாக மொத்தம் 281 வீடுகள் அமைக்கப்பட்டன.

மூன்றாம் கட்டமாக முத்தையன் கட்டு கிராமத்தில் 91 வீடுகள், அம்பகாமத்தில் 58 வீடுகளும் திருமுறிகண்டி இந்துபுரம் கிராமத்தில் 127 வீடுகளும் காதலியார் சமணன் குளத்தில் 143 வீடுகளுமாக மொத்தம் 419 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நான்காம் கட்டத்தில் ஒலுமடுவில் 74 வீடுகளும், மாங்குளத்தில் 173 வீடுகளும், பனிக்கன்குளத்தில் 24 வீடுகளும், திருமுறிகண்டியில் 191 வீடுகளுமாக மொத்தம் 462 வீடுகளுக்குரிய பயனாளிகள் தெரிவு இடம் பெற்று ஆவணங்கள் கோவைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது, இந்திய அரசின் ஐந்தாம் கட்டத்தின் மூலம் முத்துவிநாயகபுரத்தில் 35 வீடுகளும், கருவேலன்கண்டலில் 37 வீடுகளும், தட்டைய மலையில் 59 வீடுகளும், கனகரட்ணபுரத்தில் 55 வீடுகளும், வித்தியாபுரத்தில் 137 வீடுகளுமாக மொத்தம் 323 வீடுகளுக்குரிய பயனாளிகள் தெரிவு இடம்பெற்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றினை விட பகுதியளவு சேதமடைந்த 346 வீடுகளில் 287 வீடுகளே திருத்தி அமைப்பதற்கு அனுமதி கிடைத்த நிலையில் அவற்றில் 239 வீடுகள் யு.என்.கபிராற் நிறுவனத்தின் நிதியுதவியில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இவற்றினைவிட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் தனிநபர் மற்றும் இருநபர் கொண்ட குடும்பங்கள் தவிர்ந்த 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .