2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

Kogilavani   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் நொபுகிட்டோ கொபோ வியாழக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு, மலையாள்புரம் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபம் மற்றும் உள்ளக வீதி ஆகியவற்றினைத் திறந்து வைத்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் 'இலங்கையில் வடமகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீள புனர்நிர்மாணம் செய்தல்' திட்டமானது ஜக்கிய நாடுகள் வாழ்வக நிறுவனத்தால் (யு.என்.ஹபிராற்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டு வருடத்தினைக் கொண்ட மேற்படி திட்டமானது எதிர்வரும் 2015 மார்ச் மாதம் முடிவடையவுள்ளது.

இரண்டு வருடகால வரையறையினைக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வரும் பலநோக்கு மண்டபங்கள், உள்ளக வீதிகள், பாலர்பாடசாலைகள், மழைநீர் சேகரிப்புத்திட்டம், வெள்ளநீர் வடிகாலமைப்பு மற்றும் மரநடுகை போன்றவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 80 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் நன்மையடையவுள்ளனர்.

மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை அடிப்படை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம மட்ட அமைப்புக்கள் தங்களது உட்கட்டமைப்பு வசதிகளினை மக்கள் பங்கேற்பு செயன்முறையூடாக மீள் நிர்மாணம் செய்து வருகின்றன.

மேற்படி திட்டத்தில் இணைந்து செயற்படும் கிராம மட்ட அமைப்புக்கள்  மற்றும் பெண்களின் திறன்கள் விருத்தி செய்வதற்கான தலைமைத்துவம், முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான கட்டிட நிர்மாண மற்றும் பராமரிப்பு விடயங்களில் பூரணமான விரிவான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திறப்பு விழா நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் முதற் செயலாளர் கென்சிமியாடா, கரைச்சிப்பிரதேச செயலாளர் ச.நாகேஸ்வரன், கிராம மட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யு.என்.ஹபிராஜ் நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .