2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காட்டு யானை தாக்கி மாணவன் பலி

Kanagaraj   / 2014 மார்ச் 10 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முருகானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிவசுப்பிரமணியம் கஜானன் (19) என்ற மாணவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சோமசுந்தரம் சபாபதிப்பிள்ளை (63) என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

மேற்படி பகுதியிலுள்ள ஊர்மனைகளுக்குள் காட்டு யானையொன்று இன்று காலை புகுந்து அங்கிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கியது. இதில் அகப்பட்டுக்கொண்ட சபாபதிப்பிள்ளை என்பவர் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஊர்மக்கள் சேர்ந்து குறித்த யானையினை வெடிகள், மற்றும் சத்தங்களை எழுப்பி காட்டுக்குள் துரத்தினார்கள்.

விரட்டப்பட்ட யானையினை பார்ப்பதற்காக உயர்தர மாணவர்கள் ஐந்து பேர் யானை சென்ற பகுதியினை நோக்கிச் சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கு நின்றுகொண்டிருந்த யானை ஐவரையும் துரத்தியபோது, கஜானன் யானையிடம் அகப்பட்டுக்கொண்டார். யானை கஜானனைத் தூக்கி அடித்து முகத்தில் காலால் மிதித்து கொன்றது.

யானையின் ஆக்கிரோஷத்தினால் எவரும் அருகில் செல்ல முடியாததினால் நீண்ட நேரத்திற்குப் பின்னர் பொலிஸார் சென்று கஜானனின் சடலத்தினை மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அருகிலுள்ள ஊர்களுக்கும் குறித்த யானை நேற்றிரவு புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .