2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜ.ம.முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்,எஸ்.றொசேரியன்,லெம்பேட்எஸ்.ஜெகநாதன்

இலங்கையில் உண்மையான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கு இதயசுத்தியுடன் உழைத்துவரும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புதன்கிழமை (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் சர்வதேசம்வரை எடுத்துச்சென்றதுடன், மனித உரிமைகளில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டு அவற்றுக்கு எதிரான அநீதிகளை வன்மையாகக் கண்டித்து பல்வேறு போராட்டங்களையும்  மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் நடத்தி வந்துள்ளனர்.

இன, மத, மொழி பேதமின்றி  அவர்கள் ஆற்றிவருகின்ற பணிகளுக்கு ஊக்கமளிக்கவேண்டியது, இந்நாட்டில் உண்மையான ஜனநாயகத்தையும் மனிதநேயத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கின்ற அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் சரணடைந்து, கைதுசெய்யப்பட்டு காணாமல் போகச்;செய்யப்பட்டோரை கண்டுபிடிப்பதற்காகவும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் ஜனநாயக மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக நடத்திய தொய்வுறாத போராட்டங்களை நாம் நன்றியுணர்வுடன் நினைவுகூருகின்றோம்.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள மக்கள் அனைவரும் இந்நாட்டில் என்ன நடக்கிறது? எத்தகைய ஆட்சி நடக்கிறது? என்பதை அவரவர்களது சொந்த மொழியில் அறிந்துகொள்ளும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை விரும்புகின்ற சூழலில் மனோ கணேசனின் துணிச்சல் மிகுந்த நேர்மையான அரசியல் பயணம் ஒருவித நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. ஆகவே, இந்நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் இதுவரை காலமும் குறிப்பிட்ட கட்சிகளுக்கே வாக்களித்து வந்த நிலையை மாற்றி இம்முறை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து ஒரு துணிச்சல் மிக்க நேர்மையான அரசியல் தலைமையைத் தெரிவுசெய்வதனூடாக, எமது உண்மையான விருப்பத்தை சர்வதேசத்திற்கும் உள்நாட்டில் சுயநல போக்குடனும் ஏதேச்சதிகாரத்துடனும் செயல்படும் அரசியல் தலைமைக்கும் தெளிவாகவே எடுத்துரைப்போம்.

மனோ கணேசனின் வெற்றியானது இந்நாட்டிலுள்ள சகல ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, இந்நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவரது கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .