2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தொண்டமான்நகர் பொதுக்காணியை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிராக போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, தொண்டமான்நகர் பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த தனியார் கம்பனி ஒன்றுக்கு கரைச்சி பிரதேச செயலாளர் கொடுப்பதற்கு எதிர்ப்பு  தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள மேற்படி காணியில் இன்று திங்கட்கிழமை (21) நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவினையும் மீறி பிரதேச செயலாளர், மேற்படி காணியினை தனியார் நிறுவனத்திற்கு வழங்க முன்வந்துள்ளார் எனத் தெரிவித்தே பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கு மகஜரையும் அனுப்பினர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் நகரை அண்டிய பகுதியில் காணப்படும் பழமை வாய்ந்த கிராமமான தொண்டமான்நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை, 2013ஆம் ஆண்டு தென்னிலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்புலத்துடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு கரைச்சி பிரதேச செயலர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான வகையில் வழங்க முற்பட்டனர்.

மேற்படி கிராம மக்களாகிய நாம் 2013ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாள் இக்காணி அபகரிப்புக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்படி காணி முழுமையாக கோவிலுக்கு சொந்தமானதென தீர்ப்பளிக்கபட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தால் ஆலயத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்ட காணியின் ஒருபகுதியை, கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி அன்று எமது கிராமத்தின் பொது அமைப்புக்களின் அனுமதியின்றி கரைச்சி பிரதேச செயலாளரின் அதிகார துஸ்பிரயோகத்தை பாவித்து தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள தனியார் ஒருவர் அத்துமீறி அளந்து எல்லைக்கற்களை வைத்துள்ளர்.

இதுதொண்டமான் நகர் கிராமமக்களாகிய எமக்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய கிராமமான தொண்டமான்நகர்  கிராமத்தின் முக்கிய பொதுத்தேவை பயன்பாடுகளான சனசமுக நிலையம், சிறார் முன்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அறநெறிப்பள்ளி விளையாட்டுக்கழகம் போன்றவற்றிற்கு நிரந்தரமான காணிகள் இல்லாத நிலையில் இக்கிராமத்தில் உள்ள மேற்படி பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள ஒருவருக்கு வழங்குவதில் காட்டும் மிகப்பிரயத்தனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதோடு அவரின் அதிகார துஸ்பிரயோக தன்மையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இது தொடர்பில் தொண்டமான்நகர் கிராம மக்களாகிய நாம் பலத்த அதிருப்தி அடைந்துள்ளோம். அத்துடன் அதிகார வர்க்கத்தில் உள்ள அதிகாரிகளின் இதுபோன்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது கிராமத்துக்கு சொந்தமான பொதுக்காணிகள் எம்முடைய பொதுத்தேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எனவே இவ்விடயம் தொடர்பில் தாங்கள் தங்கள் மேலான கவனத்தை செலுத்தி இக்கிராமத்துக்கு சொந்தக்காரர்களாகிய எமக்கு உரிய தீர்வை விரைந்து பெற்றுத்தருவீர்கள் என்று மிகவும் பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X