2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மகனை பிரிந்து துயரத்துடன் வாழ்கின்றேன்: தாய் சாட்சியம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மகனையும் பிரிந்து இன்று எவ்வித அடிப்படை வசதிகள் இன்றியும் பல்வேறு துன்ப துயரத்துடன் வாழ்ந்து வருவதாக மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கருக்காக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேமாலை மரியை என்ற தாய்  சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று வெள்ளிக்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருக்காக்குளத்தைச் சேர்ந்த சேமாலை மரியை என்ற தாய் தனது முறைப்பாட்டில் மேலும் சாட்சியமளிக்கையில்,

தனது 28 வயதுடைய மகனை காணவில்லை எனவும்,வேலைக்குச் சென்ற போது காணமல் போயுள்ளதாக முறையிட்டுள்ளார்.

தனது மகன் ஆண்டங்குளம் மரக்காலையில் வேலைக்குச் சென்ற பின் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்த நேரம் அப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்து வந்தது.

25-11-2006 ஆம் திகதி அன்று மகன் காணாமல் போனதுடன் இது சம்மந்தமாக அங்கிருந்த விடுதலைப்புலிகளிடம் கேட்ட போது அவர்கள் தமக்குத்தெரியது என தெரிவித்திருந்தனர்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் மகன் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது 10 நாட்களே எங்களுடன் வீட்டில் இருந்தார். அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும்படி கேட்ட போது புலிகளின் பயத்தின் காரணமாக மீண்டும் அங்கு சென்று விட்டார்.

06-01-2009 அன்று முல்லலைத்தீவு சுதந்திரபுரத்தில் நான் கண்டேன். ஆனால் அப்பொழுது அவருடன் கதைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2009 மே மாதம் 06 ஆம் திகதி எமது உறவுகள் அவரை மீண்டும் கண்டதாக சொன்னார்கள்.

14-05-2009 அன்று நாங்கள் இடம் பெயர்ந்து வந்த போது இந்த செய்தி எங்களுக்கு உறவுகளினால் கூறப்பட்டது.

நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் இருந்த போது வீழ்ந்த செல்லின் காரணமாகவே உழவு இயந்திரம் மூலம் பயணித்து ஆத்திமோட்டை, பாலியாறு, வஞ்சரிக்கிராமம், பின் சுதந்திரபுரத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தோம்.

நாங்கள் இருந்த இடங்களில் இருந்து அகதிகளாக புறப்படும் போது எங்களை எவரும் போக வேண்டாம் என்று தடுக்கவில்லை. பின் சுதந்திர புறத்தில் இருந்து இருட்டு மடுவிற்குச் சென்ற போது அப்பொழுது அது இராணுவ கட்டுப்பாட்டிற்கூறியதாக இருந்தது.

நாங்கள் இருட்டு மடுப்பகுதிக்குச் சென்ற போது இராணுவமே எங்களுக்குப்பாதை காட்டி எங்களை ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்குமாறு எங்களைப்பணித்தார்கள்.

பின் இன்னுமோர் காட்டுப்பகுதியைக்காட்டி மயில் வாகன புரம் பகுதிக்கு கூட்டிச் சென்று அங்கு இராணுவம் எங்களை சோதனையிட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சியில் உள்ள கமநல கேந்திர கட்டட பகுதி ஒன்றில் இறக்கி விட்டார்கள்.

எங்களை மட்டுமல்ல அங்கிருந்த எல்லோரையும் பின் வவுனியாவிற்கு பஸ் மூலம் அனுப்பினார்கள்.

பின் ஓமந்தை சோதனைச்சாவடியில் விசாரனை செய்து செட்டிக்குளம் சித்திவிநாயகர் பாடசாலையில் தங்க வைத்தனர்.

08 மாதம் அங்கிருந்தோம். பின்னர் வேறு ஒரு முகாம் (சோன்-06) இற்கு அனுப்பினார்கள். 21-10-2009 அன்று சொந்த இடத்திற்கு மீண்டும் வந்தோம். வீடுகள் பெரும்பாலும் அழிந்திருந்தது. நேர்ப் திட்டத்தில் எனக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.

விவசாயம் வரட்சியில் பாதீப்படைந்து இருக்கின்ற போதும் வாழ்வாதார பிரச்சினையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X