2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'மூத்த மகனை கடத்தி கப்பம் கேட்டனர், இளைய மகனை சித்திரவதை செய்தனர்'

George   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது  மகனை பிடித்து சித்திரவதை செய்தனர் என தாய் ஒருவர், காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று திங்கட்கிழமை (11) சாட்சியமளித்தார்.

மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன இந்த சாட்சியமளிப்பின் போது அந்த தாய் தொடர்ந்து கூறுகையில்,

இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டி கிராமத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து கடந்த 04.04.2008 அன்று இரவு, எனது  14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றனர்.

நாங்கள்  உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்டோம்.

ஆனால் அவர்கள்  தாம் பிடிக்கவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர்  3 நாட்களுக்கு பின்னர் 20  இலட்சம் ரூபாய் பணம்  தந்தால் மகனை விடுதலை செய்வோம். பணம் தராது விட்டால் மகனை கொலை செய்து சடலமாக வீட்டில் கொண்டு வந்து போடுவோம் என்று சிங்களத்தில் கூறினர்.

எங்களுக்கு சிங்களம் தெரியாது என்பதினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியை கொடுத்து விபரத்தை கேட்டோம்.

அதன் பின்னர் அவர்கள் கேட்ட தொகை எம்மிடம் இல்லாததால், எங்களால் முடியாது என்றும் சுட்டுக் கொண்டு வந்து வீட்டிற்கு முன் போடுமாறும் கூறினோம்.

அதன் பின்னர் சில நாட்களின் பின்னர் எனது 10 வயது மகன் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது இராணுவ ட்ரக் வண்டியில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.

மாலை 4 மணியாகியும் வீட்டுக்கு மகன் வராததன் காரணத்தினால் இரணை இலுப்பைக் குளத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்று  கேட்ட போது தாங்கள் மகனை பிடிக்கவில்லை என்று கூறி அனுப்பினார்கள்.

தொடர்ந்தும்  நாங்கள்  இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள குறித்த இராணுவ முகாமிற்கு சென்று கேட்கும் போது பிடித்தவரை அடையாளம் காட்டுமாறு இராணுவ அதிகாரி எங்களிடம் கூறினார்.

அப்போது நாங்கள்  ஒருவரை அடையாளம் காட்டினோம். பின்னர் 6 நாட்களின் பின்னர் 10 வயது மகனை, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கை, முகம் போன்ற இடங்களில் பிளேடால் வெட்டி காயப்படுத்தி சித்திரவதை செய்த பின்னர் வீதியில் இறக்கி விட்டுச் சென்றனர்.

அந்தவேளை, வீட்டில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது அண்ணாவை இராணுவம் சுட்டு விட்டதாக தன்னை வைத்திருந்த முகாமில் கூறினார்கள் என்றும் தன்னை சித்திரவதை செய்தார்கள் என்றும்  எங்களிடம் மகன் கூறினார்.

ஆனால் எனது மூத்த மகன்  குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் இராணுவம் கடத்தியது என்று நான் உறுதியாக கூறுகின்றேன் என குறித்த தாய் ஆணைக்குழு முன் மேலும் சாட்சியமளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X