2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

காணி அபகரிப்பு, காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக்கூறியததாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இன்று புதன்கிழமை  (3) காலை சந்தித்து  கலந்துரையாடினார்.  இந்தச் சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். 

இந்தச் சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவிக்கையில்,

'காணி அபகரிப்பு, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன்.

இது தவிர முல்லைத்தீவு வெலிஓயா, மன்னார் முசலி, கொக்கச்சான்குளம் எனும் கலாபோவஸ்வௌ, செட்டிகுளம், ஓமந்தை இறம்பைக்குளம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் ஏனைய பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் எடுத்துக்கூறினேன்.

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின்  மக்களுடனான அணுகுமுறைகள், காணாமல் போனோரின்; குடும்பங்களை பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ச்சியாக மிரட்டி வருதல் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுதல்,  முன்னாள் போராளிகளையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆட்படுத்திவரும் அரசின் செயல்பாடுகள், போரினால் விதவைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின் நிரந்தர வாழ்வாதாரம், போரினால் முழுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும்  எடுத்துரைக்கப்பட்டது' என்றார்.

இவை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், தன்னால் இயன்றவரை மேற்படி  விடயங்களை முதன்மைப்படுத்தி ஆவண செய்வதாக தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் இன்னமும் மீள்குடியேற்றப்படாத மக்கள் இருக்கின்றார்களா? அவ்வாறு இருந்தால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? எனவும் உயர்ஸ்தானிகர் தன்னிடம் கேட்டமைக்கு அமைய, வவுனியா பூந்தோட்டத்திலும் சிதம்பரபுரத்திலும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 வருடங்களுக்கும் மேலாக மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X