2025 ஜூலை 16, புதன்கிழமை

யாசகர்களின் உறைவிடமாக மாறியுள்ள மன்னார் அரச பஸ் தரிப்பு நிலையம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் உள்ள பயணிகள் தரிப்பிடம், இரவில் யாசகர்களின் உறைவிடமாக மாறியுள்ளதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் அரச பஸ் தரிப்பிடம் மன்னார் நகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போதும், காலை 07 மணிமுதல் மாலை 5 மணிவரை  இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை அதிகாரிகளினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு பின் மன்னாரில் உள்ள யாசகர்கள் தமது உறைவிடமாக குறித்த பயணிகள் தரிப்பிடத்தை மாற்றியுள்ளனர்.

இரவு 7.30 மணிக்கு பயணிகள் தரிப்பிடத்துக்கு வரும் சுமார் 10 யாசகர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி மதுபானம் அருந்துவதோடு புகையிலை பாவனைகளில் ஈடுபடுகின்றனர்.

இதன் போது அவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளினால் தமக்குள் சண்டை பிடிப்பதோடு பயணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளினால் பேசுகின்றனர்.

தரிப்பிடத்தினுள் வைத்து தாம் கொண்டு வந்துள்ள உணவுகளை உண்டு மிகுதியை தரிப்பிடத்தினுள்லேயே கொட்டுகின்றனர்.

இதனால் தரிப்பிடத்தில் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தரிப்பிடத்தைச் சுற்றி தெரு நாய்களும் ஒன்று கூடுகின்றது. இதனால் தொடர்ச்சியாக பயணிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதிகாலையில் குறித்த யாசகர்கள் பயணிகள் தரிப்பிடத்துக்கு முன்பே சிறு நீர் கழிப்பதினால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளரும், மன்னார் நகர சபையும் உரிய நடவடிக்கை எடுத்து குறித்த யாசகர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,

இவ்விடயம் தொடர்பில் மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். இச் சம்பவத்தை நான் நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தியுள்ளேன். மன்னார் பொலிஸாரின் உதவியை பெற்று உடனடியாக குறித்த யாசகர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X