2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முள்ளிக்குளம் காணிகளையும் விடுவிக்கவும்: செல்வம் எம்.பி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த 11 வருடங்களுக்கு மேலாக மன்னார், முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம்பெயர்ந்து தற்போது காடுகளுக்குள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். கடந்த 11 வருடத்துக்கு முன் இராணுவத்தினரால் அந்த மக்கள் வெளியேற்றப்பட்ட பின் தற்போது குறித்த கிராமத்தை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த மக்களை அவர்களின் சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அக்கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த அரசாங்கத்திடம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதும் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அரசு இடம் பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீண்டும் மீள்குடியேற்றப்போவதாக தேர்தல் வாக்குருதிகளை வழங்கியிருந்தனர். அந்த அடிப்படையிலே முள்ளிக்குளம் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களிலே மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கை சார்ந்த விபரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளோம்.

யாழ்ப்பாணம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருக்கின்றார்.

குறித்த காணிகள் விடுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறும் அதே பட்சத்தில் முள்ளிக்குளம் மக்களின் காணிகள் கடற்படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டு அந்த மக்கள் சொந்த மண்ணிலே குடியேற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடையத்தை நாங்கள் தொடர்ந்தும் வழியுறுத்தி வருகின்றோம். ஆகவே, அரசாங்கம் அதனை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக உள்ளது.

நிலங்களை விடுவிக்கின்ற போது எல்லா பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து. ஆயிரம் ஏக்கர் விடுவிப்பது என்பது வரவேற்கத்தக்க விடையம்.எனவே முள்ளிக்களம் மக்களை தமது சொந்த நிலத்தில், அவர்களுடைய சொந்த வீட்டில் வாழவைக்கப்பட வேண்டும்.

அவர்கள் காட்டிற்குள் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை  மாற்றப்பட்டு சொந்த இடங்களிலே அவர்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதனை நாங்கள் ஜனாதிபதியிடம் கூறி வருகின்றோம். இச்சந்தர்ப்பத்திலும் நான் கடிதத்தினூடாக இவ்விடையத்தை வழியுறுத்தியுள்ளேன்.

அந்த வகையிலே முள்ளிக்குளம் கிராம மக்களை தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்ற உடனடியான நடவடிக்கைக்கு ஜனாதிபதியும்,பிரதமரும் கவனம் எடுக்க வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்' என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .