2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், ரொமேஸ் மதுசங்க

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை கண்டித்து, மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (16) காலை மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட மீனவ சம்மேளன தலைவர் அல்பிரட் ஜஸ்டின் சொய்சா தலைமையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், மன்னார் பிரதான பாலத்தடியில் ஆரம்பமாகி பஸார் பகுதியூடாக மன்னார் வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

பின் அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கலந்து கொண்டார்.

இதனைந்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள், பதாதைகளை ஏந்தியவாறு இந்திய மீனவர்களின் வருகையை கண்டித்து பல்வேறு கோசங்களை எழுப்பினர். பின்னர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜர் கையளிக்க முற்பட்ட போதும் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகத்தில் இல்லாத காரணத்தினால் மன்னார்; மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல்லிடம் அந்த மகஜர் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அந்த மகஜரை பெற்றுக்கோபமடைந்த மீனவர்கள், மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்கு முன் அமர்ந்து வீதி மறியல் போரட்டத்தில் ஈடுபட்;டனர். இதனால் மன்னார் பஸார் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. அதன்பின்னர் அங்கு வந்த மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும், ஆர்ப்பாட்டம் முடியும் வரை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .