Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
யுத்தத்தின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் உதவி அவசியமானது. எனினும், அவர்களது உதவி சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூகசேவைகள், சிறுவர் நன்னடத்தை, புனர்வாழ்வு மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அமைச்சரின் வவுனியா உப பணிமனையில் புலம்பெயர் மருத்துவக்குழுவுடன் நேற்று புதன்கிழமை (18.2) நடைபெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இதனைக் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'கடந்தகால யுத்தத்தின் பாதிப்பினால், எமது மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளனர். யுத்தத்தினால் கொல்லப்பட்டவர்களை விட, அதன் வடுக்களை சுமந்துகொண்டு அல்லல்படும் மக்களே மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். குறிப்பாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாகவும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு தாமாக இயங்கமுடியாது, மற்றவர்களில் தங்கி வாழ்பவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.
இதை விட, யுத்தத்தில் குடும்பத் தலைவர்களை தொலைத்து குழந்தைகளுடன் அன்றாட வருமானத்துக்கு அல்லல்படும் குடும்பங்களும் உள்ளனர். இவர்களுக்கான துரித மறுவாழ்வு செயற்றிட்டங்கள் செயற்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எனினும், முன்னைய மத்திய அரசு இவர்களுக்கான செயற்றிட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்களை நாம், புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு சாத்தியங்கள் இருந்தும் ஆளுநரூடாக மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டது.
தற்போது அரசியல் சூழ்நிலை ஓரளவுக்கு மாறுவதாக உணருகின்றோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான உதவிகளை பெற்றுக்கொள்ள முதலமைச்சர் நிதியத்தை நிறுவ தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக ஏற்கெனவே பிரேரணையொன்று மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் புலம்பெயர் மக்களால் வழங்கப்படும் நிதியுதவிகள் இந்நிதியத்தினூடாக பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சுகளினூடாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனூடாக பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு சதத்துக்கும் வெளிப்படையான கணக்கியல் முறைமை பேணப்படும்.
எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் உறவுகளின் தார்மீக உதவியை நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்கள், பெண்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள் முக்கியமானவர்கள். தற்போது எனது அமைச்சின் கீழ் இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரித மறுவாழ்வு செயற்றிட்டங்களுடன் தொடர்பான புனர்வாழ்வு, சமூகசேவைகள், சிறுவர் நன்னடத்தை, பெண்கள் விவகார அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக, வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறல் என்பன அவசியம்.
எனவே இவற்றை ஒருங்கிணைத்து செயற்படக்கூடிய பொறிமுறையொன்றை எனது அமைச்சு செயற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனூடாக இவ்வாறான நிதிமோசடிகளை தடுப்பதுடன், தேவையானவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறான பொறிமுறை உதவிகளை ஒருங்கிணைப்பதற்காகவே அன்றி, கட்டுப்படுத்தும் நோக்கமல்ல.
எதிர்காலத்தில் சுகாதார மற்றும் புனர்வாழ்வு செயற்றிட்டங்கள் தொடர்பில் கரிசனையுள்ள அமைப்புகள் தனி நபர்கள் எனது மாகாண அமைச்சினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago