2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மோடியின் மன்னார் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது: றிஷாட்

Princiya Dixci   / 2015 மார்ச் 10 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 14ஆம் திகதி தலைமன்னார் வருகைதரவுள்ள நிலையில் அவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதாக வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிஷாட் பதியூதீன், திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர், இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மடு - தலைமன்னார் புகையிரத சேவையை வைபவ ரீதியாக 14ஆம் திகதி காலை 10.45 மணிக்கு ஆரம்பித்து வைப்பார். இந்த ஆரம்ப நிகழ்வு தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்திலிருந்து இடம்பெறும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பிரதேசத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில், வன்னி மாவட்டத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியூதீன் இதன்போது தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் இந்திய பிரதமர் ஒருவர் மன்னாருக்கு வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார், மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொது முகாமையாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொறியியலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .