Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 11 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
சகல விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களான எமக்கு, மிகச் சொற்ப அளவிலேயே வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தெரிவில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புதன்கிழமை (11.3) அனுப்பிவைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'பல்வேறு அழிவுகளுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருப்பதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்ற எமக்கு, எமது வாழ்வாhரத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இந்திய அரசாங்கம் ஒரு சிறிய வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தது. ஆனால், கடந்த அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டு எமக்கு கிடைக்கவேண்டிய வீடுகளை தட்டிப்பறித்துள்ளது. எதுவித இழப்பையும் சந்திக்காத மக்களுக்கு அவர்களின் தேவைக்கு மேலாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், சகல விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களான எமக்கு மிகச் சொற்ப அளவிலேயே வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.
பயனாளிகள் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையிலிருந்து ஒதுக்கீடுவரை சகல மட்டத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் தங்;களது மேலான கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.
1.குடும்பத்துடன் வாழ்ந்துவந்த எங்கள் வீடுகளின் மீது விழுந்த குண்டுகள் வீட்டை மட்டுமல்ல, வீட்டில் இருந்தவர்களையும் சேர்த்தே அழித்தன. குடும்ப அங்கத்தவர்களுடன் வீட்டையும் இழந்து நிற்கதியாய் நிற்கும் எமக்கு இரண்டு பேர் இருந்தால் இவ்வளவு புள்ளிகள், இந்த வயதுக்குள்; இருந்தால் இத்தனை புள்ளிகள் என்று கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறுபவர்கள் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுகு;கு இந்தப் புள்ளித்திட்டம் சற்றும் பொருத்தமற்றது என்பதுடன், எமக்கு மனவேதனையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
யுத்தத்தில் எள்ளளவும் பாதிக்காததுடன், இடப்பெயர்வுகளையும் மேற்கொள்ளாத இஸ்லாமிய சகோதரர்களுக்கு புள்ளி அடிப்படையில் அதிக புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் தேவைக்கு அதிகமாக ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
உதாரணமாக, செட்டிகுளம் பகுதியில் வழங்கப்பட்ட 1,460 வீடுகளில் இஸ்லாமியர்களுக்கு 1,070 வீடுகளும் தமிழர்களுக்கு 390 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
2.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் அவர்களது பதவி, குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை, அரசு ஊழியர்களா, தனியார்துறை ஊழியர்களா என்று தராதரம் பாராமல், வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
3.வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேசத்தில் 4,338 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் அனைத்தும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளன. ஆனால், இப்பிரதேசத்துக்கு 424 வீடுகள் மட்டுமே இந்திய வீட்டுத்தில் வழங்கப்பட்டுள்ளன. எமது நிலையை உணர்ந்து ஏனைய நிறுவனங்கள் 2,565 வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளன. இருப்பினும், இப்பகுதிக்கு மேலும் 1,349 வீடுகள் தேவைப்படுகின்றது. இந்தப் பகுதி யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்கு மொத்தம் 7,000 வீடுகள் தேவை. ஆனால், இதுவரை 1,260 வீடுகள் மட்டுமே இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்களின் புதிய குடியேற்றத்துக்கு 455 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் எவ்வித பாதிப்புகளையும் சந்திக்காத வவுனியா சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
4.இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வவுனியா செட்டிகுளத்தில் 390 வீடுகளும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 424 வீடுகளும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 1,260 வீடுகளுமே போரினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய வீட்டுத்திட்டமோ முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் இருந்த மக்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று தமது வீட்டில் தங்கி வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கத்துடனேயே இந்தியா வீடுகளை நிர்மாணிக்க முன்வந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
மொத்தத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வவுனியாவின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சேர்த்தே 390 + 424 + 1260 = 2074 வீடுகளே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், செட்டிகுளம் பிரசே செயலகப் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் 1,070 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று வவுனியா பிரதேச செயலகப் பிரிவிலும் அவர்களுக்கு 455 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக 1,525 வீடுகள் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வவுனியா மாவட்டத்தில் பத்து வீத பாதிப்பையும் இனவிகிதாசாரத்தையும் கணக்கிலெடுக்காமலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளதற்கு மேற்கூறியவையே சான்றாக விளங்குகின்றது.
தாங்கள் எமது மக்களின் நிலையை உணர்ந்து, தேவை அறிந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். நீதி வேண்டி நிற்கும் எமக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago