2025 ஜூலை 12, சனிக்கிழமை

'ஜனாதிபதி, பிரதமர் இருவரும் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்ய வேண்டும்'

Gavitha   / 2015 மார்ச் 25 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தரப்பினர் இங்கு நேரில் விஜயம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆனபின்னரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இப்போதும் கூட மீளக்குடியேற்றப்படாமல் உள்ளனர். இராணுவம் காணிகளை ஆக்கிரமித்திருப்பதாலும் பொதுத்தேவைக்கென காணிகளை சுவீகரித்திருப்பதாலும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும் வாடகைப்பணம் செலுத்தியும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு, கேப்பாப்பிலவு, கொக்குளாய் கொக்குத்தொடுவாய் இப்பகுதிகளில் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்தக்காணிகளுக்கு உரித்துடைய மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகளாலும் பிரதேச செயலாளர்களினாலும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தும்  அப்பத்திரங்களை இரத்துச்செய்து இராணுவத்துக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.  

இங்கு வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் ராஜபக்ஷ  இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் யாரிடமிருந்து காணிகள் பறிக்கப்பட்டனவோ, அக்காணிகளுக்கு உரித்துடைய மக்களிடமே அவற்றை மீளவும் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தென் பகுதிகளை மையப்படுத்தியே நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறதே தவிர, நாம் அரசிடம் முன்வைத்த மீள்குடியேற்றம், கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீளவும் ஒப்படைத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, பலவந்தப்படுத்தப்பட்டு காணாமல் போனோரை கண்டறிதல், நிரந்தர அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை இவை எவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்காயிரம் பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது  மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும் சுனாமியாலும் இறுதிப்போரின் உக்கிரத்தாலும் மிக மேசமாக பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரசாங்கத்தரப்பினர் நேரில் விஜயம் செய்து மக்களின் அடிப்படை வாழ்வாதரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்றிலிருந்து உங்களுக்கு உரித்தாகும் காணிகளை, பொருளாதார ரீதியாகவும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என:று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .