2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரணைதீவு மக்கள் தொழில் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமாதா நகரில் வசிக்கும் இரணைதீவுப் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடத்துக்குச் சென்று மீள்குடியேறுவதற்கும் அங்கு தொழில் செய்வதற்கும் அனுமதி வழங்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இரணைதீவு பகுதியில் கடந்த 1992ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 183 கடற்தொழில் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இரணைதீவு கிராமத்தில் தேவாலயம் பாடசாலை, என்பனவும் இயங்கியது.

யுத்தம் காரணமாக கடந்த 1992ஆம் ஆண்டு இந்தக் கிரா மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேறும் போது, தமது மீன்பிடி வலைகள், படகுகள், வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்பட்ட கால்நடைகள் என அனைத்தையும் கைவிட்டே வெளியேறினர்.

அங்கிருந்து வெளியேறிய மக்கள் முழங்காவில் பகுதியிலுள்ள இரணைமாதாநகர் என்ற கிராமத்தில் குடியேறினர். தற்போது இரணைமாதா நகரில் 314 குடும்பங்கள் வசிக்கின்றனர். 23 வருடங்களாக இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் 220 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் நடைபெறுவதுடன், வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்தும் இந்தக் கிராமமக்கள் தங்கள் வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை செய்வதால், ஆகக்குறைந்தது தங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மட்டும் இரணைதீவுப் பகுதிக்கு சென்று வருவதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.

தொழில் செய்வதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறு அண்மையில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். அத்துடன், தொழில் செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுத்தருமாறு கோரி மாவட்டச் செயலகம் ஊடாகவும் மகஜர் அனுப்பியுள்ளனர்.

இரணைதீவைச் சேர்ந்த வயோதிபர்களே மீண்டும் தங்கள் சொந்தவூரில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன், மிகுதிப் பேர் அங்கு சென்று தொழில் செய்து வர அனுமதியளிக்குமாறு கோரியுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலர் சி.சத்தியசீலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .