2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

F1 பட்டம் வென்று ஐந்து நாட்களில் றொஸ்பேர்க் ஓய்வு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

உலகின் தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க், அதிர்ச்சிகரமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். அபு தாபியில் இடம்பெற்ற வருடத்தின் இறுதி கிரான்ட் பிறிக்ஸில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பட்டத்தைக் கைப்பற்றிய ஐந்து நாட்களில் தனது ஓய்வை றொஸ்பேர்க் அறிவித்துள்ளார்.

தான் தனது மலையில் ஏறியுள்ளதாகவும், தான் உயரத்தில் இருப்பதாகவும், எனவே இதுவே சரியான தருணமாக உணர்வதாக, தனது ஓய்வு அறிவிப்பின்போது 31 வயதான றொஸ்பேர்க் தெரிவித்திருந்தார். இது தவிர, தனது 25 ஆண்டுகால பந்தயத்தில், போர்மியுலா வண் உலக சம்பியனாவதே தனது கனவு, ஒரேயொரு விடயம் என மேலும் தெரிவித்திருந்தார். கடுமையான பணி, வலி, இழப்புகளில், போர்மியுலா வண் சம்பியனாவதே தனது இலக்கு என மேலும் தெரிவித்த றொஸ்பேர்க், தான் தற்போது அதை அடைந்துவிட்டதாகக் கூறினார்.

இந்நிலையில், ஓய்விலிருந்து மீண்டும் வருவதற்கான வாய்ப்பேதும் இருக்கின்றதா என வினவப்பட்டதுக்கு, இல்லை. நிச்சயமாக இல்லை. இத்துடன் முடிவு பெறுகிறது என றொஸ்பேர்க் கூறியிருந்தார்.

சர்வதேச விளையாட்டுகளில் பங்குபற்றுகின்ற வீரர்கள், அந்த விளையாட்டுகளுடனேயே வருடத்தின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடவேண்டியுள்ள நிலையில், அவர்கள் தமது குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிடுவது மிக அரிதானதொன்றாகவே நோக்கப்படுகிறது. இந்நிலையில், இளம் குடும்பத்தையுடைய றொஸ்பேர்க், மேற்கூறப்பாட்ட காரணத்தினால் உந்தப்பட்டு ஓய்வுபெறும் முடிவை எடுத்திருக்கலாம்.

மறுபக்கம், 2006ஆம் ஆண்டு பஹ்ரேய்ன் கிரான்ட் பிறிக்ஸில், வில்லியம்ஸ் அணியில் போர்மியுலா வண் அறிமுகத்தை மேற்கொண்ட றொஸ்பேர்க், 10 வருடங்களுக்குப் பிறகு 206 பந்தயங்களுக்குப் பின்னர் போர்மியுலா வண் பட்டத்தை வென்றிருந்தார். இப்பட்டத்தை வெல்லுவதற்கான போட்டியில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனிடமிருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்தார்.

ஆக, வெறும் ஐந்து புள்ளிகளினால் சம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட மூன்று தடவைகள் சம்பியனான ஹமில்டன், அடுத்த வருடம் மிகக் கடுமையான அழுத்தத்தை வழங்குவார் என றொஸ்பேர்க் எதிர்பார்த்திருக்கலாம். தவிர, மெர்சிடிஸ் அணியானது ஹமில்டன் பக்கம் சார்பானது போன்று றொஸ்பேர்க்குக்குத் தோன்றியிருக்கலாம். எனவே, இந்தக் காரணங்களினால் உந்தப்பட்டு, தனது ஓய்வு பெறும் முடிவை றொஸ்பேர்க் அறிவித்திருக்கலாம்.

இல்லாவிடின், தற்போதைய போர்மியுலா வண் சம்பியனாக இருந்துகொண்டு, அதுவும் மிகச் சிறந்த பெறுபேறுகளை வழங்கக்கூடிய கார்களைக் கொண்டிருக்கும் அணியிலிருந்துகொண்டு, அடுத்த வருட போர்மியுலா வண் சம்பியன் பட்டத்தை இலக்கு வைக்காமல் எந்தவொரு ஓட்டுநரும் சடுதியாக ஓய்வை அறிவிக்கமாட்டார். இவ்வருடத்தின் இறுதிப் பந்தயங்களில், கடுமையாக அழுத்தங்களை எதிர்கொள்வதாக வெளிப்படையாகவே றொஸ்பேர்க் தெரிவித்த நிலையில், நிச்சயமாக மேற்கூறப்பட்ட காரணம் ஓய்வில் தாக்கம் செலுத்தியிருக்கும்.

1982ஆம் ஆண்டு போர்மியுலா வண் சம்பியனான பின்லாந்தின் கெகே றொஸ்பேர்க்கின் மகனான நிக்கோ றொஸ்பேர்க், இயற்கையாகவே திறன் கொண்ட லூயிஸ் ஹமில்டன், பெர்ணான்டோ அலோன்ஸோ போன்றவர்கள் போன்று இல்லாவிட்டாலும், வெற்றிக்காக கடுமையாக உழைத்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டார்.

206 கிரான்ட் பிறிக்ஸ் பந்தயங்களில், தனது வாழ்நாளில் பங்குகொண்டுள்ள றொஸ்பேர்க், 23 பந்தயங்களில் வெற்றிபெற்றதுடன், 57 தடவைகள், முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .