2025 ஜூலை 17, வியாழக்கிழமை

​​தே.ம.ச உறுப்பினர்களை சந்தித்தார் கனடா தூதுவர்

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டி யெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (16) அன்று நடைபெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமைய உள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு கனடாவும் உதவி நல்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கும் என தூதுவர் பதிலளித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தை போல இல்லாமல் இந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள் என்றும், தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாக செயற்படுகின்றார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது. வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் வெற்றியளிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இலங்கைக்கான கனடா தூதுவர் தமது சேவைக்காலம் முடிவடைந்து இம்மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்காக தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X