2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

முக்கொலைச் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனை எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான பிரசாந்தன் (வயது 34) என்ற இச்சந்தேக நபர், கிராம மக்கள் அளித்த வாக்குமூலத்தை தொடர்;ந்து கடந்த ஞாhயிற்றுக்கிழமை (24)  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபரை கடந்த திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, அவரை 48 மணிநேரம் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (ஒன்றரை வயது) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சனிக்கிழமை நள்ளிரவைத் தாண்டி சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்து வீட்டுக்குள்; புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் கோடரியால் கொத்திக் கொலைசெய்து வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார்.

இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம், தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான சஸ்னிகாவினதும் அவலக் குரல் கேட்டு ஓடிவந்தபொழுது அவரையும் சந்தேக நபர் வெட்டியுள்ளார்.

வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தை கந்தையா பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி மரணமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் அறிந்துகொண்ட பொலிஸார், அவர் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது  கைது செய்திருந்தனர்.

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதென்று விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடைசியாக கடந்த வெள்ளியன்றும் (22) கணவன்-மனைவிக்கிடையிலான முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன், மனைவி ஆகியோர் அழைக்கப்பட்டு வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
கொல்லப்பட்ட குழந்தை தன்னுடையதல்ல என்றும் மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் என்றும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர், குடும்பத் தகராறு பற்றிய பொலிஸ் விசாரணையின் போது மனைவியிடம் தர்க்கம் புரிந்ததாக தெரியவருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .