2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கிழக்கு, மத்திய மாகாணங்களை மையப்படுத்திய செயற்றிட்டங்களை துரிதப்படுத்துமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தையும் மத்திய மாகாணத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு செயற்றிட்டங்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு  அமைவாக துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை, மட்டக்களப்பு, திருகோணமலையிலும் கண்டி மாவட்டத்தை முதன்மைப்படுத்தி மத்திய மாகாணத்திலும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வடிகாலமைப்பு  தொடர்பான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல், புதன்கிழமை (28) பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள அமைச்சரின்; அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு அவர்  பணித்துள்ளார்.

திகாமடுல்லையில்; கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை தேர்தல் தொகுதிகளில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு செயற்றிட்டங்களின் வரைபடங்களை பார்வையிட்டதோடு, அவை பற்றிய விளக்கங்களையும் உயர் அதிகாரிகளிடம்  அமைச்சார் கேட்டறிந்தார்.

வரட்சியாலும் வெள்ளப்பெருக்காலும் ஏற்படும் பாதிப்புகளை பற்றி சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வாக விசேட திட்டங்கள் தொடர்பில் பரிசீலிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.

அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில், மட்டக்களப்பு, காத்தான்குடி, மூதூர், கிண்ணியா, திருகோணமலை உட்பட ஏனைய நகர்ப்புறங்களில் புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ள செயல்றிட்டங்கள் பற்றியும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டம் பற்றி அதிகாரிகளுடனான அடுத்த கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படுமென்றும் அவர் கூறினார்.

நகர அபிவிருத்தி செயற்றிட்டங்களை பொறுத்தவரை பாரிய வேலைத்திட்டங்களுக்கு உலகவங்கி, பிரான்ஸ், அவுஸ்திரேலிய அரசாங்கங்களும் சிறியளவிலான செயற்றிட்டங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை, காணி ஒழுங்குபடுத்தல் கூட்டுத்தாபனம் என்பன நிதியை ஒதுக்கீடு செய்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நகர அபிவிருத்தி நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .