2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’காட்டிக்கொடுத்தோரை கூற விரும்பவில்லை’

Niroshini   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை  காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

'தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை' எனவும், அவர் கூறினார்.

யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என பொது வெளியில் பேசப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம்  முறையிட்டுள்ளதமாக கூறினார்.
அது தொடர்பில் தலைவர் விசாரிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கின்றார் எனவும், சித்தார்த்தன் தெரிவித்தார்.

தாங்கள் ஏதோ காட்டிக்கொடுத்தோம், துரோகம் செய்தோம் என்ற ரீதியிலே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், சுமந்திரனுடன் தாங்கள் பேசி, சில விடயங்களை சுமூகமாக தீர்த்திருப்பதாகவும் சிறீதரனை பொறுத்தவரை, அவர் இதனை அடிக்கடி கூறுவார் எனவும் அதேபோல தேர்தல் காலத்தில் மிகவும் கூடுதலாக கூறுவார் எனவும் சாடினார்.

'ஆனால், நெடுங்கேணியில் வைத்து, அப்பன், தெய்வீகன் என்ற இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை யார் காட்டிக் கொடுத்தார்கள், எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள், ஏன் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை பகிரங்கமாக நான் கூறினால், அது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நல்லதல்ல, தமிழரசுக் கட்சிக்கும் நல்லதல்ல. அடுத்ததாக அது நிச்சயமாக மக்களுக்கும் நல்லதல்ல. அத்துடன், இவ்வாறான விடயங்கள் 2009க்குப் பின்னர் கூட தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும் நல்லதல்ல' எனவும், அவர் தெரிவித்தார்.

தங்களை பொறுத்தவரை தாங்கள் காட்டிக் கொடுக்கவில்லை எனவும் எந்தக் காலத்திலும் காட்டிக் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்த சித்தார்த்தன், தங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறு ஆயுத குழுக்களுக்கும் இடையில் ஆயுத வழியில் போராட்டங்கள் இடம்பெற்றமை மக்கள் அனைவரும் அறிந்த விடயமே எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .