2023 ஜூன் 07, புதன்கிழமை

பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவிக்கும் மாணவர்கள்

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்துச் சேவைகள் இருந்தும் அவை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமையால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு திரும்பவும் மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களே இவ்வாறு வீதிகளில் தவிக்கின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக, வட மாகாண ஆளுநர், வட மாகாண போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் பரீட்சை நடைபெறும் இந்தக் காலப்பகுதியிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பஸ்கள் ஏற்றாமல் செல்வதால், வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது, இந்த விடயம் தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு பொலிஸார் கொண்டு சென்று, வட மாகாண போக்குவரத்துப் பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாறாக பருவகால சிட்டை பெற்ற பின்னர் பஸ்கள் ஏற்றிச் செல்லாமை அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில், பாடசாலையில் பரீட்சை நடைபெறுகின்ற நிலையில், இன்று (13) காலை 8.12 மணி வரை மாணவர்களை எந்த பஸ்களும் ஏற்றாமல் சென்ற நிலையில், மாணவர்கள் தவித்து நின்றனர்.

இதனையடுத்து, மாங்குளம் போக்குவரத்து பொலிஸார் அழைக்கப்பட்டு, மாணவர்கள் பஸ்களில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் நடத்துநர் கூட பொலிஸாருடன் வாக்குவாதம் பட்டே பஸ்லில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற அதேவேளை, குறித்த விடயங்களை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துச் சென்றார்.

தொடரும் இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் ஏ9 வீதியை மூடி, மாபெரும் போராட்டம் மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .