2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

கல்லுடைக்கும் ஆலைக்கு அனுமதி வழங்கவேண்டாம் மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எஸ்.குகன்


புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள கல்லுடைக்கும் ஆலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை முன்வைத்து அந்தப்பிரதேச பொதுமக்கள் மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் மகஜரொன்றை புதன்கிழமை (04) கையளித்தனர்.


அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டமைக்கமைய சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் தீங்கை ஏற்படுத்தி வந்த புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் மூடப்பட்டிருக்கும் கல்லுடைக்கும் ஆலையை மக்களினதும் விவசாய நிலங்களின் நலன் கருதியும் மீண்டும் இயங்குவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு கோரியே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.


அம் மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியில் மூன்று கல்லுடைக்கும் ஆலைகள் இயங்குவதால், இந்த கிராமத்திலுள்ள குடியிருப்புக்கள், தோட்ட நிலங்கள், கால்நடைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. பிரதேச மக்களின் எதிர்ப்பினால் கடந்த மூன்று வருடங்களாக மூடப்பட்டிருக்கும் ஆலையை, மீளவும் இயங்க வைப்பதற்கான முயற்சியில் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.


இந்த ஆலையில் இருந்து வெளியேறும் தூசிகள் சுமார் 500 மீற்றர் வரை படர்வதால், உணவு, கிணற்று நீர் முற்றாக மாசடைகின்றன. இரவு நேரங்களிலும் தொடர்ந்து இயங்குவதனால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அநேகமானவர்கள் அஸ்மா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நூறு நாள் வேலைத்திட்டத்தில் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமாக குறிப்பிடப்பட்டதற்கு இணங்க, இயங்காமலுள்ள ஆலையை நிரந்தரமாக மூடவும், இயங்கிக்கொண்டிருக்கும் ஏனைய இரு ஆலைகளையும் குடியிருப்புக்கள் இல்லாத இடங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .