2023 ஜூன் 07, புதன்கிழமை

அற்புத சிங்கம்... உண்மையில் ஓர் அற்புதமே!

Editorial   / 2018 மே 01 , மு.ப. 10:13 - 1     - {{hitsCtrl.values.hits}}

இன்று மே மாதம் முதலாம் திகதி, பல‌ருக்கு தொழிலாளர் தினம், சிலருக்கு தம் அபிமான நடிகர் 'தல' அஜீத் பிறந்த தினம். இப்படிப் பலருக்கு பல பெருமைகள், இத்தினத்தில் இருந்து வந்தாலும், இலங்கை மண்ணிலும் இத்தினத்தின் பெயர் சொல்ல, உயரிய ஓர் ஓவியக்கலைஞர் பிறந்திருக்கின்றார். அவர் பெயர், அற்புத சிங்கம் முருகன். அவருக்கு இன்று வயது 76.

அவர் தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகிறார். தாம் சென்ற இடமெல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனும் நோக்கில், நியூசிலாந்து தமிழ்க் கலை இலக்கிய வட்டம் எனும் அமைப்புடன் இணைந்து, இன்றும் உயிர்ப்புடன் தமிழன்னைக்குத் தன்னாலானதை செய்து வருகின்றார், அற்புத சிங்கம் அவர்கள்.

வாரா வாரம் ஒக்லன்டில், தமிழில் ஒலிக்கும் வானொலி நிகழ்ச்சியொன்றை, இவர் தொடர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியிலும் நடத்தி வருவதானது, இவர் செய்து வரும் பணிகளில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு விடயமாகும். அது மட்டுமல்லாது, இவர் ஓவியத்துறையில் கை தேர்ந்தவர்.

இலங்கையில் 'டிஜிட்டல் பிளக்ஸ்' போர்டுகள் வருவதற்கு முற்பட்ட காலங்களில், கைகளால் வரையும் 'கட் அவுட்' ரக ஓவியங்களே, மிக பிரபலமானவையாகும். திரைப்பட விளம்பரங்களாகட்டும், விளம்பரப் பலகைகளாகட்டும் அல்லது இன்னோரன்ன அச்சு வேலைகளுக்கான‌ கை ஓவியங்களாகட்டும், “கூப்பிடு அற்புத சிங்கத்தை” என்ற வகையில், மிகப்பிரபலமாக பேசப்பட்ட ஓவியர்களில் ஒருவரே இந்த அற்புத சிங்கமாவார்.

தற்போதும் நியூசிலாந்தில் நடைபெரும் பல கலை, இலக்கிய நிகழ்வுகளில் மேடை அலங்காரங்களில், இவரது பங்களிப்பைக் காணலாம். இவரது மேடை அலங்காரங்களின்றி ஒக்லன்டில் அரங்கேற்றங்களே இல்லை எனும் அளவுக்கு, தம் கைவண்ணத்தால் கலை உலகை கட்டி வைத்திருக்கின்றார் அற்புத சிங்கம்.

கலைஞர்கள் வாழும் போதே வாழ்த்தப்படுவதும், அவர்கள் செய்யும் சேவைகள் அவர் வாழும் காலத்திலேயே போற்றப்படுதலும் வேண்டும். அதுவே நாம் நல்ல கலைஞர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். அந்த வகையில் அற்புத சிங்கம் முருகன்,  நீடிய ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.


You May Also Like

  Comments - 1

  • கொலின் சிந்து Saturday, 12 May 2018 09:16 AM

    இப்படி ஒரு மாமா கிடைச்சது எங்களுக்கு பெருமையாக உள்ளது. வாழ்க தமிழ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .