2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

’​அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’

Niroshini   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், “அதன் ஊடாகவே, அவருடைய இரண்டு பிள்ளைகளும், பிள்ளைகளோடு பிள்ளைகளாக வாழ்வார்கள்” என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஆயுள் தண்டனைக் கைதியாக கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கிளிநொச்சி- மருதநக​ரைச் சேர்ந்த ஆனந்த சுதாகர் என்பவரின் மனைவி, சுகயீனம் காரணமாக கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

“அவரது இறுதிக் கிரியைகள் கிளிநொச்சி, மருதநகர் கிராமத்தில் கடந்த 18ஆம் நடைபெற்றதுடன், அதில் கலந்துகொள்வதற்காக, ஆனந்த சுதாகர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டிருந்தார்.

“மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்கு அவருக்கு 3 மணித்தியாலங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்து.

“இறுதிக் கிரியைகள் முடிந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஆனந்த சுதாகர் ஏறச் சென்ற வேளை, அவரது மகளும் தந்தையின் கையைப் பிடித்தவாறு பஸ்ஸினுள் ஏறியுள்ளார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2008ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

“இந்நிலையில், ஜனாதிபதி ​நினைத்தால் மட்டுமே, அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கமுடியும். அவ்வாறு பொதுமன்னிப்பின் கீழ் ஆனந்த சுதாகர் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே, அவருடை இரண்டு பிள்ளைகளும் பிள்ளைகளுடன் பிள்ளைகளாக இருப்பர்.

“எனவே, இப்பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி, அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதை ஜனாதிபதிக்கு அனுப்பவும் அவரது பிள்ளைகளை, ஜனாதிபதியைச் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

நிகழ்வுகளில் பங்கேற்றும் ஜனாதிபதி அங்குவரும் சிறார்களிடம் அன்போடு பழகுவார். எனவே, இந்த இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசித்து தாமதமின்றி பொதுமன்னிப்பை வழங்கும் முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும்' என்றார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X