2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

யுகதனவி விவகாரம் டிசெ. 16இல் பரிசீலனை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 30 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு, உயர்நீதிமன்றம், நேற்று (29) தீர்மானித்தது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே டிசெம்பர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர், ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுதாரர்கள், எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் 13ஆம் திகதி வரை அவகாசம் வழங்கியது.மேலும், அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தனிப்பட்ட சட்டத்தரணிகளை தக்கவைத்துக் கொண்டமையால் அவர்கள் சார்பில், சட்டமா அதிபர் ஆஜராகமாட்டார் என மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹதுன்னெத்தி மற்றும் வசந்த சமரசிங்க, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோரே அடிப்படை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்கள், கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறே பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை, நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி, வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவேட்) லிமிடெட், இலங்கை மின்சார சபை, சட்டமா அதிபர் மற்றும் பலரை மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தங்களுக்குத் தெரிந்தவரை, வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பான பங்கு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் இன்றுவரை அமைச்சரவையில் முன் வைக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையம், குழாய்கள் அமைத்தல் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை ஒரே
ஒரு கோரப்படாத முன்மொழிவில் தொகுத்து, வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு,
வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றாமல் வழங்குவது தேசிய எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று மனுதாரர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .