2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

‘ஒருதொகை தடுப்பூசிகளை மேலும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்’

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19க்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும் இலங்கை உட்பட உலக நாடுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் கொவக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ், இந்த உதவி வழங்கப்படும் என்றும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று (02) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

விசேடமாக எதிகாலத்தில் நாட்டின் எரிசக்தித் துறையில் அமெரிக்காவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக, அந்நாட்டுத் தூதுவர் இங்கு
சுட்டிக்காட்டினார்.

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள பேரழிவைத் தரும் கொவிட் தொற்றுநோய் மத்தியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா.பி.டெப்லிட்ஸ் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X