2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

'புதிய ஊடகவியலாளர்களிடம் வாசிப்பு என்பது இல்லை'

Kogilavani   / 2012 மே 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பெரும்பாலான புதிய ஊடகவியலாளர்கள் ஊடகவியல் கல்லூரிக்கு செல்கின்றனர். ஊடக கல்வியை கற்கின்றனர். அப்படியே கற்றாலும் கூட அவர்களுக்கு தேடல் முயற்சி என்பது குறைவாகவே உள்ளது. எப்படியாயினும் சான்றிதழை பெற்றுக்கொண்டு ஊடகத்துறையில் தொழிலை பெற்றுக்கொண்டால் போதுமென நினைக்கின்றனர். இவர்களிடம் வாசிப்பு என்பது முழுமையாக இல்லை' என்கிறார் மூத்த ஊடகவியலாளரும் கலைஞருமான கே.எஸ்.சிவகுமாரன்.

ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கிய, இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையின் வெளியீடாக இதுவரை 19 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1953 களில் தனது எழுத்துப்பணியை ஆரம்பித்த இவர் இதுவரை தமது பணியை செவ்வனே செய்துக்கொண்டு வருகின்றார்.

வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது, தமிழ் நாடு அரச விருது, இலக்கிய நூல் சுவை விருது, ஆய்வு இலக்கிய விருது, மக்கள் சமாதான இலக்கிய மன்ற விருது என்பன இவரின் திறமைக்கு கிடைக்கப்பெற்ற விருதுகள்.

ஆங்கில புலமையை பறைசாற்றும் வகையில் இவருக்கு கடல் கடந்து பணி செய்யும் சூழல் ஏற்பட அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

இவரை தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்ட போது அவர் கூறிய கருத்துக்கள்...


கேள்வி:- ஊடகத்துறையில் இருந்தபோது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறுங்கள்...


பதில்:- ஊடகத்துறையில் கால்பதிக்கும்போது புதியவராகத்தான் ஈடுபடுகின்றோம். இந்தத் துறையில் பல பரிமாணங்களை அறிந்துகொள்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை அறிந்துக்கொண்டு தேர்ச்சி பெற முயலும்போது அதில் பல நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பத்திரிகை, வானொலி என சில ஊடகங்களில் பலவருடங்கள் கடமையாற்றியுள்ளேன்.

இந்தத் துறைக்கு உள்வாங்கப்படுவதற்கு முன்பாகவே இத்துறைசார்ந்து அதிகமான தேடல்களை தொடங்கி அறிவுசார்ந்த பல விடயங்களை பெற்றுக் கொண்டதால் ஊடகத்துறை அவ்வளவு கடினமானதாக தெரியவில்லை. இதில் நேரிடும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்த அறிதல் முன்கூட்டியே இருந்தது.

1966இல் வானொலி வர்த்தக சேவையில் ஓர் அறிவிப்பாளனாக இருந்தேன். இந்த அறிவிப்புத்துறைக்கு வருவதற்காக பத்து தடவைகள் முயற்சி செய்தேன். பத்தாவது முறையே எனது முயற்சிக்கான பலன் கிட்டியது. என்னுடன் சேர்த்து 5 பேரை தேர்ந்தெடுத்தனர்.

அதேபோல் தொலைக்காட்சியில் சேர்ந்தபோது 'ஊர்கோலம்' எனும் நிகழ்ச்சியை செய்வதற்கான வாய்ப்பு கிட்டியது. இலங்கை முழுதும் நடக்கும் கலை நிகழ்வுகளை தொகுத்து வழங்குவது. இதேபோல் ரூபவாஹினியில் வேலை செய்யும்போது ஒளிபரப்பு சார்ந்த அறிவும் துணை செய்தது. சினிமா துறையில் அதீத ஈடுபாடு இருந்ததால் அதுசார்ந்த பயிற்சிகளை பெற்றிருந்தேன். இதனால் கமெரா முன்தோன்றுவதற்கு வெட்கப்படவில்லை.  

எடுத்த எடுப்பில் சென்று ஊடகத்துறையில் கால்பதிக்காமல் அதற்கான முன் ஆயத்தங்களை செய்துகொண்டு ஊடகத்துறைக்கு சென்றதால் பாரிய சவால்களை எதிர்கொள்ளவில்லையென்றே கூறவேண்டும். ஒரு துறையில் ஈடுப்படவேண்டுமானால் அதற்கு முன்கூட்டியே தயார்படுத்தலில் ஈடுப்படவேண்டும்.

கேள்வி:- ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் எழுத்துத் துறையை வளர்ப்பதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து கூறுவீர்களா?

பதில்:- இதழியல் எனும்போது முதன்முதலில் 'த ஐலன்ட்' என்ற ஆங்கில பத்திரிகையிலே கடமையாற்றினேன். எனது எழுத்துக்களை ஏற்கனவே நன்கு வாசித்திருந்த ஆசிரியர்கள் விவரண பகுதிக்கான ஆசிரியர் பதவியை எனக்கு வழங்கினர்.

இந்தப் பகுதியில் தமிழ் சார்ந்த கலைகளை மட்டும் தெரிவு செய்யாமல் சிங்கள மொழி சார்ந்த கலைகளையும் சிங்கள கலைஞர்களையும் நேர்காணல் செய்து பத்திரிகையில் பிரசுரித்தேன்.

இதைவிட 'கலாசாரம்' (Culture) என்ற ஒரு பக்கத்தையும் பொறுப்பேற்று செய்தேன். இதில் மும்மொழிசார்ந்த கலை விடயங்களையும் பிரசுரித்தேன். இவ்வாறு செய்யும்போது ஓர் ஈடுபாடு வரும். இந்த ஈடுபாடு வரும்போது அது தொடர்பாக மேலும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

கேள்வி:- ஊடகத்துறையையும் எழுத்துத் துறையையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?


பதில்:- எழுத்துத்துறைக்கு கற்பனையும் ஓய்வு நேரமும் வேண்டும். அவசரகோலத்தில் தயாரிக்கும் இலக்கியம்தான் ஊடகத்துறை. ஊடகத்தில் சுடச்சுட செய்திகளை தரும் அதேவேளை, பகுப்பாய்வு செய்ய கூடியவராகவும் இருக்க வேண்டும். ஊடகத்துறைக்கு வரும் எழுத்தாளர்கள் அதில் தம்மை ஒன்றித்துவிடுவதனால் ஆக்க இலக்கியம் சார்ந்து நேரத்தை செலவிடுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

கேள்வி:- தற்போது வெளிவரும் நாளிதழ்களில் எழுத்துத் துறைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கங்கள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:- என்னுடைய அபிப்பிராயம் அவ்வளவு மகிழ்ச்சியை தராது. பத்திரிகை ஆசிரியர்களுக்கு இந்த இலக்கியங்கள் குறித்து அவ்வளவு அக்கறையில்லை. அவர்களுக்கு அரசியல் சார்ந்தே அதிகமாக அக்கறையிருக்கும். வாராந்த பத்திரிகைகளை எடுத்து பார்த்தால் அதில் முற்றுமுழுதாக விளம்பரங்களையே காணமுடியும். இதனை தவிர அரசியலுக்கு பாதி பக்கங்கள், அதன்பின் பத்தி எழுத்துக்கென ஓர் இரு பக்கங்கள், சினிமாவுக்கு இரண்டு பக்கங்கள். இவற்றுடன் சேர்த்து இலக்கிய பக்கம்.

இலக்கிய பக்கங்களை மிக செம்மையாக செய்வதற்கான ஆளணி என்பது குறைவாகவே உள்ளது. பெரும்பாலான புதிய ஊடகவியலாளர்கள் ஊடகவியல் கல்லூரிக்கு செல்கின்றனர். ஊடக கல்வியை கற்கின்றனர். அப்படியே கற்றாலும் கூட அவர்களுக்கு தேடல் முயற்சி என்பது குறைவாகவே உள்ளது. எப்படியாயினும் சான்றிதழை பெற்றுக்கொண்டு ஊடகத்துறையில் தொழிலை பெற்றுக்கொண்டால் போதுமென நினைக்கின்றனர். இவர்களிடம் வாசிப்பு என்பது முழுமையாக இல்லை.

ஆனால், முன்னர் தேடுதல் முயற்சி என்பது இருந்தது. இதனால் இலக்கிய பக்கங்கள் தரமானதாக வெளிவந்தன. அவர்களே சிறந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இருந்தனர். நான் 1994 -1995 காலப்பகுதியில் வீரகேசரியில் ஊடகவியலாளனாக கடமையாற்றியபோது 'பண்பாடு' என்ற ஓர் இலக்கிய பக்கத்தை செய்தேன், இதேபோல்தான் 'த ஐலன்ட்' இல் இருக்கும்போது கலாசாரம் என்ற பக்கத்தை செய்தேன். இவற்றில் கலைஞர்களை நேர்காணல் செய்தல், இலக்கிய செய்திகள், திறனாய்வு, உலகளாவிய ரீதியில் நாங்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளோம் என்று ஒப்பிடுதல், கருத்துக்கள் என்ற பல விடயங்களை இப்பகுதிகளில் பிரசுரித்தேன். ஆனால் தற்போது வெளிவரும் நாளிதழ்களில் இவ்விடயங்கள் குறைந்துபோய்விட்டன.

இப்போது வெளிவரும் நாளிதழ்களில் இலக்கிய பக்கங்கள் இருந்தாலும் அரசியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றிற்கு வழங்குவது குறைவாக உள்ளது. இலக்கிய பக்கங்களை செய்வதற்கு ஊடகவியலாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

தற்போது ஊடகத்துறையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான தேர்வுக் குழுவில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். இதில் அதிகமான விளையாட்டுக் கட்டுரைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கட்டுரைகள் ஆழமான பகுத்தறி செய்திகளாக இல்லை. ஆங்கிலத்தில் வரும் விடயங்களை மொழிபெயர்த்து போடுகின்றார்கள். ஒரு சுயமாக சிந்திக்கும் எண்ணமென்பது இல்லை.


கேள்வி:- தற்போதைய வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?


பதில்:- தற்போது உலகமானது மாற்றமுற்றுக்கொண்டு வருகின்றது. பெறுமதிகள் மாறுகின்றன.  பெறுமதிகள் மாறினால் அதனை சொல்லும் முறைமைகளிலும் மாற்றத்தை காணலாம். மாற்றங்கள் தேவைதான். அந்த மாற்றங்களையும் ஒரு செய்நேர்த்தியாக செய்யலாம். இலங்கையில் உள்ள வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் பொழுதுபோக்குசார் அம்சங்களை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு சுயத்தன்மை காணப்படவில்லை.

இந்தியாவின் தமிழ்நாட்டில் காணப்படும் தொலைக்காட்சிகளின் செயற்பாடுகளையே இவர்களும் பின்பற்ற முயலுகின்றனர். அதனால் அது ஒரு செயற்கை தன்மையாக காணப்படுகின்றது. ஓர் இயல்பு நிலையை காணமுடியாது. அதேபோல் பேச்சு வழக்க பண்பாடு. சொற்பிரயோகங்களின் தேடல்களை இவர்களது உரையாடல்களில் காணமுடியாது.

வானொலியை எடுத்துக்கொண்டால் விளம்பரத்திற்கு இடம்கொடுக்க வேண்டும் என்பதற்காக பெயர்களை வாசிக்கும்பொழுது கடகடவென வாசித்து செல்வார்கள். வேகமாக வாசித்தாலும் தெளிவாக வாசிக்கலாம். அவ்வாறு தெளிவாக வாசிப்பவர்கள் மிகக் குறைவு. ஆண்கள் பரவாயில்லை. பெண்களின் குரல் வளம் குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்காது. ஆனால் அவருக்கு பின் நின்று விளக்கமளிக்கும் பெண்ணின் குரலில் ஒரு தெளிவு இருக்கும்.

இலங்கை வானொலியில் பணியாற்றுபவர்கள் பீ.எச்.அப்துல் ஹமீதின் குரலை போல் பேசுவதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் குரலில் மயக்குவதாக எண்ணிக்கொண்டு தங்களது குரலில் தாங்கள் மயங்கிக்கொண்டு சொல்ல வந்த விடயங்களை விட்டுவிடுகின்றனர். இது ஒரு குறைப்பாடாக உள்ளது. பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகள் இன்னும் வளரவேண்டிய தேவை உள்ளது.

தற்போதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான் சிறப்பாக உள்ளது.

இனிவரும் காலங்களில் தொலைக்காட்சிக்கோ அல்லது வானொலிக்கோ அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படாது. இலத்திரனியல் உபகரணங்களின் வருகையே அதிகமானவர்களால் பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்படும்.


கேள்வி: நீங்கள் ஒரு திறனாய்வாளர் என்ற முறையில் திறனாய்வாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறுவீர்களா?


பதில்:- விமர்சனத்திலும் பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. பல்கலைக்கழக மட்டத்திலுள்ளவர்கள் குறிப்பிட்ட நடையில் எழுதுவார்கள். இவர்களே சிறந்த திறனாய்வாளர்களாக கருதப்படுவார்கள். கைலாசபதி, சிவத்தம்பி இவர்கள் எழுதியது ஒருவகை. ஜனரஞ்சக தன்மையில் எழுதுவது மற்றுமொரு வகை. இவற்றை தவிர்ந்து இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் எழுதுபவர்களும் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஆழமான விதத்தில் எழுதுவதற்கு அதிகமானவர்கள் உள்ளதால் சாதாரண மக்கள் குறிப்பாக மாணவர்களின் நிலையை உயர்த்துவதற்காக சிக்கலான விடயங்களையும் இலகுபடுத்தி கூறுவதற்கு முற்படுகின்றேன்.

அதனால் நான் பத்தி என்ற வடிவத்தை கையாளுகின்றேன். என்னையும் விமர்சகர் என்கின்றார்கள். எனக்கு விமர்சனம் என்ற சொல் பிடிப்பதில்லை. இரண்டும் ஒரு கருத்தையே கூறுகின்றன. திறனாய்வு என்பது தமிழ்சொல், விமர்சனம் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் இங்குள்ளவர்கள் விமர்சனம் என்றால் கண்டிப்பு என்று நினைக்கின்றார்கள். எடுத்த எடுப்பில் ஆட்களை கிழித்துவிட்டால் போதும் என நினைக்கின்றனர். அது அல்ல விமர்சனம். நல்லது, கெட்டது எது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன். சிலர் என்னுடைய விமர்சனமானது ஆழமில்லை. மேலோட்டமாக எழுதுவதாக கூறுகின்றனர். வேறுசிலர் மேலோட்டமாக எழுதினாலும் உள்ளுக்குள்ளே ஆழம் இருப்பதாக கூறுகின்றனர். சுருங்கச் சொல்லி விழங்க வைத்தல், கூறியதை கூறலை தவிர்த்தல் இவையெல்லாம் நல்ல எழுத்துக்கு அடையாளம். அதனால் நானும் அப்படித்தான் எழுதுகிறேன்.

அதிகமாக எழுதினால் வாசிக்கமாட்டார்கள். சிறிதளவில் எழுதினால் அதனை வாசிப்பவர்கள் பயனடைவார்கள்.


கேள்வி: இளம் கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள் வழிகாட்டியாக அமைவதில்லை என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் நிலவி வருகின்றது. இதுக் குறித்து கூறுங்கள்?


பதில்:- இது இரு வழிப்பாதை. ஒரு வழிப்பாதையல்ல. இளையோர்களும் விரும்பி வந்து கேட்க வேண்டும். அவர்கள் கேட்பதில்லை. நாங்கள் யார்? பழைய டச்சுக் காரர் என்று புறக்கணித்து செல்கின்றனர். நான் ஆசிரியராக இருந்தபோது இந்த விடயங்களை எனது மாணவர்களுக் கற்றுக்கொடுத்துள்ளேன். சிலர் இதனை ஆச்சரியத்துடனும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரை இளையவர்கள் யாரும் என்னை அணுகியதில்லை. அவர்கள் வந்து கேட்டால் நான் அதனை சொல்லலாம்.

கேள்வி:- எழுத்துத் துறையில் நீடிக்க வேண்டுமானால் காலம் கடந்து சிந்திக்க வேண்டும் என்பார்கள். உங்களது பார்வையில் இந்தக் கருத்துக் குறித்து கூறுமுடியுமா?

பதில்:- ஆரம்பக் காலத்தில் ஒரு முதிர்ச்சியான பார்வை இல்லை. முதிர்ச்சி என்பது நினைத்தவுடன் வருவதில்லை. சடுதி சடுதியாகவே வரும். இதன்போது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை வரும். நாம் என்ன செய்ய வேண்டுமென்று எமக்குள்ளே ஒரு திட்டம் இருக்கும். 5 வருட திட்டம், 10 வருட திட்டம் என இப்படியான திட்டங்களை அடைவதற்கு உழைக்கும்போது ஒரு முதிர்ச்சி வரும்.


கேள்வி:- ஒரு படைப்பாளரின் கடமையாக நீங்கள் கருதுவது எதனை?

பதில்:-  எல்லோராலும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. இலங்கையில், 1950-1980 வரையான காலப்பகுதியில் ஒரே வாய்ப்பாடான கதைகள்தான் படைக்கப்பட்டது. சாதியம், இனப்பிரச்சினை, ஏற்றத்தாழ்வு இவற்றை கருவாகக் கொண்டே அநேகமான படைப்புகள் படைக்கப்பட்டன. சிறுகதை என்றால் ஒரு கலை இருக்கின்றது. சிறுகதையில் உள்ளடக்கமே பார்க்கப்படுகின்றது. உள்ளடக்கத்தை பார்க்கும்போது அது அனைவராலும் பாராட்டப்படுகின்றது. உருவத்தை கைவிட்டுவிடுவார்கள். இவ்வாறு உருவத்தை கைவிடும்போது அதில் கலைநயம் இல்லாமல் போகின்றது.

இந்தியாவில் கலைநயமாக எழுதுகிறார்கள். இலங்கையில் இதுதான் வாய்ப்பாடு. ஆனால் 80களுக்கு பிற்பாடு படைப்புகளில் மாறுதல் ஏற்பட தொடங்கியது. எழுத்தாளரின் நோக்கம் சமூகத்தை பிரதிபலிப்பதும் சமூகத்தை மாற்றுவதற்கும் உதவவேண்டுமென்பது மார்க்ஸிய கொள்கை. பெரும்பாலான இலங்கை எழுத்தாளர்கள் மார்க்ஸிய வாதிகள். ஆனால் இவர்கள் உண்மையில் மார்க்ஸிய வாதிகளா இல்லையா என்பது தெரியாது.

கேள்வி:- வலைப்பதிவுகளின் ஆதிக்கம் நிலவும் இச்சூழலில் வாசிப்பு என்பது அல்லது புத்தக வெளியீடு என்பது சாத்தியமானதா?

பதில்:- பெரும்பாலானவர்கள் தற்போது இணையத்தளங்களை பயன்படுத்துகின்றனர். பத்திரிகையென்றால் குறிப்பிட்ட வகையிலே எழுத முடியும். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கப்படாது. இணையத்தளங்களை பொறுத்தவரை நாமே தனிக்காட்டு ராஜா. ஆக்க இலக்கியங்களை பதிவு செய்து விடலாம். மற்றுமொரு முக்கிய விடயம் நூலகங்களை எரித்தாலும்கூட இணையத்தளங்கள் அதனை செய்ய முடியாது. அனைத்தையும் பதிவு செய்துகொள்ளலாம்.

இலத்திரனியல் புத்தகங்கள் இருந்தாலும் கூட அதனை வாசிப்பவர்கள் குறைவு. ஏனென்றால் எல்லோரிடமும் இணையத்தள வசதிகள் இல்லை. இத்தகையதொரு சூழலில் புத்தக வெளியீடு என்பது அவசியமாகின்றது. இதேவேளை, நூல் வெளியீடுகள் குறித்த செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகும்போது அதனை தேடிச் சென்று வாங்குவதற்குரிய சூழலை இணையத்தளங்கள் ஏற்படுத்திக்கொடுக்கின்றன.


கேள்வி:- உங்களை ஊடகவியலாளராகவா? அல்லது எழுத்தாளராகவா? நிலைநாட்டிக்கொள்ள விரும்புகின்றீர்கள்?


பதில்:- நான் ஒரு சாதாரண மனிதப் பிறவி. என்னுடைய நோக்கம் மனுக் குலத்திற்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும். அந்தத் தொண்டை எழுத்துமூலமாக செய்ய நினைக்கிறேன். மற்றையவர்களுக்கு எனது சிற்றறிவை பயன்படுத்தி வித்தியாசமான, புதிய விடங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:-நிஷால் பதுகே


  Comments - 0

 • ramasamy ramesh Wednesday, 16 May 2012 04:26 AM

  நன்றாகவும் ஆளுமையான வார்த்தைகளாகவும் உள்ளன.

  Reply : 0       0

  pathma Tuesday, 22 May 2012 06:46 PM

  நல்ல கேள்விகள். அருமையான ஆரோக்கியமான பதில்கள்

  Reply : 0       0

  S.F.Rajedran Tuesday, 26 June 2012 06:55 AM

  மிகவும் ஆழமான பதில்கள்.

  Reply : 0       0

  Thiru, canada Wednesday, 27 June 2012 12:02 PM

  நேர்மையான செவ்வி. பாராட்டுக்கள்.

  Reply : 0       0

  vathane Sunday, 08 July 2012 05:09 PM

  மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது.

  Reply : 0       0

  கலைமகன் பைரூஸ் Sunday, 30 September 2012 05:05 PM

  கேள்வியும் சிறப்பு, அதற்கான ஆளுமைமிக்க பதில்களும் சிறப்பு! கே.எஸ். சிவகுமாரன் சாருக்கு எனது பாராட்டுக்கள்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .