2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

'மனோரீதியானதே நடனம், அவயவங்களை அசைப்பதல்ல': திவ்யா

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நடனம் என்பது மனோரீதியானது, அவயவங்களை அசைப்பதல்ல என்ற விழிப்புணர்ச்சியை மாணவர்களிடத்தே வழங்கி அவர்களது மனோரீதியான மாற்றங்களுக்கு இடமளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே உறவு கட்டமைக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறார் நடன ஆற்றுகை கலைஞர் திவ்யா சிவநேஷன்.

அபிநயஷேத்ரா நடனப் பள்ளியின் இயக்குநராக விளங்கும் திவ்யா சிவநேஷன், பரதம், மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, கவிதை என பல துறைகளிலும் தமது திறமையை பறைசாற்றி தனக்கே உரித்தான பாராட்டுதல்களையும் பரிசில்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை, இந்தியா (சென்னை) என தனது கலைசார் கற்கைகளை மேற்கொண்ட இவர் 6 வயதில் நடனத்துறையில் கால் பதித்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா சுரேஷ் மஹாதேவன், திருமதி நளாயினி ராஜதுரை, திருமதி ஷாமிலா ராஜதுரை முதலியோரிடம் முறைப்படி நடனம் பயின்ற திவ்யா மேலதிக கற்றலை சென்னையில், விரிவுரையாளர் சி.வி.சந்திரசேகரனிடம் தொடர்ந்துள்ளார்.

இவரது திறமைக்கான வெகுமதிகளாக 'பரத கலாவித்தகர்', 'மிருதங்க கலாவித்தகர்',  'நம் நாட்டின் சிறந்த நடன பயிற்றுவிப்பாளர்' (2010) ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திவ்யாவை தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை...


கேள்வி:- நடனத்துறையில் கால் பதித்தநாள் முதல் இதுவரை நீங்கள் நடனத்துறைக்கென ஆற்றிய பங்களிப்புகள் குறித்து கூற முடியுமா?


பதில்:- நடனத்துறையில் எனது பங்களிப்பு என்றால் நான் மேற்கொண்ட நடன நிகழ்வுகள்தான். இதுவரை 200 இற்கும் மேற்பட்ட நடன நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளேன். அருஸ்ரீ கலையகத்தின் ஏற்பாட்டில் 2006ஆம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற நடன நிகழ்வு, நாடாளுமன்றம், அலரிமாளிகை போன்ற இடங்களில் இந்துகலாசார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்படும் நவராத்திரி போன்ற நிகழ்வுகள், கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெற்ற நடன நிகழ்வுகள், இவற்றைத் தவிர நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற பல மேடை நிகழ்வுகள், நிருத்தக்கிரியா, ரசானுபவ, ஆத்ம நிவேதனம், சிவ ஸ்மரணம், மகிஷாசுரமர்த்தினி, நிருத்யாபிஷேகம், நர்த்தன ஸ்ருங்காரம், திரிகலாக்கவி, ஜதிலயஈஸ்வரானந்தம் என்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய நடன நிகழ்வுகளில் பங்குப்பற்றியுள்ளேன்.

'அபிநயஷேத்ரா' என்ற நடன பள்ளியை ஆரம்பித்து நான் கற்ற பரதக் கல்வியை எதிர்கால சந்ததிக்கு வழங்கிவருகின்றேன். 2010, 2011ஆம் ஆண்டுகளில் என்னுடைய மாணவிகள் இருவர் அரங்கேற்றம் செய்துள்ளனர். இவை நான் நடனத்துறைக்கு ஆற்றும் பங்களிப்புக்கள் என்று கூறலாம்.

கேள்வி:- ஒவ்வொரு துறையிலும் போட்டி நிகழும் சூழலில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- சவால்கள் என்று எதனையும் பார்ப்பதில்லை. சவால்கள் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் உள்ளது. சவால்களை சாதனையாக்கி வரமாக்குவது நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் உள்ளது. சிறந்த ஒரு மகா குருவிடம் அன்போடு கற்ற அளப்பரிய வித்தையின் புனிதம் பேணி அடுத்த தலைமுறைக்கு இறை சிந்தையுடன் வழங்கி மகிழ்வது மட்டுமே எனது ஆவல். குருவின் ஆசிர்வாதமும், சிவனின் அனுக்கிரகமும் இருக்கும்போது சவால்கள் என்பது ஒரு பொருட்டல்ல.

என்னை நோக்கி வரும் மாணவ செல்வங்களிடம் நான் கற்ற வித்தையை, ஆசிரியர் எனக்கு கற்றுத் தந்த நடனத்தின் நுட்பங்களை கற்றுக்கொடுத்து அடுத்த சந்ததிக்கும் இந்த நடனத்தை வழங்குவதே எனது நோக்கம்.


கேள்வி:- நடனத்துறையில் உங்களுக்கென ஒரு கால் தடத்தை பதித்துக்கொள்வதற்காக எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்?

பதில்: பல கலைஞர்களுடன் சேர்ந்து பங்காற்றிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. 200 இற்கும் மேற்பட்ட நடன நிகழ்வுகளில் நான் பங்குபற்றியுள்ளேன். கால் தடங்களை பதிப்பதற்காக நடனங்களை வழங்குவது என்பதில்லை. இசையின் அறிவு, ரிதத்தின் அறிவு இவை இருப்பதால் இவற்றுடன் இணைந்து நான் மேற்கொள்ளும் நடன முயற்சிகளை ரசிகர் அதிகம் விரும்புகின்றார்கள். இதுவே எனக்கான அங்கீகாரம்.

எனக்கான கால்தடங்களை பதிப்பதற்காக மேலதிகமான முயற்சிகள் எதனையும் மேற்கொள்வதில்லை. சாதாரண ஒரு நிகழ்வையும் தரமானதாக கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு விடயத்திலும் அதிகமாகவே சிரத்தையெடுத்து நிகழ்வை பார்வையாளர்களுக்கு வழங்கும்போது அவர்கள் கொடுக்கும் வரவேற்புகளே அங்கீகாரமாக அமைகின்றன.

இதைவிட இந்தியாவில் கற்றுக்கொண்டு இலங்கை வந்ததும் இந்திய கலாசார நிலையத்தில் நடத்திய எனது முதல் நடன நிகழ்விலிருந்து சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. வாழ்வோடு இணைத்து உடல் ரீதியிலும், உளரீதியிலும், புரிந்துணர்வு தரவல்ல இக்கலைகளை என் குருநாதரின் வழிக்காட்டலில் குழந்தைகளுக்குள் எடுத்துச் செல்வதே எனது முயற்சி. முயற்சியின் பலன் இறையருளால் தானாக அமையும்.

கேள்வி:- உங்களது வளர்ச்சியில் மூத்த கலைஞரின் வழிக்காட்டுதல்கள் எவ்வாறு உள்ளன?

பதில்:- எப்பொழுதும் வழிகாட்டலுக்கு முதுகெலும்பாவது என் அம்மா. அவர்தான் என்னுடைய மூத்த வழிகாட்டி. நடனம் குறித்த அனைத்து கலந்துரையாடல்களும் அவர்களிடமே முன்னெடுக்கப்படும். இவரைத் தவிர அடுத்த வழிகாட்டியென்றால் அது என்னுடைய குருநாதர் சந்திரசேகரன். அவர் எனக்கு கற்றுத் தந்த விடயங்களில் நான் கவனம் செலுத்திவருகின்றேன். குருவினுடைய ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்கு.

அனைத்து மூத்த கலைஞர்கள் மீதும் நல்லதொரு மரியாதை உள்ளது. நம்நாட்டுகலைஞர்கள் என்ற வகையில் நம் கலையை பலரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக அருஸ்ரீ கலைகயத்தினூடாக பல நிகழ்வுகளில் தமிழ், சிங்கள கலைஞர்களுடன் நம்நாட்டிலும், வெளிநாடுகளிலும் (நோர்வே, இந்தியா) பணியாற்றியுள்ளேன்.

கலைஞர்களிடத்தே சிறந்த புரிந்துணர்வும், மற்றவரது கலையறிவை மதிக்கும் பண்பும் நிறைந்திருக்கவேண்டும். குழுமுயற்சி இருக்கவேண்டும். இவ்வாறு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் குழுவாக இணைந்து செயற்பாட்டால் நாம் முன்னெடுக்கும் நிகழ்வுகள் காத்திரமானதாக அமையும்.


கேள்வி:- இலங்கையில் பரத்தை பயின்றதற்கும் இந்தியாவில் சென்று பயின்றதற்கும் இடையில் நீங்கள் காணும் வேறுபாடுகளை கூறுங்கள்.

பதில்:- அதிகமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. நடனத்துறையில் வேறுபாடுகள் என்பதைவிட கற்கும் வகுப்பிலே நிறைய வேறுபாடுகளை உண்ரந்தேன். நேரம் என்பது இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம். குறித்த நேரத்திற்கு குறித்த விடயம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது அங்கு ஒரு கட்டாய நிலையாக உள்ளது. இவ்வாறு சிறுசிறு விடயங்களில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. நடனம் என்பது சாதாரணமாக கையை, காலை ஆட்டுவதில்லை என்பதை இங்கு உணர்ந்து கொண்டேன்.

கேள்வி:- பரதம் தவிர்ந்து வேறு எந்த துறைகளில் அதிகம் ஆர்முள்ளன..?


பதில்: கலைகள் என்று பார்க்கும்போது மிருதங்கத்திலும் வாய்ப்பாட்டு வயலின் என்பவற்றில் அதிகம் ஆர்வமுள்ளது. மிருதங்கத்தில் வி.ஜம்புநாதன், சென்னை ஏ.எஸ்.ரங்கநாதன் ஆகியோரிடம் பயின்று 6ஆம் தர பரீட்சையில் முதற்தர அதிவிஷேட சித்தியெய்தி மிருதங்க கலாவித்தகர் பட்டம் பெற்றுள்ளேன். வாய்ப்பாட்டு, வயலின் தரம் 5 வரை சித்தியடைந்துள்ளேன்.

நடனத்தை பொறுத்தவரை இசை என்பது முக்கியமானது. இசை அறிவு இருக்குமானால் நடனத்துறையானது இலகுவானதாக அமையும். மிருதங்க அறிவு இருந்தால் அது நட்டுவாங்கத்துக்கு உதவுவதாக அமையும். இசையின்றி எதுவும் முடியாது. இவற்றைத் தவிர கவிதையில் ஆர்வம் உள்ளது. கொழும்பு கம்பன் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதைக்கு முதலாமிடம் கிடைத்தது. கவிதைகூட நடனத்துக்கு உதவும் ஒன்றாக அமைகின்றது. கவிதை எழுதக்கூடியவராக இருந்தால் நடனத்துக்கான பாட்டை இயற்றக்கூடியதாக இருக்கும். என்னுடைய மாணவியின்  முதல் அரங்கேற்றத்தின்போது கீர்த்தனை ஒன்றை நான் இயற்றியிருக்கின்றேன்.

நுண்கலைகளைத் தவிர்ந்து CIMA - UK நெறியை மேற்கொண்டு தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். கலை, கல்வி இரு துறைகளிலும் சாதிக்க நினைக்கிறேன்.

கேள்வி:- கலைகள் தொழில்முறைக் கலைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. இது குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை கலையை தொழில்முறைக் கலையாக மாற்றுவது சிறந்ததல்ல. கலை என்பது ஆத்மார்த்தமாக செய்யவேண்டியது. இதனை பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பார்த்தால் அதில் அடங்கியுள்ள உயிர்த் தன்மையை எம்மால் முழுதாக வழங்க முடியாமல் போய்விடும்.

எம்மால் எவ்வளவு தூரம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நடனமென்பது சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான ஒரு கலையல்ல. அது செயற்பாட்டுக் கலை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.


கேள்வி:- நடன நிகழ்வுகளில் பங்குபற்றும் மாணவர்கள் தமது வகிபாகத்தை உணர்ந்து செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது குறித்து உங்களது கருத்துக்கள் என்ன?


பதில்:- உணர்ந்து நடனமாடுவது எனும்போது அபிநயத்தைக் குறிக்கின்றது. இக் குற்றச்சாட்டிற்கு குழந்தைகள் உடந்தையல்ல. எந்த இடத்தில் சரியான பயிற்சி வழங்கப்படாமல் போகின்றதோ அந்த இடத்தில் முறையான வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. நடனத்தில் அபிநயம் என்பது மிக முக்கியமானது. அபிநயம் செய்யும்போது முதலில் பாட்டை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அபிநயம் நன்கு வளர பிரத்தியேக பயிற்சிகளை வழங்கவேண்டும். நடனம் என்பது மனோரீதியானது, ஆவயவங்களை அசைப்பதல்ல என்ற விழிப்புணர்ச்சியை மாணவர்களிடத்தே வழங்கி அவர்களது மனோரீதியான மாற்றங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையே உறவு கட்டமைக்கப்பட வேண்டும்.

பாடலின் கருத்தையும் உட்பொருளையும் ஸ்தாயி பாவத்தையும் புரிந்துகொள்ள எத்தனித்து நிதானமாகப் பயிற்சி செய்வதாலே அபிநயத்தை உள்வாங்க முடியும். இதற்கு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான உறவு நல்லமுறையில் இருக்கவேண்டும்.

கலைகள் என்பது இலகுவாக இறைவனை அடையும் வழி. தன் கலை திறமையின் ஆளுமையால் மாணவரைக் கவர்ந்து, அவசர உலகாக மாறிவிட்ட நவீன உலகில் அமைதியின் அடிவாரமாய் மாணவர் மனங்களைத் தூய்மைப் படுத்தி, நடனத்தில் வெறுமனே செய்முறை, அறிமுறை என்பவற்றைப் பயில்வதற்கு அப்பால் மனோரீதியான ஆனந்த தடங்களை அறிமுகம் செய்யவேண்டும்.

இதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் சிறந்த குருவை தெரிவுசெய்ய வேண்டும்.

நேர்காணல்:-க.கோகிலவாணி
படங்கள்:-குஷான் பதிராஜ


  Comments - 0

  • eswaran iya Sunday, 12 August 2012 04:54 PM

    மிகவும் அருமையான பேட்டி. வாழ்க. தொடர்க .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .