2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘தண்டவாளத் தீர்மானம்’

Editorial   / 2021 ஜூன் 14 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தண்டவாளத் தீர்மானம்’ பேராபத்துக்குள் இழுத்துச் சென்றுவிடும்

நல்லதொன்று நடக்குமாயின் எவ்வாறான கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தாலும் பரவாயில்லை அதிரடியான தீர்மானங்களை எடுப்பதே, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சிறந்ததாக அமையும். . 

தாம் எடுக்கும் தீர்மானத்தால், ஏற்படும் பின்விளைவுகள் மிகமோசமான முறையில் தீங்கிழைக்குமெனில், அதிகாரம் அவலட்சணமாகிவிடும். அவ்வாறான விமர்சனங்களுக்கே இவ்வரசாங்கம் முகங்கொடுத்துகொண்டிருக்கிறது.

காரியமொன்றுக்கு காரணம் இருக்கவேண்டும். சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, மண்சரிவு ஆகியவற்றால் பல உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. இதில், காரியமும் காரணங்களும் உள்ளன. ஆனால். பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்போது, ஏற்பட்ட வீதி விபத்துக்களால் உயர்கள் பல காவுக்கொள்ளப்பட்டுள்ளமை தர்க்கிக்க முடியாத ஒன்றாகும்.

அப்படியாயின், “பயணக் கட்டுப்பாடு” என்பதற்கு புதுவகையான அர்த்தத்தை கற்பிக்கவேண்டியுள்ளது. கொழும்புக்கு நுழைந்த, நுழைவதற்கு முயன்ற வாகனங்களின் எண்ணிக்கையையும் ஏற்பட்ட வாகன நெரிசல்களையும் பார்க்குமிடத்து, “கட்டுப்பாடு” கட்டுக்கடங்காது போய்விட்டதை உணர்த்தியது.

இவ்வாறான நிலையிலேயே அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. நாட்​டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில், பாராளுமன்றத்தில் நேற்று(08) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் கொஞ்சமேனும் செவிசாய்த்திருந்தால் எதிர்காலத்தில் திட்டமிட்டு தீர்மானங்களை எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஆனால், வழமையைப் போலவே பூசிமெழுகி, சேறுபூசி, வரலாற்று தவறுகளை நினைவுப்படுத்தியதை மட்டுமே ஆளும் தரப்பினர் வாதமாக முன்வைத்தமையை அவதானிக்கமுடிந்தது. ஆக, அடுத்தக் கட்டம் தொடர்பில் பிரயோசனமான யோசனைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு  வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்கு சிறந்த ​முறையொன்றாக இருந்தபோதிலும், திடீரென அம்முறைமை நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படியாயின், அரசாங்கத்துக்குள் கூட்டுப்பொறுப்பில் தீர்மானங்கள் எட்டப்படுவதில்லை என்பதையே காட்டுகிறது.

இந்தப் பயணக்கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன வசதிகளை கொண்டிருக்கும் செல்வந்தர்கள், சுகபோகமான வாழ்க்கையை கட்டுப்பாடுகளின்றி அனுபவிக்கின்றனர் என்பது, நாட்டில் இடம்பெற்ற ஒருசில சம்பவங்களே உதாரணங்களாகின்றன.

இதில், எந்தவொரு விடயத்திலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வடக்கில், தன்னுயிர்களை மாய்த்துக்கொள்ளும் துர்ப்பாக்கியமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றன. பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால், கடன்களின் மிகுதியை வசூலிக்கவேண்டியவர்கள், நிறுவனங்கள் கொஞ்சம் கால அவகாசத்தை வழங்கவேண்டும்.

அதிகாரம் கையிலிருக்கும் போது எடுக்கப்படும் முடிவுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்குமாயின், அதிரடியான தீர்மானங்களை எட்டுவதற்கு தயங்கக்கூடாது. ஆனால், எப்போதுமே ஒன்றுசேராமல் இருக்கும் தண்டவாளங்களைப் போல, அரசாங்கம் ஒரு தீர்மானத்தையும் சிவில் நிர்வாகம் மற்றுமொரு தீர்மானத்தையும் எட்டுமாயின், நாடு பேரபத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

​பொது எதிரியான கொரோனாவிலிருந்து நாட்டை மீட்பதற்கு, எவ்விதமான பேதங்களுமின்றி மக்கள் ​ஐக்கியப்பட்டிருக்கின்றனர். ஆகையால், அரசாங்கத்தின் தீர்மானங்களும் பேதங்களை மறந்திருக்கவேண்டும். இதுவே நாட்டின் சுபீட்சத்துக்கு முதல் படியாகும்.(09.06.2021)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .