2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

ஒப்புதல் வாக்குமூலமளிக்கும் ஜனாதிபதியும் ஆளுந்தரப்பினரும்

Editorial   / 2022 மே 06 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒப்புதல் வாக்குமூலமளிக்கும் ஜனாதிபதியும் ஆளுந்தரப்பினரும்

தாங்கள் செய்யாததை செய்ததாகக் கூறி, பலவந்தமாக பெறப்படும் வாக்குமூலமே ஒப்புதல் வாக்குமூலமாகும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலரிடம், பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றே, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக, சந்தேகநபர்கள் பல்வேறு வகைகளிலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் கடந்தகாலங்களில் கேள்விப்பட்டவை. பெரும்பாலும் சிங்களத்தில் எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களில் தமிழர்களே கையெழுத்திட்டுள்ளனர். ஏனெனில், பயங்கரவாத தடைச்சட்டம் ஓர் இனத்தை மட்டுமே குறிவைத்துக்கொண்டிருந்தது.

மிரிஹானவில் ஜனாதிபதியின் பிரத்தியேக வாசஸ்தலத்துக்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படபோதுதான், அரசாங்கத்தின் சுயரூபம் அம்பலமானது. அதாவது, அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது.

ஒவ்வொன்றுக்காகவும் வரிசையில் நின்றிருந்தவர்களின் இரத்தம் கொதிப்படைந்து கோபம் கொந்தளித்ததன் வெளிப்பாடே இன்றைய போராட்டங்களின் பின்னணியாகும். இவற்றுக்கெல்லாம், அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத்திறனில் ஏற்பட்டிருந்த சீர்குலைவே காரணம். முழு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டமைக்கு, தங்களால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாகும் என ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் அறிவித்திருந்தனர்.

இரசாயன உரத்தை தடைச்செய்தது தவறென ஜனாதிபதி கோட்டாபயவும், வரியை குறைத்தமையால் பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்துவிட்டோமென நிதியமைச்சர் அலி சப்ரியும் முன்னாள் நிதியமைச்சர் கே.என் சொக்ஸியை தவிர, எந்தவொரு நிதியமைச்சரும் மக்களின் நலன்சார்ந்த வரவு- செலவுத்திட்டத்தை தயாரிக்கவில்லை என ஆளும் கட்சியின் எம்.பியான பந்துல குணவர்தனவும் தெரிவித்திருந்தனர்.

தெரிவித்திருந்தனர் என்பதற்கு அப்பால், மக்கள் படும் துன்பங்களுக்கான காரணங்களை குறிப்பிட்டு, ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளனர். நமது நாட்டு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது காலந்தாழ்த்தி, மழுங்கடிக்கச் செய்துவிடுவதில் மகா கெட்டிக்காரர்கள்.  இறுதியில் அரச அதிகாரிகளே குற்றவாளிகள் ஆக்கப்பட்டுவிடுவர்.

பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நேற்று (05) இரகசிய வாக்களிப்பு நடத்தப்பட்டது. அதில், வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் வாக்களிப்பவரின் பெயர் எழுதப்பட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அப்படியெனில், அதிலிருக்கும் ‘இரகசியம்’ என்ன? இதுகூட அச்சுறுத்தும் ஓர் ஆயுதமாகும்.

சட்டவாக்க சபைக்குள் இருப்போர், தாங்கள் சிக்கிக்கொள்ளாத வகையிலேயே சட்டங்களுக்குள் ஓட்டை வைத்துவிடுவர்.  நாட்டு மக்கள் துன்பப்படுவதற்குக் காரணம், தங்களால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் என  பகிரங்கங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடமுடியாமை வெட்கக்கேடாது.

பலவந்தப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறமுடியாது என்பதை இறுக்கப்படுத்தி, பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலமளிப்போருக்கு எதிராக சட்டத்தை நாடி, தீர்வு கண்டால், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என்பதே எமது அவதானிப்பாகும். (06.05.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .