2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

முரண்டு பிடிக்கும் ஜனாதிபதியும் எப்போதும் முண்டியடிக்கும் மக்களும்

Editorial   / 2022 மே 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றை நிறைவேற்றுவதன் ஊடாக, பல்வேறு சவால்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின், அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டு அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனமாகும். இரும்புக்கரம் கொண்டு அடக்கியாள முயலப்படுமாயின், அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டில் ஸ்திரமான ஆட்சியொன்று இல்லை. இன்று பதவியேற்பவர், நாளை விலகிக்கொள்கின்றார். ஒருவரின் மீது, பல அமைச்சுகளின் பொறுப்புகள், சுமையாகத் திணிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை தூக்கியெழுப்ப முடியாத வகையில், கையிருப்புகள் கரைந்துவிட்டன.

இவ்வாறான நிலையில்தான், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், பல்வேறு வடிவங்களில்  முன்னெடுக்கப்படுகின்றன. அழுத்தங்களின் வேகமும் அதிகரித்துள்ளது. பொலிஸார் நீதிமன்றத்தை நாடுகின்ற போதெல்லாம், ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, நீதிபதிகள் மறுத்துவிடுகின்றனர்.

இந்நிலையில்தான், கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பொலிஸார் விலக்கிக் கொண்டுள்ளனர். எனினும், அந்த நீதவான் உள்ளிட்ட நாட்டிலிருக்கும் சகல நீதவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

சிலவேளைகளில், எவ்வித காரணங்களும் இன்றியே, சில சட்டங்களை அதிரடியாக அமல்படுத்தும் அரசாங்கம், உள்ளூரிலிருந்து மட்டுமன்றி சர்வதேச ரீதியிலிருந்து எழுப்பப்படும் கண்டனங்களை அடுத்து, அவசர, அவசரமாக வாபஸ் பெற்றுக்கொண்டுவிடும். மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்தும், அடுத்தடுத்த நாள்களில் செய்யப்பட்ட போராட்டங்களைத் தடுக்கும் வகையிலும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது; பின்னர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும், வௌ்ளிக்கிழமை (06) மீண்டும் அவசரகாலச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் ‘சர்வதேச  சமூகம்’ கடுமையான கண்டனத்தை தெரிவித்து, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அடக்குவதற்கு முயல வேண்டாமென வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார ரீதியில், நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும் வேளையில், உதவிகளை வழங்குவதற்குக் காத்திருக்கும் அமைப்புகளும், அவசர காலச்சட்டம் அமலில் இருப்பதால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை காரணமாகக் காண்பித்து, உதவிகள் செய்வதிலிருந்து விலகக்கூடும்.

எனினும், பொது அமைதியைப் பேணுவதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரமே, அவசரக் காலச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இந்த விளக்கம், ஆளும் தரப்புக்கு மனத்திருப்தியைக் கொடுக்கலாம். எனினும், சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனநாயக போராட்டங்களை அடக்கியாள முயல்வது, பாரிய பின்விளைவுகளுக்கு வழிசமைக்கும்.

அதேபோல், “என்னை யாராலும் விரட்ட முடியாது; போகவும் மாட்டேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவருக்கு காலமிருக்கிறது.

எனினும், வரிசையில் நின்றுகொண்டு, முண்டியடித்துக் கொண்டிருக்க, மக்களுக்கு இனிமேலும் முடியாது என்பதை கவனத்தில் கொள்க! (09.05.2022)

 

 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X