2023 ஜூன் 07, புதன்கிழமை

சிவில் யுத்தமொன்றுக்கான அச்சம்; மேகம் கருக்கட்டுகிறது

Editorial   / 2022 ஜூன் 26 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் யுத்தமொன்றுக்கான அச்சம்; மேகம் கருக்கட்டுகிறது

நிவாரணங்களில் முறைக்கேடுகள், எரிபொருள் விநியோகத்தில் முறைமையின்மை, பதுக்கல்கள், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு எரிபொருள் வழங்கலில் முன்னுரிமை, பாதுகாப்பு கடமையிலிருக்கும் பொலிஸ், இராணுவ அதிகாரிகளுக்கு இடையே கைகலப்பு என வெறுக்கத்தக்கதும் வேண்டத்தகாததுமான  செய்திகளே, செவிகளை நிரப்புகின்றன; இவை அபத்தமானவை.

வாகனத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், கிழமைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த முறைமையின் ஊடாக, சீரான விநியோகத்தை எதிர்பார்க்க முடியாது. பல்வேறு குழப்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.

ஏனெனில், திங்கட்கிழமைக்கென குறித்தொதுக்கப்பட்ட 1 ஆம் இலக்க வாகனங்கள் வரிசையில் நிற்கும்;  எரிபொருள்   நிலையத்தில் போதியளவான எரிபொருள் இல்லை. அந்த வாகன வரிசை நிறைவடைவதற்கு முன்னரே, எரிபொருள் தீர்ந்துவிடுகின்றது. அப்படியாயின் அதே இலக்கத்தை (இல.1) கொண்ட வாகனங்கள் மறுநாளிலும் வரிசையில் நிற்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

காத்திருந்தவர்கள் வரிசையை விட்டு இடையிலேயே விலகிச்செல்ல மாட்டார்கள். மறுநாளுக்குரிய வாகன இலக்கத்தை (இல.2) கொண்டவர்கள், முதல்நாள் இலக்க வாகன உரிமையாளர்கள் அல்லது சாரதிகளுடன் முரண்படமாட்டார்கள் என்பதை நம்பமுடியுமா? இல்லையேல், வாகன தகடுகளை மாற்றிக்கொண்டு மறுநாளும், அதற்கு அடுத்தடுத்த நாளும் வரிசைக்கு வரமாட்டார்கள் என்பதை எவ்வாறு நம்புவது. அதனால்தான் இந்த முறைமை இன்னுமின்னும் முரண்பாட்டுக்கே வழிசமைக்கும்.

வாகனங்களுக்கான சகல ஆவணங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, எரிபொருள் வழங்கும் அளவுக்கு ஒவ்வோர் எரிபொருள் நிலையத்திலும் போதியளவான ஆட்பலம் இல்லை என்பதால், நிலைமையை இன்னும் இலகுபடுத்தும் வகையில் இலத்திரனியல் ரீதியில் முறைமையொன்றை ஏற்படுத்தவேண்டும்.

அதேபோல, வழங்கப்படும் நிவாரண பொருட்களிலும் மோசடிகள் இடம்பெறாத வகையில் திட்டங்களை வகுக்கவேண்டும்.

மக்கள் பல கோணங்களிலும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை நீடிக்குமாயின், ஒருவருடன்  ஒருவர் மோதிக்கொள்வர்.

கேட்கும் அளவுக்கு நியாயமான தீர்வுகள் முன்வைக்கப்படுவதில்லை. ஆகையால், ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில், கொதித்துக்கொண்டிருக்கின்றனர். இது சிவில் யுத்தத்துக்கு வழிசமைத்துவிடும். எனவே, நடைமுறைச் சாத்தியமான தீர்மானங்களை எட்டுவதே காலத்தின் தேவையாகும்.

ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், களவெடுத்தல், அபகரித்தல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. களவெடுப்பவர்கள் சிக்கிக்கொள்வார்களாயின், அடித்து நொறுக்குவதைத் தவிர வேறொரு மாற்றீடுகளை சிந்திப்பதற்கு மனமிருக்காது. ஏனெனில் ஒவ்வொருவரும் நொந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

உண்மையாக கையேந்துபவர்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளென நினைத்து ஒதுங்கிச்செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்குவாரங்கள் கழுத்தை நெரிக்குமாயின் ஒவ்வொருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, மோதலாக வெடித்து, சிவில் யுத்தத்துக்கே வழிசமைத்துவிடும் என்பதை நினைவில் கொள்க.  (24.06.2021)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .