Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறைபடிந்த ‘நிரபராதி’யின் கைகளுக்குச் சென்ற உயிர்பறிக்கும் ஈனம்
அதிகாரம் கையிலிருக்கும் போது, மிகமிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்பது, இராஜினாமா செய்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின், அத்துமீறிய செயற்பாடுகளில் இருந்து ஒவ்வொருவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அவர், தங்களுடைய விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அழைத்து அதிலிருவரை முழந்தாளிடச் செய்து, தன்னுடைய கையடக்க துப்பாக்கியை எடுத்து, “சுட்டுத்தள்ளி விடுவேன்” என மிரட்டி இருந்தமை, சர்வதேசதத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.
உள்நாட்டில், தமிழ்த் தரப்பினர் மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் அவரது செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்து, பதவியை துறக்கச் செய்யவேண்டுமென அரசாங்கத்துக்கு ஓரணியில் திரண்டு அழுத்தம் கொடுத்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், இராஜாங்க அமைச்சர் லொஹானின் இந்த ஈனத்தனமான செயற்பாடு, அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாய் மாறிவிட, பதவியைத் துறக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கட்டளையிட்டனர்.
அதன்பிரகாரம், தனக்குக்கீழிருக்கும் ஏனைய இராஜாங்க அமைச்சுப்பதவிகளை வைத்துக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை மட்டுமே இராஜினாமா செய்திருந்தார். இதுவும் கூட ஒரு கண்துடைப்பாகும்.
மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி, ஒரு குற்றச்செயலைச் செய்திருக்கும் ஒருவரை, அதிகாரத்தில் வைத்திருப்பது பெரும் கேள்விக்குறியாகும். அவ்வாறு எதுவுமே மீறவில்லையெனில் தன்னிலை விளக்கமளித்து இராஜினாமா செய்யாமல் இருந்திருக்கலாம்.
லொஹான் ரத்வத்த, கறைபடிந்த ஒரு ‘நிரபராதி’; அவருக்கு எதிராக, மேல் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், லொஹான் ரத்வத்தையை நிரபராதியாக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன.
2001ஆம் ஆண்டு டிசெம்பர் 5ஆம் திகதி, பொதுத் தேர்தல் தினத்தன்று மடவள, உடதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு நிராபராதியாகி இருந்தார்.
1997ஆம் ஆண்டு இடம்பெற்ற, பப்புவா நியூகினியா றக்பி வீரர் ஜோயல் பெரேரா படுகொலை, கண்டி, ஹந்தானையில் டப்ளியு15 பெண்குயிட் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உள்ளிட்டவை சிலவாகும்.
இவற்றியில் எல்லாம் பிரதிவாதியாக லொஹான் ரத்வத்த பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இவ்வாறு கறைபடிந்திருக்கும் ‘நிரபராதி’யின் கைகளில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பை ஒப்படைத்தை இட்டு, அரசாங்கம் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும்; ஆனால், தலைக்குனியச் செய்துவிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியமையை எதிர்த்து, ஓரணியில் திரண்ட தமிழ்த் தரப்புகள் உள்ளிட்ட ஏனையோர், ஐ.நாவுக்கும் ஓரணியில் திரண்டிருந்தால், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்துக்கேனும் பதில் கிடைத்திருக்கும். (16.09.2021)
13 minute ago
26 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
2 hours ago
3 hours ago