2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இணைய வழியில் ஒரு கண்ணை வைத்திருப்பதே உகந்தது

Editorial   / 2021 ஜூலை 07 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைய வழியில் ஒரு கண்ணை வைத்திருப்பதே உகந்தது

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இணையவழி கல்வி, திறன்பேசிகள், மடிக்கணினி ஆகியவை ஊடாகவே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

எது தவறு, எது பிழை எனச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய வயதை அடைந்தவர்களுக்கு இணையவழிக் கல்வி முறைமை பிரச்சினை இல்லை. ஆனால், மனம்போன போக்கின்படி, பின்விளைவுகளை எண்ணாது தவறுகளைச் செய்யத்தூண்டுவது, பதின்ம வயதுப் பருவம் ஆகும். இந்தப் பருவத்தில் ‘நெருப்புச் சுடும்’ என்றால், அந்தச் சூடு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் துடிப்பும் அதிகம் இருக்கும். எதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லப்படுகின்றதோ அதையே செய்துபார்க்க வேண்டும் என்று துருதுருக்கும் பருவமும் இதுவாகும்.

இணைய வழியில், கற்றல் - கற்பித்தல் செயற்பாடு இடம்பெறும்போது, மாணவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்கும் வாய்ப்புகள் குறைவு. கற்பிப்பதைக் கவனிக்காமல் அரட்டையடித்தல், இணைத்துவிட்டு எங்காவது செல்வது, கணினி விளையாட்டுகளில் ஈடுபடுதல், சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துதல், வேறு தளங்களில் உலாவருவது எனப் பல்வேறு செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதைக் கேள்விப்படுகிறோம்.

இந்த இடத்தில்தான், கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம, “மாணவர்கள் இலகுவில் ஆபாச இணையத் தளங்களை அணுகக் கூடும்” என்று திங்கட்கிழமை (05) நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய கருத்து, மிகவும் அக்கறையுடன் எடுத்துச் செயற்பட வேண்டிய முக்கிய விடயமாக இருக்கின்றது.

பெற்றோர்கள், பணியின் நிமித்தம் வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது, திறன்பேசிகள், மடிக்கணினி போன்ற சாதனங்கள் மூலம் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், அத்தகைய சூழ்நிலையில், எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம். பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை, மாணவர்கள் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டியினரிடமும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் கொழும்பு மேலதிக நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலதிக நீதவானின் இந்தக் கோரிக்கை வரவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் அருகில் இருக்கும்போது, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றின் பயன்பாட்டின்போது பாதிப்பு பெருமளவில் இல்லை. ஆனால், பெற்றோர் இல்லாத ​வேளைகளிலேயே பிள்ளைகள் தவறான தளங்களுக்குச் சென்றுவிடுவதே பிரச்சினையாக உள்ளது. இந்தத் தளங்கள் பதின்மவயதினரின் எதிர்காலத்தையே கருக்கிப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்துமிக்கவை.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பதைப்போல இணையவழி வகுப்புகளிலும் நன்மையும் தீமையும் இருக்கவே செய்கின்றன. தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்தறிந்து, பாலைப் பருகுகின்றதோ, இணையவழிக் கல்வியில் இருந்து நன்மைகளை மட்டும் பெற்றுக் கொள்ளும் வகையிலான வழிவகைகளைச் செய்தல் அவசியமாகின்றது.

எனவே, சிறுவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதக்கூடிய தளங்களை தடைசெய்வதே சாலச் சிறந்தது என்பதுடன் அரசாங்கத்தின் அவசர பணியாகவும் இது இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  (07.07.2021)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .