2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

16 ‘புலி’களுக்குள் ஒழிந்து வெளியேறிய ‘ஓர் அரசியல் ஆயுதம்’

Editorial   / 2021 ஜூன் 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 ‘புலி’களுக்குள் ஒழிந்து வெளியேறிய ‘ஓர் அரசியல் ஆயுதம்’

இலங்கை வரலாற்றைப் பொறுத்தமட்டில், பொசன் நோன்மதி தினம், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாளாகும். இவ்வாறானதொரு நாளில்தான், மஹிந்த தேரர் இலங்கை தீவில் காலடி பதித்து, பௌத்தமத சிந்தனைகளை  அறிமுகப்படுத்தினார்.

மஹிந்த தேரர், மிஹிந்தலைக்கு வருகைதந்துகொண்டிருந்த வேளையில், அங்கு ஆட்சியிலிருந்த தேவனம்பியதீசன் என்ற மன்னன், மான் ஒன்றை வேட்டையாடுவதற்கு முயன்றுள்ளார், அம்மானை, மன்னரிடமிருந்து உயிருடன் மஹிந்த தேரர் மீட்டெடுத்தார் என்பது  வரலாற்றுச் சம்பவமாகும். 

அந்தப்பின்னணியைக் கொண்ட பொசன் தினத்தன்றும், ஜனாதிபதியால் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. சிறு குற்றங்களைச் செய்தவர்கள், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என வகைப்படுத்தி, பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

ஆனால், இம்முறை சற்று வித்தியாசமான முறையில், தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும், சுமார் 15 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருவோரில் 16 பேரும், பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (ஜூன் 24) பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 94 பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடராமல் இருந்த, 16 தமிழ் அரசியல் கைதிகளைத் தவிர, ஏனைய 77 பேரும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் வாடியவர்களாவர்.

94 ஆவது நபர் இன்றேல், முதலாவது நபராக, முன்னாள் அமைச்சர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா அடங்குகின்றார்.

 ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு, பல தருணங்களில் ‘அரசியல் ஆயுதம்’ ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் தவறில்லை. 1978ஆம் ஆண்டு, அரசியலமைப்புக்குப் பின்னர், இன்றைய நாள்வரையிலான மன்னிப்புகளைப் பார்க்கும்போது, அவை தெட்டத்தெளிவாகத் தெரிகின்றன.

தமிழ் அரசியல் ​கைதிகளின் அவலக்குரல், ஆட்சியாளர்களின் காதுகளுக்கு ஓரளவுக்குக் கேட்டிருக்கிறது, ‘புலிகளை விடுவித்துவிட்டனர்’ எனும் விமர்சனத்துக்குள் சிக்கிக்கொள்ளாது, துமிந்தவையும் விடுவித்து, சமன்பாட்டை சமப்படுத்தியுள்ளது நேற்றைய பொதுமன்னிப்பு.

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவின் குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள், கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தலின்போது முன்னெடுத்த பிரசாரங்கள், ‘தாமரை மொட்டை’ மலரச்செய்தன. அதன் பிரதி உபகாரமே இந்தப் பொதுமன்னிப்பாகும்.

1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 34ஆம் பிரிவின் ஊடாக, பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டது. ‘ஜனாதிபதியின் பொது மன்னிப்பு’, இந்நாட்டில், மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட, தவறாகப் பயன்படுத்தப்படும் அதிகாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

பொது மன்னிப்புக்கான அளவு​கோல்களுக்கு ​வரையறை இன்மையால், மேன்முறையீடுகளுக்கு அப்பாற்சென்று, பொதுமன்னிப்புகள் வழங்கப்படுகின்றன. 16 புலிகளுக்குள் ஒழிந்து வெளியேறிய துமிந்த சில்வா, ‘ஓர் அரசியல் ஆயுதம்’; அந்த ‘ஆயுதம்’, எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. (25.06.2021)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .