2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

கண்டவற்றிலும் கலைவண்ணம்; சிரட்டையும் சொல்லாதோ கவி

Princiya Dixci   / 2021 ஜூலை 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரத்தால் யானை ஒன்று செய்தார்கள். யானை அச்சொட்டாக அவ்வாறே இருந்தது. அது யானை என்று கருதிப் பார்த்தவர்களுக்கு, அதை மரம் என்று நினைக்கத் தோன்றவில்லை. அதை மரம் என்று கருதிப் பார்த்தவர்களுக்கு, யானை என்று நினைக்கத் தோன்றவில்லை. இதைத்தான் திருமந்திரம் என்ற நூல், ‘மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை’ - (திருமந்: 2290)

இவ்வாறே, தான் காண்பவற்றில் கலைவண்ணம் காணும்போது, எந்தப் பொருளில் உருவம் உருவாகின்றதோ, அந்தப் பொருளை அந்த உருவம் மறைத்துவிடுகின்றது. சிரட்டையில் குருவி உருவானால், அதைக் குருவி  என்று கருதிப் பார்ப்பவர்களுக்கு அதைச் சிரட்டை என்று நினைக்கத் தோன்றவில்லை. இவ்வாறு மெய்மறந்து இரசிக்க வைக்கும் அற்புத கலைப் படைப்புகளை படைக்கும் படைபாளியாய் திகழ்கின்றார் செல்லமுத்து பொன்னம்பலம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றார் இந்த அற்புத கலைஞன்.

சிரட்டைகளைப் பயன்படுத்தி கொக்கு, கொண்டைக்குருவி, காடை, வாத்து, போன்ற பறவைகளையும் மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி காண்டாமிருகம், எருமை போன்ற விலங்குகளையும் மரத்தின் ​வேரைப் பயன்படுத்தி அழகிய அற்புத தத்ரூபமான உருவங்களையும் நைலோன் கயிறு, பல்துலக்கும் துரிகை ஆகியவற்றைப் பயன்படுத்தி கழுத்து மாலைகளையும் இவர் உருவாக்கும் பாங்கு அலாதியானது.

அழகியல் செறிவு மிக்க இவரது படைப்புகள், பல வௌநாட்டு இராஜதந்திரிகளின் வௌநாட்டு இல்லங்களில் வரவேற்பறைகளை அலங்கரித்த வண்ணம் இருப்பது இவரது தனித்துவ திறனுக்கு எடுத்துக்காட்டாகும். 2001 முதலான சமாதான காலப்பகுதியில் அவ்வவ்போது கிளிநொச்சிக்கு சென்றிருந்த இராஜதந்திரிகளைக் கௌரவிக்கும் முகமாக அன்பளிப்புச் செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் இவருடையனவாகவே இருந்தன என்பது பெரும்பேறாகும்.

இத்தனைக்கும் தொழில் முறையாகவோ வரண்முறையாகவோ இக்கலையைக் கற்றுக் கொண்டவரல்ல; காண்பவற்றில் இருந்து கலைவண்ணம் காண்பதே இவரது தனித்துவம். அதுவே இவரது வாழ்வாதாரமாகவும் அமைந்திருந்தது.

முறிகண்டி சார்ந்த வீதிஓரங்கள் உட்பட, பல்வேறு இடங்களிலும் தனது கைவினைப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் ‘செனாபோனா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் செல்லமுத்து பொன்னம்பலம் தனது கலைப் படைப்புகள் பற்றி, எம்முடன் பின்வருமாறு பகிர்ந்து கொண்டிருந்தார்.

“எனது கைவினைப் பொருட்களை, தங்களுடைய வீடுகளில் அலங்காரப் பொருட்களாகவும் அத்தியாவசிய பயன்பாட்டுக்கான பொருட்களாகவும்  அதிகளாவானோர்  பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான கைவினைப் பொருட்கள், எக்காலத்திலும் எல்லோரிடத்திலும் வரவேற்புப் பெறக் கூடியவையாகும். அவற்றின் விலைமதிப்பும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால்,  கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுபவர்களின் கலைத்துவமான  எண்ணங்களின் வெளிப்பாடுகளை  வெளிக்கொண்டு வருவதற்கு, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள் ஏராளமானவை.  அவர்களின் எண்ணங்களில் பிரசவிக்கின்ற கலைப் பொருட்களை மாத்திரம் இரசித்து மகிழ்கின்றோம். மாறாக,  அதற்கு பின்னால் கலைஞர்களிடம் இருக்கின்ற கஸ்டங்கள் துன்பங்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

தற்போதைய கொரொனா வைரஸ் அச்சுத்தல் காரணமாக கலைஞர்களும்  சிறு கைவினைப்பொருள் உற்பத்தியாளர்களும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்  நோக்கி வருகிறார்கள். இதற்கு நான் விதிவிலக்கில்லை.

 கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை இன்மை காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.  குறிப்பாக  கைப்பணிப் பொருட்களை விற்பனை  செய்ய முடியாத நிலையில், சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்” என்கின்றார்.

2016ஆம் ஆண்டில் தேசிய அருங்கலைகள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி கைப்பணி விருது, 2014ஆம் ஆண்டில் சிறந்த மரக் கைப்பணிக்கான விருது என, கடந்த 10 வருடங்களில் வடக்கு மாகாணத்தில் ஒன்பது தடவைகளும் மூன்று தடவைகள்  தேசிய அருங்கலைகள்  பேரவையினாலும் மூன்று தடவைகள் கௌரவம் பெற்ற சிறந்த  கலைஞராகவும் மேன்மைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்ட கலைஞர் இவர்.

 ஆனால், இவருடைய அத்தனை பேருக்கும் புகழுக்கும் தனித்துவத் திறமைக்கும் பின்னால், அவரது குடும்பங்கள் பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, அந்தச் சோகங்களும் துன்பங்களும் களையப்பட வேண்டியவையே. ஒரு படைப்பாளியின் மனதில் நிம்மதி காணப்படும்போதுதான் அவனது படைப்புகளில் மேலும்மேலும் மெருகூட்டல்கள் இருக்கும். 

  1994 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த  அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான ஒரு பிள்ளையை  பராமரிக்கும் நிலையிலும்  மற்றுமொரு பிள்ளை திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் கணவனைப் பிரிந்து வாழும் நிலையிலும்  தற்போது எந்த வியாபாரமும் இல்லாமல்  அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்திசெய்தற்குக் கூட பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டுவருகி்ன்றனர்.

இவ்வாறு, ஒரு கலைஞனின் வாழ்வில் பல்வேறு துன்பங்களும் சுமைகளும் காணப்படுகின்றது. ஆனால், எங்களுக்குத் துன்பம் வருகின்ற போதும் சலிப்பு ஏற்படுகின்ற போதும் அவன் படைத்த கலைகளை இரசித்து,  மனங்களை ஆற்றுப்படுத்துகின்றோம். ஆனால் இவற்றைப் படைக்கின்ற கலைஞர்களின் கஸ்டங்களை ஆற்றுப்படுத்துவது யாரோ?

கண்ணால் காணும் காட்சிகளுக்கு அப்பால் சென்று, கருத்துகளையும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்ற படைப்புகளில் ததும்பும் உயிரோட்டம், அந்தக் கலைஞன் உயிர்வாழ்வதற்கும் கைகொடுக்கும் என்பது உலகநியதி; ஒருபோதும் கைவிடாது என்பது அழியாத தெய்வீகக் கலையின் வாசகம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .