2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

பாதுகாக்கப்பட வேண்டிய பண்டாரவன்னியன் சுவடுகள்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்த பகுதி வன்னி நிலம் எனப்படுகின்றது. இந்த வன்னி நிலத்தின் எல்லைகளாக வடக்கே கிளிநொச்சியும் தெற்கே மதவாச்சியும் கிழக்கு மேற்கு எல்லைகளாக கடலும் காணப்படுகின்றன.

இந்த வன்னி நிலத்தை இறுதியாக ஆட்சிசெய்த தமிழ் மன்னனாக பண்டாரவன்னியன் காணப்படுகின்றார். இவ்வாறு பண்டாரவன்னியன் வன்னியை ஆட்சிசெய்த காலத்தில், மேலைத்தேய அந்நியப் படைகளான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அனைவரும் வன்னி மண்மீது படையெடுத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

இவ்வாறு படையெடுத்துவந்த அந்நியப்படைகளுக்கு பண்டாரவன்னியன் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். குறிப்பாக, போர்த்துக்கீசப் படைகள் 1621ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோதும், அவர்களால் பண்டாரவன்னியனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வன்னி மண்ணினை நெருங்க முடியவில்லை என வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு வன்னியைக் கைப்பற்ற முடியாமலேயே போத்துக்கீசரின் ஆட்சி இலங்கையில் முடிவிற்குவர, அதன் பின்னர் வந்த ஒல்லாந்தப் படைகளும் வன்னிமீது படைதொடுத்தன. இவ்வாறு வன்னிமீது படைதொடுத்த ஒல்லாந்தப் படைகளாலும் வன்னி முழுவதையும் கைப்பற்ற முடியவில்லை.

இவ்வாறு படையெடுத்து வந்த ஒல்லாந்தர் படைகள் 1715ஆம் ஆண்டு முல்லைத்தீவில் கோட்டை ஒன்றை நிறுவியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக முழுமையாக வன்னியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாமலே ஒல்லாந்தரும் இலங்கையை விட்டு வெளியேற, அதன் பின்னர் வந்த பிரித்தானியப் படைகளும் வன்னிமீது தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தன.

பிரித்தானியப் படைகள் வன்னியின் பெருமளவான இடங்களைக் கைப்பற்றியபோதும், எதற்கும் தளர்ந்துவிடாத பண்டாரவன்னியன், இறுதியாக முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோவில்வரையுள்ள இரண்டாயிரம் சதுர மைல் நிலப்பரப்பில் தனது ஆட்சியை தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

அத்தோடு, ஒல்லாந்தரால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த கோட்டையை பிரித்தானியர்கள் 1795ஆம் ஆண்டு மீளுருவாக்கம் செய்து, அதனை படைத் தலைமையகமாகப் பயன்படுத்தி வந்தநிலையில், அந்தக் கோட்டையை 1803ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி பண்டாரவன்னியன் தகர்த்ததுடன், அந்தக் கோட்டையிலிருந்த பிரித்தானியப் படைகளின் பீரங்கிகளையும் கைப்பற்றியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

அதன் பின்னர் குறுநில மன்னனான காக்கைவன்னியன், முன்விரோதம் காரணமாக பிரித்தானியருக்கு பண்டாரவன்னியனைக் காட்டிக்கொடுத்ததாகவும், அதன்படி 1803 அக்டோபர் மாதம் 31ஆம் திகதி பிரித்தானியத் தளபதி ரிபேக் என்பவரால் பண்டாரவன்னியன் கற்சிலைமடு என்ற இடத்தில் வீழ்த்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

பிரித்தானியர், பண்டாரவன்னியனை வீழ்த்தினாலும் அவனின் வீரத்தினை கௌரவப்படுத்தி, பண்டார வன்னியன் வீழ்த்தப்பட்ட இடத்தில் நடுகல் ஒன்றை பிரித்தானியத் தளபதி ரிபேக் அமைத்துள்ளார். அவ்வாறு அமைக்கப்பட்ட நடுகல் தற்போதும் கற்சிலைமடுப் பகுதியில் காணப்படுகின்றது. வீழ்த்தப்பட்ட எதிரிகளாலேயே கௌரவப்படுத்தப்படும் பண்டாரவன்னியன் ஓர் உன்னத வீரனாவான். எனவே, அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் காப்பற்றுவதற்காகவும் போராடிய உன்னதமான அந்த வீரனை நினைவில் கொள்ளவேண்டியதும் அவனை வணங்க வேண்டியதும் தமிழர்களது தவிர்க்க முடியாத கடமையாகக் காணப்படுகின்றது.

அந்தவகையில், பண்டாரவன்னியன் முல்லைத்தீவுக் கோட்டையை வெற்றிகொண்ட நாளான ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதியில் வருடந்தோறும் தமிழ் மக்கள் பண்டாரவன்னியனை நினைவுகூருகின்றனர்.

குறிப்பாக, முல்லைத்தீவில் பிரித்தானியர்களது கோட்டையிருந்த மாவட்டசெயலகத்துக்கு முன்பாக பண்டாரவன்னியனுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், அங்கு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதியில் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுவதுடன், பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் 60வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படுகின்ற முள்ளியவளை, கயட்டையடி, கற்பூரப் புல்வெளியிலும் அன்றைய தினத்தில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

அத்தோடு, பண்டாரவன்னியன் பிரித்தானியரால் வீழ்த்தப்பட்ட இடத்திலும் பண்டாரவன்னியனுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் குறித்த தினத்தில் வருடந்தோறும் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில், இவ்வருடமும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதியும் பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றிநாள் நினைவில் கொள்ளப்பட்டது.  இவ்வருடம் கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால், வழமைபோன்று இல்லாது சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றி நாள் நினைவுகூரப்பட்டது.

பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்துக்கு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது.  இந்த அஞ்சலி நிகழ்வில், துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் பங்குகொண்டனர். துரைராசா ரவிகரன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: “தமிழர்களின் வீரம் செறிந்த வெற்றிநாள் இன்றாகும். எங்களுடைய இடங்களை ஆக்கிரமிக்க முற்பட்ட அந்நியப் படைகளை மாவீரன் பண்டாரவன்னியன் துரத்தியடித்த வெற்றி நாள் இன்றாகும்.

குறிப்பாக, தமிழர்களின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முல்லைத்தீவுக் கோட்டை மீது, தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், 25ஆம் திகதி போர்தொடுத்து முல்லைத்தீவு கோட்டையைக் கைப்பற்றிய வரலாற்று வெற்றிநாள் இன்றாகும். இவ்வாறானதொரு வரலாற்று வீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாளை நினைவில் கொள்ளவேண்டும்.

பண்டாரவன்னியனின் வரலாற்றுடன் தொடர்புடைய அடையாளச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கோ அவற்றை அடையாளப்படுத்துவதற்கோ இலங்கை அரசும், உரிய அரச திணைக்களங்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடங்களில் பௌத்தமதத் திணிப்பினை மேற்கொள்வதுடன், தமிழர்களின் பூர்வீக நிலங்களைஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகளில் அதிகம் ஆர்வத்துடன் செயற்படுகின்றன.

ஆனால்,  தமிழர்களின் வரலாற்றில் உன்னத வீரனாகக் கருதப்படும் பண்டாரவன்னியனின் வரலாற்றுடன் தொடர்புடை இடங்களை பாதுகாப்பதற்கும், அவற்றை அடையாளப்படுத்துவதற்கும் தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குள் காணப்படும், பண்டாரவன்னியன் தகர்த்த வெள்ளையர்களது கோட்டையின் ஒருபகுதி சிதைவடைந்த நிலையில் இன்றும் காணப்படுகின்றது. அந்தச் சிதைவடைந்த கட்டடம் முற்றாக அழிவடைந்துபோகும் நிலையை எட்டியுள்ளது.

எனவே, அந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும்; அந்த சிதைவடைந்த கட்டடம் என்ன என்பதை விளக்கும் வகையிலான பெயர்பலகை அங்கு நிறுவப்படவேண்டும். அத்துடன், கற்சிலைமடு பகுதியிலுள்ள பிரித்தானியரால் நிறுவப்பட்ட நடுகல் உள்ளிட்ட பண்டாரவன்னியனின் வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .