2021 ஜூலை 28, புதன்கிழமை

வேட்டிக்குள் விட்டுக்கொண்டதால் 'குத்துது குடையுது'

Johnsan Bastiampillai   / 2021 மே 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ஒரு முதுமொழி உண்டு 'வேலியில் செல்வதைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு,குத்துதே குடையுதே என கூறுவார்களாம்'. உண்மையில் இந்த முதுமொழியானது தற்போது எமது நாட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகவே உள்ளது. ஆம் இந்த மாதம் 20ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயானது 7ஆவது நாளான நேற்று முன்தினமே (27) கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், எப்போதும் ​இலங்கைக்கு ஓர் ஆபத்து என்றால் உதவிக்கரம் கொடுக்க ஓடிவரும் இந்தியா ICG VAIBHAV, ICG DORNIER TUG Water lily என்ற கப்பல்கள், விமானங்களை வழங்கி உதவி செய்து, ஒருவாறு, இலங்கை- இந்திய கூட்டுநடவடிக்கையால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

தீயை அணைத்து விட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடமுடியாத இக்கட்டான நிலையில் இலங்கை சிக்கியுள்ளது. ஏனெனில், இரசாயனக் கொள்கலன்கள் அடங்கிய குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயின் பாதிப்புகளை, இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கையர்களான நாம் அனுபவிக்கவுள்ள அதேவேளை, அதனால் கடல் சார் சுற்றாடலுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கு பல வருடங்கள் முகங்கொடுக்க வேண்டும் என சுற்றாடல் ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

எனவே, இதனால் இன்னும் இரண்டொரு வாரங்களில் இலங்கைக்கு ஏற்பட போகும் ஆபத்துகள் பாரதூரமானவை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில, தீயை அணைக்கவும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் இலங்கை அல்லோல கல்லோலப்படுகின்றது. 

ஒரு பக்கம் இலங்கையை தாக்கி வரும் கொரோனாவின் மூன்றாவது அலை; மறுபுறம் மழையுடனான வானிலை. போதாக்குறைக்கு இக்கப்பலில் ஏற்பட்ட தீ. ஆனால், கொரோனா மூன்றாவது அலைக்கும் அரசாங்கம் மீது விரல் நீட்டப்படுவதைப் போல், இந்த கப்பல் விவகாரத்துக்கும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை நோக்கி தயக்கமின்றி விரல் நீட்டலாம்.

இந்த மாதம் 20ஆம் திகதி சிங்கப்பூர் கொடியுடன் 186 மீற்றர் நீளமும் 34 மீற்றர் அகலம் கொண்ட எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலானது, 25 தொன் எத்தனோல், இரசாயனப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் அடங்கிய 1,486 கொள்கலன்களுடன் இந்தியாவின் குஜராத் துறைமுகத்திலிருந்து சீனாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கப்பலின் தரத்துக்கு மீறி குறித்த கப்பலில் இரசாயன பொருள்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்தமையால்  விபத்து  ஏற்பட வாய்ப்பு இருந்துள்ளது. 

இந்த விபத்து கண்டறியப்பட்டவுடனேயே அக்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைவதற்கு முன்னர், முதலாவதாக மேற்கு இந்தியாவின் ஹசீரா துறைமுகத்துக்கும் இரண்டாவதாக கட்டாரின் ஹாமட் துறைமுகத்திலும் நுழைவதற்கு அனுமதி கோரிய நிலையில், குறித்த இரண்டு துறைமுகங்களும் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக அக்கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டிம் ஹொர்டினோல் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு குறித்த இரண்டு இந்திய துறைமுகத்துக்குள் நுழைய அனுமதித்திருந்தால் தற்போது  இலங்கைக்கு ஏற்பட்டிக்கும் பாதிப்பையும் தடுத்திருக்கலாம் என்றார். எனினும் ஆபத்தை அறிந்து கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைய முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் போதே, கப்பல் ஆபத்தான நிலையை நோக்கி சென்று விட்டதாகவும் தெரிவித்த அவர், இந்தியா அல்லது கட்டார் இந்தக் கப்பலை அந்த நாடுகளின் துறைமுகங்களில்  உள்நுழையஅனுமதித்திருந்தால் இவ்வாறான பாரிய அழிவை தடுத்திருக்கலாம் என்றார்.

ஆம், இந்தக் கப்பல் தீப்பற்ற போகிறதென்று அறிந்த கப்பல் நிர்வாகம் கட்டாரிடமும் இந்தியாவிடமும் உதவிக்கரம் நீட்ட எவ்வித தயக்கமுமின்றி குறித்த இரண்டு நாடுகளும் அதனை நிராகரித்த நிலையில், ‘மிகச்சிறிய நாடென்றாலும் ஆபத்தென்றால் உயிரையும் கொடுப்போம்’ என்ற பஞ்ச் டயலொக்கை மனதில் வைத்துக்கொண்டு, இலங்கை அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியது.

இறுதியில் உதவி செய்யப் போய் உபத்திரவம் ஆன கதையாகிவிட்டது. சர்வதேச துறைமுகங்கள் 2 இந்த கப்பலை உள்நுழைய அனுமதிக்காத நிலையில், இலங்கையில் ஏன் அனுமதி வழங்கப்பட்டதென நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு கழிவுகள்  அகற்றல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா சட்டரீதியான பயணத்தை மேற்கொண்ட கப்பல் குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிடப்படும் தகவல்களை ஒரேடியாக நம்பமுடியாது எகத்தாளமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

தீ பரவிய எக்ஸ் - பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் கரும்புகையால், அமில மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவென கடல் மாசுப்படுவதை தடுப்பதற்கான அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த கப்பலிலிருந்து நைட்ரஜன் டை ஒக்சைட் வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக அவ்வதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார். 

கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரங்களை அண்மித்த பிரதேசங்களிலும் அமிலமழை பெய்யக்கூடும். ஆகையால், மழைபெய்யும் ​போது, வீடுகளிலிருந்து வெளியேறுதல், நனைதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதுமட்டுமன்றி, வீடுகளுக்கு வெளியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருள்கள் இருக்குமாயின் அவற்றை, பாதுகாப்புடன் மூடி வைக்குமாறும் ​கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டாலும் அது முழுமையாக சேதமடைந்து ஒரு பக்கம் சரிந்து நிற்பதால், எந்நேரத்திலும், அக்கப்பல் கடலில் மூழ்கும் அபாயமுள்ளதால், அதிலுள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

மேலும் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பால் கடலுக்குள் விழுந்த இரசாயன கொள்கலன்களிலுள்ள இரசாயன பொருள்கள்,இந்தக் கப்பலிலுள்ள இரசாயனப் பொருள்கள், திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரங்களிலும் வௌ்ளவத்தை, பாணந்துறை ஆகிய கடல்பரப்புகளிலும் மிதந்ததை அடுத்து, நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் பயணக்கட்டுப்பாட்​டையும் மீறி, கரையொதுங்கிய இரசாயன பொருள்களின் பாரதூரமறியாமல் காவிச் சென்ற நிலையில், அவர்களில் சிலருக்கு ஒவ்வாமை நோய் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றால் உருவாகக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி  நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில்,கப்பலின் கழிவுகள் கரையொதுங்கியுள்ள திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரங்களிலும் வௌ்ளவத்தை,  பாணந்துறை கரையோரப் பகுதிகளை துப்புரவு செய்யும் பணிகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவத்தால் கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேச மீனவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாமென மீன்பிடித்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் பிரச்சினை எழுந்துள்ளது. அதுமாத்திரமல்ல, இனி கடலுணவுகள் என்றாலே தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய  இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படாலும் கடலுணவுகளை உட்கொள்வதற்குத் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 

 கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி நெதர்லாந்திலிருந்து சீனாவுக்கு பயணித்த கதிரியக்க யுரேனியம் எக்ஸோபுளோரைட்டுனான கப்பலொன்று தொழில்நுட்பக் கோளாறெனக் கூறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில், கதிரியக்க பதார்த்தம் தொடர்பில் அனுமதி பெறவேண்டிய அரச நிறுவனங்களுக்கு தெரியாமலயே குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது. 

எனினும், அந்த நிறுவனங்களின் அழுத்தத்தால் அந்தக் கப்பல் 2 நாள்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியது.ஆனால், இந்தக் கப்பலை இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியது யாரென்ற பதில் இதுவரை கிடைக்கவில்லை.

இதேபோன்று தான், கடந்த வருடம் நவம்பர் 3ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் மசகு எண்ணையுடனான நியு டைமன்ட் கப்பலிலும் இவ்வாறே தீப்பரவல் ஏற்பட்டு, இதனால் இலங்கைக்கு ஏற்பட்ட செலவுகளுக்கு 450 மில்லியனுக்கு அதிகமான தொகையை நியு டைமன்ட் கப்பலுக்குச் சொந்தமான நிறுவனம் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியே செலுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அதேபோல், குறித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்தும் நட்டஈட்டை பெறுவது தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையால் கொழும்பு கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, மில்லியன் கணக்கான நட்டஈடுகளைப் பெற்றாலும் இந்த விபத்துகளால் இலங்கையின் இயற்கை வளம், கடல்சார் சுற்றாடல், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அதனால் மனிதன் எதிர்​கொள்ளப் போகும் பாதகமான விளைவுகளையும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் பொறுப்புடன் செயற்படுவது சிறப்பாகும்.

 மகேஸ்வரி விஜயனந்தன்
mayurisaai@gmail.com

(கட்டுரையாளர்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .