2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 15 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


என்.கே. அஷோக்பரன்

எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். 

விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். 

இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான  உண்மையான காரணத்தைப் பார்க்கும் போது, உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலையேற்றம் ஏற்பட்டுள்ளமையை, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆனால், கடந்த வருடம் உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்தது. உலக சந்தையில் விலை கூடும் போது, உள்ளூரில் விலையை ஏற்றும் அரசாங்கம், உலக சந்தையில் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் போது, அதன் பலனை, இலங்கை மக்களுக்கு ஏன் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!

ஆனால், இந்த விடயம் இதோடு நிற்கவில்லை. உதய கம்மன்பில, எரிபொருள் விலையேற்றத்தை அறிவித்ததன் பின்னர், இந்த விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையை ஏற்றாது சமாளிக்க முடியாதுபோன அமைச்சரின் இயலாமையைக் காரணம் காட்டி, அவரைப் பதவி விலகக் கோரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, பகிரங்க அறிக்கையை வௌியிட்டிருக்கிறது. 

ஆம்! ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவேதான் இவ்வாறு அறிக்கையை வௌியிட்டுள்ளது. கம்மன்பில பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரல்ல; அவர் பங்காளிக் கட்சியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர். உதய கம்மன்பிலவுக்கும் பொதுஜன பெரமுவுக்கும் இடையிலான முரண்பாடுகளை, சிலமாதங்களாகவே அவதானித்து வரும் நிலையில், தமது ஆட்சியின் பங்குதாரியான கம்மன்பிலவை பதவிவிலகுமாறு, பிரதான ஆளுங்கட்சியாக பொதுஜன பெரமுன பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஆனால், பொதுஜன பெரமுனவுக்கும் கம்மன்பிலவுக்கும் இடையிலான முரண்பாடு மட்டும்தான், இதற்குக் காரணம் என்று கருதிவிடக் கூடாது. கம்மன்பில இங்கு ஒரு பலிகடாவாகப் பயன்படுத்தப்படுகிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

‘கொவிட்-19’ பெருந்தொற்றின் மூன்றாவது அலை, இலங்கையைப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஒழுக்கமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற மக்களின்  எதிர்பார்ப்பு, பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரிருந்தே தோற்றுக் கொண்டிருக்கிறது. 

எந்த முடிவையும், உறுதியாக எடுக்க முடியாத அரசாங்கமாகவே இது இருக்கிறது. குறைந்த பட்சம், பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா, தளர்த்துவதா என்பதைக்கூட, சரியாக முடிவெடுக்க முடியாமல், முதல் நாள் ஒரு கதை, மறுநாள் வேறு கதை எனத் தானும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில், பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. முதல் முறை இந்தியா, நாணய பிரதியீட்டின் ஊடாகக் காப்பாற்றியது; அடுத்த முறை, சீனா கடன் கொடுத்துக் காப்பாற்றியது. அடுத்த முறை, கையேந்த இடமில்லாமல், பங்களாதேஷிடம் போய் கையேந்தி, நாணய பிரதியீட்டைப் பெற்றுக்கொண்டு, செலுத்த வேண்டிய கடன்களைத் திக்கித் திணறிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. 

இலங்கையின் கடன் தரமதிப்பீடு, மிகக் குறைந்துள்ள நிலையில், அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் மிகச் சுருங்கியுள்ளன. இந்த நிலைமையில், சீனாவிடம் தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. சீனாவிடம் கடன்வாங்கி, சீனக் கடன் பொறிக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

இதுதான், அரசாங்கத்தின் பொருளாதாரம், வௌிநாட்டுக் கொள்கையென்றால், இதை ஒரு குழந்தையே செய்துவிட்டுப் போய்விடுமே! இதற்கு எதற்கு, ‘வீரர்கள்’ என்ற கூச்சலும், ‘நிபுணர்களின் ஆட்சி’ என்ற வெற்றுக் கோஷமும் வேண்டிக்கிடக்கிறது?

இந்த ஆட்சி, சறுக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வோர் இடத்தைப் பார்த்தாலும், அந்தச் சறுக்கலைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, அந்தச் சறுக்கலை மறைக்க எடுத்துக்கொண்ட பிரயத்தனம்தான், மிக அதிகமாகத் தெரிகிறது. உதாரணமாக, ‘லிட்ரோ’ எரிவாயு சிலிண்டரின், எரிவாயுவின் எடை அளவைக் குறைத்து, விலையை ஏற்றாமல்செய்த ஏமாற்று வேலை ஆகும். 

உள்ளூர் விவசாயத்தை ஆதரிக்கிறோம் என்று, இறக்குமதிகளைத் தடைசெய்துவிட்டு, தற்போது பொருட்களின் விலைகள் படுபயங்கரமாக ஏறியுள்ள நிலையில், இந்நாட்டின் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அரிசியின் விலை, மஞ்சளின் விலை, ஏலக்காயின் விலை என விலையேற்றம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழி, வௌிநாட்டு இறக்குமதிகளைத் தடைசெய்வதல்ல; இது ஓர் ஆதிகால முறை; அறியாமையின் வழி.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதானால், அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வினைதிறனான உற்பத்தி முறைகள், நவீன விவசாய முறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். உற்பத்தியாளனிடமிருந்து, நுகர்வோரை இலகுவில், குறைந்த செலவில் சென்றடையக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறுதான், உள்ளூர் உற்பத்திகளை நீடித்துநிலைக்கத்தக்க முறையில் ஊக்குவிக்கலாமேயன்றி, இறக்குமதிகளைத் தடுப்பதால் அல்ல. 10ஆம் ஆண்டு மாணவனுக்கு உள்ள பொருளாதாரம் பற்றிய புரிதல் அளவை மட்டும் கொண்டு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க திட்டமிட்டால், இதுபோன்ற நிலைமைகள் உருவாகலாம்.

அரசாங்கம், இப்படி மாறி மாறி சறுக்கிக்கொண்டிருக்கும் போது, பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, சக்தி இழந்து நிற்கிறது. 

ஜனநாயக நாடொன்றில், ஓர் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய அடிப்படைப் பணிகளைக் கூட, முறையாகச் செய்யத் திராணியற்ற வாய்ச்சொல் அமைப்பாகவே, இது இருக்கிறது. இன்று அரசாங்கத்தின் அபத்தமான நடவடிக்கைகளை விமர்சிப்பதற்குப் பதிலாக, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வரப்போவதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ரணில் விக்கிரமசிங்க வருவதைக் கண்டு, இவர்கள் அச்சப்படக் காரணம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையோடு அதிருப்தி கொண்டவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து விடுவார்களோ என்ற அச்சம்தான், 
இவ்வளவு காலமும் ரணிலைப் பலமற்ற தலைவர் என்று விமர்சித்தவர்கள்தான், இன்று தாம் எவ்வளவு பலமற்றவர்கள் என்பதை, மக்களுக்கு வௌிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஒரு கட்சிக்குத் தேவையான அடிப்படைகள் எதுவும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை. ஏனெனில், தாம் ஒரு கட்சியா, கூட்டணியா என்பதிலேயே அவர்களிடம் தௌிவின்மை காணப்படுகிறது. 

ரணிலின் பாராளுமன்ற வருகையோடு, ஐக்கிய மக்கள் சக்தியினரின் பாதுகாப்பின்மை உணர்வு, இன்னும் அதிகரிக்கும். எதிர்க்கட்சிக்குள் அடிக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் புயல், அவர்களது உட்கட்சி முரண்பாடுகளை அதிகரிக்கும். அவர்கள் ஆளுங்கட்சியோடு முரண்படுவதை விடுத்து, தமக்குள் அதிகம் அடிபடத் தொடங்குவார்கள். இது நிச்சயம், ஆளுந்தரப்புக்குச் சாதகமானதாகவே அமையும்.

ஒரு வகையில், தமது எல்லா நடவடிக்கைகளிலும் தோற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆளுங்கட்சியைக் காப்பாற்றும் கைங்கரியத்தைத்தான், இங்கு பிரதான எதிர்க்கட்சி செய்து கொண்டிருக்கிறது. 

இந்த இடத்தில்தான், இலங்கை அரசியலில் மிகப்பெரியதொரு வெற்றிடம் உணரப்படுவதை, உண்மையில் அவதானிக்கலாம். இந்தத் திறமையும், திராணியுமற்ற அரசியல் தலைமுறையிடமிருந்து, இந்த நாடு பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாது போய்விடும். 

அரசியல் என்பது ஒரு பொறுப்பு மிக்க பணி. ஆழ்ந்த அறிவும் ஆற்றலும் வினைதிறனும் நல்லெண்ணமும் இங்கு அத்தியாவசியம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றக்கூடத் தகுதியில்லாதவர்கள், ஒரு நாட்டை நிர்வகிக்கிறார்கள் என்றால், அந்த நாடு உருப்படுமா என்பதை யோசிக்க வேண்டும். 

நீங்கள் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் எனில், அந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்த அரசியல்வாதிகளில் எவரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று உங்களுக்குள் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்; அப்போது புரியும் இந்நாட்டின் அவல நிலை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X