2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வாழ்வை வென்ற நிமால்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜெரா  

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன.  

கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசியைச் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள், இறுதிக்கட்டப் போர் வலயக் குழந்தைகள். (முல்லைத்தீவின் உண்ணாப்புலவு, செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்கள்) பென்சில்களில் எழுதிய முதிர்ச்சியும் பேனாவால் எழுதப்பழகும் தொடக்கமும் அந்த எழுத்துகளில் தெரிகின்றன. 

அனைத்துக் கடிதங்களினதும் சாரம், ‘அண்ணா! நீங்கள் எங்களுக்குப் புதுநம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள். நான் சாதிப்பேன்’ என்பதாகவே இருக்கின்றன. 

அவர்களுக்கு, நிமால் நீண்டகாலம் கற்பிக்கும் ஆசிரியனல்ல; பெரும் பேராசிரியருமல்ல; ஓர் அண்ணாவாக, ஒரே ஒரு பாடவேளைப் பொழுதில் மட்டும் சந்தித்துக்கொண்ட வழிப்போக்கனாக மட்டுமே இருந்தார்.  

நிமால், நண்பர்களுடன் இசையமைத்துப் பாடிய, வலி போக்கும் பாடல்களைப் பாடிக்காட்டி இருக்கிறார். போர் மிச்சம் விட்ட, தன் உடலின் முழுப் பாகங்களையும் பயன்படுத்தி, ‘ஓக்டோபாட்’, ‘ட்ரம்ஸ்’ வாசித்துக் காட்டியிருக்கிறார். 

தான் வளர்ந்த கதையைச் சொல்லி, வாழ்வில் நம்பிக்கை பெறவேண்டிய தருணங்கள் குறித்துச் சில நிமிடங்கள் கலந்துரையாடி இருக்கின்றார். அந்த நம்பிக்கை உரமூட்டலுக்கான குறிப்பை, தனது வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதன் விளைவே, நிமாலை நாம் சந்தித்தபோது, அவரின் கட்டிலெங்கும் மலையெனக் குவிந்துகிடக்கும் கடிதங்கள். 

இக்கடிதங்களை, வெறும் மடல்கள் என்று மட்டும் சொல்லி, வார்த்தைப் பெறுமதியைக் குறைத்துவிடமுடியாது. நம்பிக்கையற்று அலையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய உலகின் அரிய புத்தகங்கள்.  

நிமால் யார்? அவரும் இந்த மண்ணின் மைந்தன்தான். போரின் ஆரம்பக் கட்டத்தில் பிறந்த குழந்தைதான். அதனால் போரின் முழு விளைவுகளையும் அவர் தாங்கி இருக்கின்றார். 

பிறந்தது யாழ்ப்பாணமாக இருந்தாலும், விவரமறிந்த காலம் முழுவதும் வன்னிதான். புதுக்குடியிருப்பு,  கைவேலி பகுதியில் வாழ்ந்திருக்கிறார். அறிவைத்தொட்ட கல்வி அனைத்தையும் அவர் வசித்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கற்றார். 

அந்தக் காலப்பகுதியில், பாடசாலைக்கு பஸ்ஸில் செல்லவோ, ஓட்டோவில் ஒய்யாரமாய் ஏறிச் செல்லவோ, சைக்கிளில் செல்வவோ வசதி இருக்கவில்லை. நடை! கால்நடையாகவே ஒவ்வொரு நாளும், பத்துக் கிலோமீற்றர்களைக் கடந்து கற்றார் நிமால். இடையிடையே வரும் சைக்கிள்காரர்கள் விரும்பினால் ஏற்றி, இறக்கிவிடுவதுண்டு. அவ்வாறாக உதவியவர்கள் சிலரை இன்றும் நினைவுகூர்கின்றார்.  

நிமாலின் குடும்பம், கர்நாடக இசைப் பின்னணியுடனோ, வேறெந்த இசை வல்லளார்களின் வாரிசுகளோ அல்ல. வள்ளிபுனம் பாடசாலையின் மேசைதான், நிமாலின் இசையறிவை வளர்த்தது. பாடமற்ற வேளைகளில், நண்பர்கள் அனைவரும் கூடி, மேசையின் முதுகில் மேளம்தட்டிப் பாடுவது, இசையின் நுணுக்கங்களை அவருக்குள் வளர்த்தது. அதுவே நிமாலை, பாடசாலையின் பிரபலமான பாடகராக்கியது. 

அந்தக் காலத்தில், பாடசாலைகளில் அடிக்கடி மாணவர் நிகழ்வுகள் நடைபெறும். அவை அனைத்தையும் நிமாலின் பாடல்கள், உயிர்பெறச்செய்தன. அப்படியே நிமால், ஒரு பாடகரானார். அவர் உயர்தரம் கற்கையில், வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும் இயங்கும் 20க்கு மேற்பட்ட இசைக்குழுக்களில் பாடிப் பிரபலமடைந்திருந்தார். இந்தக் கட்டுரையை வாசிப்போர் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! நிமால் முறையாகச் சங்கீதம் கற்றுத் தேறியவன் அல்ல; சுய விருப்பும் சுய முயற்சியும் காரணமாகவே, பாடசாலை மேசைகளில் சங்கீதத்தைக் கற்றுக் கொண்டார்.  

இப்படியே ஓடிக்கொண்டிருந்த காலத்தில், போரும் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. அந்தப் போர், தன் அகோரத்திலிருந்து யாரையும் விட்டுவைக்கவில்லை. 

01.08.2008 அன்று, நிமால் இருந்த பதுங்கு குழிக்குள் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அந்த வெடிப்பில் நிமாலின் இரு கால்களும் சிதறிவிட்டன. போரால் அரை மனிதானாக்கப்பட்ட கதை நிமாலினுடையது.  

போர்க் காலத்தில், காலில்லாத வலியும் மன நோவும் மிகவும் அதிகரித்தது. பல இரவுகள் படுத்த படுக்கையாக, பதுங்கு குழிக்குள் வாழவேண்டி ஏற்பட்டது. அருகில் எறிகணை வீழ்ந்தால் கூட, வேறொருவரின்  துணையின்றி அவரால் நகரமுடியாது. அந்தக் காலகட்டத்தில், நிமாலிடம் மாற்றுவலுவுடையவர்களுக்கான வண்டி கூட இருக்கவில்லை. பசி, பட்டினி, நோய் என்று ஒரு மனிதன் எந்தத் துயரமெல்லாம் அனுபவிக்க முடியுமோ, அவை அனைத்தையும் ஆற அமர இருந்து ருசித்து வெளியேறினார் நிமால். போரும் அத்தோடு முடிந்தது.  

நிமாலுக்கு வாழ்க்கை சலிக்கவில்லை. தனியாகவே சில காலம் அலைந்தார். அவரின் அலைவு, தமிழகம் வரைக்கும் நீண்டது. தமிழகத்தின் பிரபலமான இசைக் கலைஞர்கள் நிமாலைச் சந்தித்து உரமூட்டினர்; அனுசரித்தனர்; நம்பிக்கையூட்டினர். 

எல்லாம் போனாலும், இசையிருக்கிறது என்ற நம்பிக்கையுடன், தனக்குக் கிடைத்த சக்கரக் கதிரையுடன் மீண்டும் நகரத் தொடங்கினார். ஆங்காங்கே இருந்த துறைசார்ந்த நண்பர்கள் கைகொடுத்தனர். தன் வாழ்க்கையை இசைக்கோர்வையாக்கினார். தன் வலியை மிருதுவாக, மற்றையவர்களுக்கு எடுத்துக்கூறினார்; நிலைமையறிந்தவர்கள் உதவினர். 

எல்லோருடைய வாழ்க்கைக்கும் இதம் தடவும் வார்த்தைகளை இசையாக்கி, தன்னால் இயன்ற இடங்களில் வெளியிட்டு வருவது இவரின் தற்போதைய தொழில். அது ஒரு வெற்றிகரமான தொழில். நிமாலின் கட்டிலெங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கடிதங்கள் அதற்கு ஆதாரம். அவர் தன்னைப்போல போர் அலைக்கழித்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார்; குழந்தைகள் தம் எழுத்துகளால், நிமாலுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள். வாழ்வில் பிரகாசமாகப் பயணிக்க, கொடுக்கல்-வாங்கல் முறையிலான நம்பிக்கையளித்தலைத் தவிர, வேறென்ன தேவை. இதுவுமோர் உளச்சிகிச்சை முறையல்லவா? எனவேதான், நிமால் வாழ்க்கையை வென்றவனாகி இருக்கிறான்.  

இந்த வெற்றியை, மற்றையவருடன் பகிர்ந்துகொள்வதிலும் நிமால் முன்னணியில் இருக்கிறார். தன் இசைப் பயணத்திலும் மற்றையவரை ஊக்கப்படுத்தல் பயணத்திலும் சம்பாதிக்கும் பணத்தின் ஒருதொகையை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து உதவுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறார். போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தொழில்வாய்ப்பொன்றைத் தொடர்வதற்காக, தன்னிடம் இருந்த 50,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து உதவியதில் தொடங்கியது இவரின் இப்பயணம். 

அன்றிலிருந்து இன்றுவரை, பல்வேறு வழிகளிலும் பலருக்கும் உதவியிருக்கிறார். அண்மை நாள்களாக, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கான போராட்டங்களிலும் தன் உடல்நிலையையும் கவனத்தில் கொள்ளாது இணைந்துகொள்கிறார்.   

நிமாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அதிகம் பேர், நம் மத்தியில் இருக்கின்றனர். போரில் தம் அங்கங்களை இழந்து, வாழ்க்கையை வெறுத்து அலையும் முன்னாள் போராளிகள், குடும்பங்களைத் தொலைத்தவர்கள், தற்கொலை எண்ணத்தோடும், அதைத் தடுக்கவும் நினைக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், போதைபொருள் பாவனைக்கு ஆட்பட்டு மீளமுடியாது தவிப்போர், உளவியல் துறைசார்ந்து இயங்கும் நிபுணர்கள், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், நம்பிக்கையைத் தொலைத்த பிடிமானமற்றவர்கள் அனைவரும் ஒருமுறை நிமாலைச் சந்தியுங்கள். அல்லது அவரின் வாழ்க்கையை முன்மாதிரியான எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எந்தப் புத்தகங்களும் தராத நம்பிக்கையை, நம் முன் நடமாடும் நிமால் தருகிறார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .