2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

பம்பர கிரிஎல்ல சுற்றுலாத்தளம்: சுகமான அனுபவம்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வி.ரி. சகாதேவராஜா

vtsaha123@gmail.com

 

 

 

 

கடந்தவாரம் நீக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையடுத்து, சுற்றுலாத்தளங்களும் படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

கிழக்கில் பாசிக்குடா, உல்லை, அறுகம்பை போன்ற உல்லாசத்தளங்களை நோக்கி, உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் பல நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு களமாக இருந்துவருகின்றன. அதற்கிணங்க, காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோருடன் நானும் மாத்தளைக்கு அண்மையில் விஜயம்செய்தோம். 

மாத்தளை மாநகரின்கண் அடியவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சென்று,  நெய்விளக்கேற்றி வழிபட்ட பின்னர், றிவர்ஸ்டன் எனும் அழகிய சுற்றுலா மையத்தை நோக்கி புறப்பட்டோம். 

அது நகரிலிருந்து, 24 மைல்கல் தொலைவில் உச்சியில் அமைந்துள்ளது. செல்லும் வழியில், அதாவது 16 மைல்கல் தொலைவில் இந்த அழகிய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது மாத்தளை, ரத்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது.

மாத்தளையில் பிரசித்திபெற்ற பம்பர கிரிஎல்ல நீர்வீழ்ச்சியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதை அங்கு காணமுடிந்தது. கொரோனாவால் அடைபட்டுக்கிடந்த மக்கள், வீட்டைவிட்டு மெல்லமெல்ல வெளியே வந்து, சுற்றுலாத் தளங்களை நோக்கி மக்கள் செல்ல ஆரம்பிப்பதை, நீர்வீழ்ச்சியில் மக்கள் நின்றிருக்கும் காட்சி கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. 

பம்பர கிரிஎல்ல நீர்வீழ்ச்சியில் உள்ள விசேடம் என்னவென்றால், மூவின மக்களும் ஒரேவேளையில் ஒன்றுகூடிப் பழகுவதும் நீராடுவதும் ஆகும். அங்கு ஜாதி மத பேதமில்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணலாம்.

கடந்த சில மாதங்களாக, பம்பர கிரிஎல்ல நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் அது திறக்கப்பட்டதாக, மாத்தளை மேயர் சந்தனம் பிரகாஷ் அறிவித்திருந்தமையே மக்கள் அங்குவரக்காரணமாகும்.

இயற்கையின் மனோரம்மியம் நிறைந்த பச்சைப்பசேலான காட்டுக்கு மத்தியில், அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே தொங்குபாலமொன்று அமைந்திருப்பதும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சமாகும்.

சுற்றுலாப் பயணிகள் பலர் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருக்கும்போது, இன்னும் பலர், தொங்குபாலத்தில் நடந்து குதூகலித்தனர். இடைநடுவில் வரும்போது பாலம் தள்ளாடித் தளம்பும். தொங்கு பாலத்தில் நடந்து வருபவர் பயமடைவார். இருப்பினும் பாதுகாப்பாக, இருமருங்கிலும் கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. அதைப் பிடித்துக்கொண்டு நடக்கலாம். பாலத்தில் நடப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் பலகைகள், சிலஇடங்களில் பழுதடைந்து இருப்பதும் பயணிகள் அச்சமடையக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இவற்றை ரத்தோட்ட பிரதேச சபை பழுதுபார்த்து, பயணிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.


நாங்கள், அப்பகுதியில் சிறிதுநேரம் நின்று அவதானித்துவிட்டு, றிவர்ஸ்டன் நோக்கிப் பயணித்தோம். வளைந்துநெளிந்து செல்லும் பாதையூடாக ஏறஏற, குளிர் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், இயற்கையை இரசிப்பதற்காக ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, இறங்கிப் பார்வையிட்டோம். இலங்கை, ரூபவாஹினி ஒளிபரப்புக்கோபுரம் அமைந்துள்ள மலையையும் கோபுரத்தையும் பார்வையிட்டோம்.

பின்னர், நேராக றிவர்ஸ்டன் பகுதியை அடைந்தோம். இலங்கையின் ஏனைய பகுதிகளைவிட, றிவர்ஸ்டன் தனித்துவமானதாகும். இங்கு மணித்தியாலத்துக்கு மணித்தியாலயம் வானிலை மாறிக்கொண்டிருக்கும்.  திடீரென பலத்த காற்றுவீசும்; மறுகணம், மழைபொழியும்; பின்னர், வெயில் எறிக்கும். மறுகணம், ஜில் என்று குளிர்த் தென்றல் வீசும்; மறுகணம், பனிபெய்யும்; மேகம் அடிக்கடி அரவணைக்கும். இவ்வாறானதொரு  மனோரம்மியமான சூழல் றிவர்ஸ்டனில் நிலவுவது விஷேசம்தான்!

மொத்தத்தில், மாத்தளை மாநகரின் மாட்சிக்கு அணிசேர்க்கும் இவ் இயற்கை உல்லாசப் பயணத்தளங்கள், மக்களைப் பெரிதும் கவர்ந்துவருகின்றன. மாநகர மேயர் பிரகாஷின் அன்பான விருந்தோம்பலை இவ்வண் மறக்கமுடியாது; மூன்றுநாள் பயணத்துக்குப் பின்னர் ஊர் திரும்பினோம். 

அப்பகுதியிலுள்ள இயற்கை வனப்புமிக்க இன்னும் பல இடங்களையும் மக்கள் கண்டுகழித்து வருகின்றனர். கொரோனா அச்சம் நீங்க, மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்க்கையை இரசிக்கத் தொடங்கியுள்ளமை மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X