2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

பசில் இன்னமும் தோல்வி அடையவில்லை

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு அது 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக மாறிவிட்டது.

ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான சட்டமூலமொன்று, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அது, அரசியலமைப்பின் 21ஆவது  திருத்த சட்டமூலம் என்று குறிப்பிடப்பட்டது. எனவே, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவால், பின்னர் மற்றொரு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது அது 22ஆவது திருத்தம் என்று குறிப்பிடப்பட்டது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டமூலத்தின் பிரதான வாசகங்களுக்கு, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அக்கட்சி அதைப் பற்றிய அக்கறையை கைவிட்டுவிட்டது. எனவே, அரசாங்கம் தமது 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை முன்னெடுத்துச் சென்று, கடந்த வெள்ளிக்கிழமை அதற்கான விவாதம் நடைபெற்றது.  

அந்த விவாதத்தின் இரண்டாவது வாசிப்பின் போது, அதற்கு ஆதரவாக 179 வாக்குகள் வழங்கப்பட்டது. குழுநிலை வாக்கெடுப்பின் போது, அதாவது இறுதி வாக்கெடுப்பின் போதே, அதற்கு ஆதரவாக 174 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மட்டும் அதனை எதிர்த்து வாக்களித்தார். 

வாக்கெடுப்பின் பெறுபேறுகளைப் பார்க்கும் போது, ராஜபக்‌ஷர்கள் உள்ளிட்ட ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான எம்.பிக்கள் கட்சியின் செயலாளரும் கட்சியின் ‘மூளை’ எனப் பலரால் வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை புறக்கணித்ததாகவே தெரிகிறது. 

ஏனெனில் பசிலின் நெருங்கிய ஆதரவாளர்கள், சட்டமூலத்தை எதிர்த்து வந்தனர். அந்தநிலையில் சபாநாயகரைத் தவிர்ந்த நாடாளுமன்றத்தில் உள்ள 224 எம்.பிக்களில் 45 பேர் மட்டுமே, முதல் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. இறுதி வாக்கெடுப்பின் போது மேலும் ஐந்து பேர் சபையில் இருக்கவில்லை. அவர்கள் அனைவருமே ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்வர்களாவர். 

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுமார் 120 எம்பிக்களில் இந்த 50 பேரும் பசிலுக்காகவே சபைக்கு வரவில்லை என்று வைத்துக் கொண்டாலும், கட்சியின் பெரும்பான்மையினர் குறைந்தபட்சம் இந்த விடயத்திலாவது பசிலோடு இல்லை. 

இந்தச் சட்டமூலத்தின் மூலம், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது தடைசெய்யப்படுகிறது. பசிலும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவராவார். எனவே இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சுமார் 70 பொதுஜன பெரமுனவினர் வாக்களித்துள்ளனர் என்பது அவர்கள், அவரது கட்டுப்பாட்டை விரும்பவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 

அவர்களுள் சமல், நாமல், சஷீந்திர ஆகிய ராஜபக்‌ஷகர்களும் அடங்கியிருப்பது மேலும் முக்கிய விடயமாகும். நாமல், தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அனுமதியின்றி இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்க மாட்டார். மஹிந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

பசில் இன்னமும் துடிப்புடன் செயற்படுபவர். எனவே, அவர் ஜனாதிபதியானால் நாமலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்; அல்லது, தாமதிக்கலாம் என்பதற்காக பசிலை ஓரங்கட்ட மஹிந்தவின் குடும்பத்தினர் திட்டமிட்டு இருக்கவும் கூடும்.

நிறைவேற்றப்பட்ட 21ஆவது திருத்தத்தின் முக்கிய குறிக்கோள், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பற்றியதல்ல. அது, ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாகும். 

20ஆவது திருத்தத்தின்படி, சகல உயர் அரச அதிகாரிகளையும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட உயர்நீதிபதிகளையும் ஜனாதிபதியே நியமிப்பார். அவர்களைப் பதவிநீக்கம் செய்யவும் அவரால் முடியும். எனவே, அரச இயந்திரத்தில் சகல உயரதிகாரிகளும் ஜனாதிபதிக்கு பயந்தும் அவரை திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

இது ஜனநாயகத்துக்கு முரணான நிலைமையாகும். இதை மாற்றி அரசியமைப்புச் சபையின் ஒப்புதலுடன் மட்டுமே ஜனாதிபதி அவ்வதிகாரிகளை நியமிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதே அந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். அரசியலமைப்புச் சபையும் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்ப நியமிக்கப்பட முடியாது.  

ஆனால், இந்த விடயம் சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதை பசிலின் பிரச்சினை போன்றவை தடுத்துவிட்டன. அரசியலமைப்பு என்பது, நாட்டின் நீண்ட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கையாளப்பட வேண்டிய விடயமாகும். 

ஆனால், இலங்கையில் அந்த விடயம் எப்போதும் தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இணங்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அரசியலமைப்பு அடிக்கடி மாற்றப்பட்டு வந்துள்ளது. அதிலும் பாராளுமன்றத்தை பலப்படுத்தல் என்பது, உலகமே சிரிக்கும் அளவுக்கு பெரும் கேலிக்கூத்தாகியுள்ளது. 

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் படியும் அரச சேவையையும் பாராளுமனறத்தையும் நீதித்துறையையும் ஜனாதிபதியே கட்டுப்படுத்தி வைத்திருந்தார். 2001ஆம் ஆண்டு ரவூப் ஹக்கீம், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திலிருந்து விலகியதை அடுத்து, அந்த அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டது. அப்போது அரசாங்கத்தில் சேர்ந்து, அதைப் பாதுகாத்த மக்கள் விடுதலை முன்னணியினர், சந்திரிகாவை நிர்ப்பந்தித்து,  அரசியலமைப்பில் 17ஆவது திருத்தத்தை கொண்டுவந்தனர். அதன் மூலமே, முதன்முதலில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்புச் சபை உருவாகியது. 

சந்திரிகாவுக்குப் பின்னர், அவர் உருவாக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிககப்பட்டார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்ற மஹிந்த, 2010ஆம் ஆண்டு அதே கட்சியைப் பாவித்து, அரசியலமைப்பின் 18ஆவது  திருத்தத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் அரசியலமைப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டு, மீண்டும் ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சி உருவாகியது. 

2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம், மீண்டும் அரசியலமைப்புச் சபையை கொண்டு வந்தார். 2020ஆம் ஆண்டு கோட்டாபய மீண்டும் அதனை இரத்துச் செய்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்த கோட்டாபய, மீண்டும் அரசியலமைப்புச் சபையை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அப்போது தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தமே, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேறியது. 

இவ்வாறு, அவ்வப்போது அவரவரது தேவைக்கேற்ப மாற்றப்படும் ஒரு சஞ்சிகையாக, இலங்கையின் அரசியலமைப்பு மாறியிருக்கிறது. அது மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித கொள்கை அடிப்படையும் இல்லாது, அரசியலமைப்புத் திருத்தங்கள் விடயத்தில், தமது ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். 

இதில் மிகவும் நகைச்சுவையான விடயம் ஒன்று என்னவென்றால், ஒன்றை இரத்துச் செய்து மற்றொன்றாக கொண்டுவரப்பட்ட, ஒன்றுக்கொன்று முரணான மேற்குறிடப்பட்ட 17ஆவது, 18ஆவது. 19ஆவது, 20ஆவது, 21ஆவது ஆகிய ஐந்து திருத்தங்களையும் ஆதரித்து, பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்பதாகும். அவர்களுள் பேராசிரியர்கள். சட்ட வல்லுநர்கள், ‘தேசப்பற்றாளர்கள்’ போன்றோரும் உள்ளனர். 

22ஆவது திருத்தம் தொடர்பாக, கட்சிகள் மட்டத்தில் விவாதங்கள் நடைபெற்ற போது, மற்றொரு விடயமும் மேலெழுந்து வந்தது. அதாவது, பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்று, எத்தனை வருடங்களில் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். 

ஆரம்பத்தில் அது ஒரு வருடமாக இருந்தது. பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதியின் பிடியிலிருந்து சற்று மீட்பதற்காக, 19ஆவது திருத்தத்தின் மூலம் அது நான்கரை வருடங்களாக நீட்டிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்த 20ஆவது திருத்தத்தின் மூலம், அது மீண்டும் இரண்டரை வருடங்களாகக் குறைக்கப்பட்டது. 

விந்தையான விடயம் என்வென்றால், 20ஆவது திருத்தத்தை ஆதரித்த பொதுஜன பெரமுனவினருக்கு கடந்த சில மாதங்களாக, அதனை மீண்டும் நான்கரை வருடங்களாக நீடிக்க அவசியமாகியது. ஏனெனில், தற்போதைய நாடாளுமன்றத்துக்கு இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும். 

ஜனாதிபதியும் 2015ஆம் ஆண்டு, அவர் பிரதமராக இருக்கும் போது 19ஆவது திருத்தத்தின் மூலம் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க அதிகாரம் வழங்கினார். ஆனால், அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது அதனை இரண்டரை ஆண்டுகளாகவே இருக்க இடமளித்துள்ளார். எல்லாம் சொந்த நலன் தான்; நாட்டு நலன் அல்ல. 

எவ்வாராயினும், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் மூலம், அரசியலமைப்பு தனிநபர் ஒருவரின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஒரு படி ஜனநாயகத்தின் திசையில் நகர்ந்துள்ளது; அது வரவேற்கத்தக்கதாகும். 

ஆயினும், இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் படி, மீண்டும் அந்த நிலை தலைகீழாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள், இப்போதைக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாதிருந்தாலும், பசில் நிரந்தரமாகத் தோல்வியடைந்ததாகக் கூற முடியாது. 

அதற்கு முன்னரும் அவருக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலையிலேயே, பொதுஜன பெரமுனவினர் அரசியலமைப்பை மாற்றி, அவரைத் தூக்கிநிறுத்தி மீண்டும் அமைச்சராக்கினர்.             


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X