2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’?  

காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான அரசியல்தான், ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல் என்றாகிறது. 

இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல், “நாம் எதிர் அவர்கள்” என்ற பெருந்திரள்வாத பகட்டாரவாரம் மூலம், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இதன் மூலதனம், இயல்பிலேயே மக்களுக்குள்ள ‘ஸ்தாபன அரசியல்’ மீதான அதிருப்தியாகும்.   

“இவர்களே மாறி மாறிப் பலதசாப்தங்களாக ஆள்கிறார்கள்; என்ன நன்மை விளைந்தது”? என்றவாாக, அரசியல் உயரடுக்காகிய ‘ஸ்தாபனத்தின்’ மீது, மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூலதனமாகக் கொண்டே, ‘ஸ்தாபன எதிர் மக்கள் அரசியல்’ என்ற பெருந்திரள்வாத அரசியல், கடந்த சில ஆண்டுகளில் மேலோங்கி வருகிறது.  

இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’  மனநிலை எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான், நன்மை பயக்கும் சர்வாதிகாரி ஒருவர் மீதான அவாவையும் நாம்மால் காணமுடிகிறது. ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அடிப்படையிலான பெருந்திரள்வாதமென்பது, வெறுமனே அரசியலின் உயரடுக்கு மீதான எதிர்ப்பாக அல்லாது, ஸ்தாபன அரசியல் கட்டமைப்பு மீதான எதிர்ப்பாகவும் அது உருவாக்கப்படுகிறது.  

ஜனநாயகக் கட்டமைப்புகள் வினைதிறனற்றவை; அவை, அரசியல் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டவை; இதனால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை; மக்களுக்கு நன்மை பயக்கும், வினைதிறனான ஆட்சியை வழங்குவதற்கு, இந்த ஜனநாயகக் கட்டமைப்புகள் குந்தகமாக இருக்கின்றன போன்ற, பகட்டாரவாரப் பிரசாரங்கள், ஸ்தாபன எதிர்ப்பு அரசியலில் முன்னிலை பெறுகின்றன.   

இதற்கு மாற்றாக, மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கத்தக்க வினைதிறனான ஆட்சியை நடத்தக்கூடிய, ‘நன்மை பயக்கும் சர்வாதிகாரி’ வரவேண்டும் என்ற மனநிலை, மக்களிடம் விதைக்கப்படுகிறது. 

இதுபற்றித் தமது ஆய்வில் கருத்துரைக்கும் கிட்ஸ்ஷெல்டும் மக்கனும் “அரசியல் அடிப்படைகளில் பெருந்திரள்வாதமென்பது, அரசியல் உயரடுக்கின் கட்டுப்பாட்டிலுள்ள, அவர்களின் நலன்சார்ந்த ஸ்தாபனக் கட்டமைப்புகளைத் தகர்த்து, அந்த இடத்தில் மக்களின் ஒரு வகை நேரடியான குரலாக உருவகப்படுத்தப்படும் பெருந்திரள்வாதக் கட்சியின் தலைவரை அமர்த்துதல் ஆகும்” என்கிறார்கள்.  

இங்கு, நன்மை பயக்கும் சர்வாதிகாரிக்கான நியாயங்களாகச் சொல்லப்படுபவை- 
(1) ‘ஸ்தாபனக் கட்டமைப்புகள்’ மக்கள் நலன்களுக்கானவை அல்ல; மாறாக, அரசியல் உயரடுக்கின் நலன்களுக்கானவை. 

(2) அரசியல் உயரடுக்கு என்பது, மக்களால் தெரிவுசெய்யப்பட்டாலும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

(3) இதற்கான தீர்வு, அரசியல் உயரடுக்கைத் தோற்கடித்து, ஸ்தாபனக் கட்டமைப்பைத் தகர்த்து, ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் மக்களின் குரலாகவுள்ள நன்மை பயக்கும் சர்வாதிகாரியிடம் சமர்ப்பித்தல் ஆகும்.  

நீண்டகாலமாக, பெரும் அடைவுகள் எதையும் பெறாத அரசியலைப் பார்த்துச் சலித்துப் போய், வெறுப்படைந்த மக்களுக்கு மேற்குறித்த காரணங்களில் நியாயமிருப்பது போலத் தோன்றலாம். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் விசனம் அதிகமாக இருக்கும். அப்போது, ஸ்தாபக எதிர்ப்பு பகட்டாரவாரத்தின் ஒவ்வொரு சொல்லும், உண்மையாகத் தெரியும்.  

அரசாங்கத்தில், ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல அலுவலகங்களுக்கும் பலமுறை ஏறி இறங்கி, வரிசைகளில் காத்திருந்து, பல கையொப்பங்களைப் பெற்று, அதிகாரிகளின் கோரமுகங்களைக் கண்டு வெறுப்பின் உச்சக்கட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு, இந்தக் கட்டமைப்புக்குப் பதிலாக, ஒரு ‘நன்மை பயக்கும் சர்வாதிகாரி’ இருந்தால், நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றலாம். மக்களின் இந்த மனநிலைதான், இந்தப் பெருந்திரளவாத ஸ்தாபன எதிர்ப்பு அரசியல்வாதிகளின் மூலதனம்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில், முடிவுகள் எடுக்கக்கூடாது என்பது, வெறும் உபதேசம் மட்டுமல்ல; உளவியல் நிபுணர்களின் வலியுறுத்தலும் ஆகும். ஆனால், மக்களின் வெறுப்பு, கோபம், அதிருப்தி, அச்சம் ஆகிய உணர்வுகள்தான், இந்தப் பெருந்திரளவாத ஸ்தாபன எதிர்ப்பு அரசியல்வாதிகளின் பெரும்பலம்.  

‘நன்மை பயக்கும் சர்வாதிகாரி’ என்பது, ஒருவகையான முரண்பாட்டுச் சொற்றொடர்தான். சர்வாதிகாரி என்று மட்டும் சொன்னால், அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விடயம்; அதற்கு முன்னால், ‘நன்மை பயக்கும்’ என்ற சொல்லைப் போட்டுவிட்டால், அதற்கு நேரொத்த உணர்வைத் தந்துவிடுமா? ‘நன்மை பயக்கும் இனவாதம்’, ‘வளமான எதிர்காலத்துக்கான அடிமைமுறை’ போன்ற சொற்றொடர்களை ஏற்றுக்கொள்வோமா? நிச்சயம் இல்லை! சர்வாதிகாரம் என்பதை வரையறுப்பது கடினம். ஆனால், அதன் சில அம்சங்களை அடையாளங்கண்டுகொள்ள முடியும்.   

சர்வாதிகாரத்தின் சில அம்சங்களாக, மட்டுப்படுத்தப்பட்ட அதேவேளை, பொறுப்புக்கூறலற்ற அரசியல் பன்மைத்துவம், விசாலமான வழிகாட்டும் சித்தாந்தங்கள் இன்மை, பரந்துபட்டதும் தீவிரமானதுமான அணிதிரட்டல் இன்மை, சர்வாதிகாரத் தலைமை வரையறுக்கப்படாத முறையில் அதிகாரத்தைப் பிரயோகித்தல் ஆகியவற்றை, ஜூவான் லின்ஸ் அடையாளப்படுத்துகிறார்.   

ஆகவே, சர்வாதிகாரம் என்பது, எந்தவகையான நேரடி பொறுப்புக்கூறல், கட்டமைப்பு ரீதியான தடைகளின்றிய தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்துக்கு வழிசமைக்கிறது. தனிமனிதன், குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் மட்டுப்பாடும் இல்லாமல், அல்லது மிகக்குறைந்த, வரையறுக்கப்படாத கட்டுப்பாட்டுடன் அதிகாரத்தைப் பிரயோகிக்க வழிசமைப்பது, அந்த அதிகாரத்தில் இல்லாதவர்களுக்குப் பாதுகாப்பானதா, இல்லை.  அதனால்தான், சர்வாதிகாரம் என்ற சொல், அச்சத்தையும் வெறுப்பையும் உருவாக்குவதாக இருக்கிறது. அப்படியானால், நன்மை பயக்கும் சர்வாதிகாரம் மட்டும், எப்படி கவர்ச்சிமிக்கதாகத் தெரிகிறது.  

நன்மை பயக்கும் சர்வாதிகாரம் என்பது, நப்பாசையான சிந்தனை. நல்வனின் கையில், அத்தனை அதிகாரமும் இருக்கும் போது, அவன் எல்லோருக்கும் நன்மையே செய்வான் என்ற எடுகோளின் அடிப்படையிலானது. ஆனால், இதனுடைய மறுபக்கத்தை உணரும் போது, இந்த நப்பாசையின் போலித்தனமும் ‘நன்மை பயக்கும் சர்வாதிகாரம்’ என்பதன் மாயைத் தன்மையும் புரியும்.   

அதிகாரம் என்பது பெரும்பலம்; உதாரணத்துக்கு ஓர் அணுகுண்டைப்போல; அந்த அதிகாரத்தை ஒருவரிடம் குவிப்பது, அணுகுண்டானது ஒரே ஒருவரிடம் இருப்பது போலாகும். அதை எப்படி, எப்போது பயன்படுத்துவது என்பது தொடர்பில், எந்த மட்டுப்பாடும் அவருக்குக் கிடையாது. அப்படி மட்டுப்பாடு போடப்பட்டாலும் அதில் அர்த்தமில்லை. ஏனென்றால், அதை அவர் மீறினாலும் அதைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வேறெங்குமில்லை. ஆகவே, சர்வாதிகாரம் பொருந்திய அந்நபரின் கருணையில்தான்,  அனைவரும் வாழவேண்டிய நிலை ஏற்படும். 

ஒருவேளை, இன்று ‘புனிதர்’ ஒருவரிடமே, சர்வாதிகாரத்தையும் வழங்கிவிட்டோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அவர் புனிதர்; புராணங்களில் உரைப்பதுபோல, அவர் நல்லாட்சி வழங்கினார். ஆனால், அந்தப் புனிதருக்கு அடுத்ததாக, ஆட்சிக்கு வருபவர்களும் புனிதர்களாகவே இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம், அந்த நிச்சயமற்ற நிலையை எப்படி எதிர்கொள்வது?  

இங்கு, ஒரே ஒரு விடயம் மட்டுமே நிச்சயமானது; அது, அதிகாரம் ஓரிடத்தில் குவிவது, எந்தவிதத்திலும் ஆரோக்கியமானது அல்ல. இதனால்தான், அதிகாரப் பிரிவினையும் தடைகளும் சமன்பாடுகளும் என்ற கோட்பாடுகள் உருவாகின.   

அதிகாரப்பகிர்வு பற்றி கூறும் மொன்டெஸ்க்யூ, “சட்டவாக்க அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் ஒரு நபரிடம், ஒரு அமைப்பிடம் குவியும்போது, அங்கு சுதந்திரம் இருக்காது. மேலும், நீதித்துறை அதிகாரம் என்பது, சட்டவாக்கத்திலிருந்தும், நிர்வாகத்திலிருந்தும் பிரியாது இருந்தால், அங்கும் சுதந்திரம் இருக்காது. நீதித்துறை அதிகாரம், சட்டவாக்கத்துடன் இணைந்தால், மக்களின் வாழ்வும் சுதந்திரமும் தன்னிச்சையான ஆட்சிக் கட்டுப்பாட்டுக்கு ஆளாக்கப்படும். ஏனெனில், அங்கு சட்டத்தை ஆக்குபவரே நீதிபதியாகவும் இருப்பார். நீதித்துறை அதிகாரம், நிர்வாகத்துறையுடன் இணைந்திருந்தால், நீதிபதியானவர் வன்முறையுடனும் அடக்குமுறையுடனும் செயற்படுவார்” என்று கூறுகிறார்.   

இதனால்தான் சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகிய அரசாங்கத்தின் மூன்று துறைகளும் பிரிந்திருக்க வேண்டும் என்கிறார் மொன்டெஸ்க்யூ. இதன் அடுத்த கட்டம்தான் தடைகளும் சமன்பாடுகளும் என்ற சித்தாந்தம். அதிகாரப் பிரிவு இருந்தால் கூட, ஒரு துறைக்குள்ளான வல்லாட்சி ஏற்பட்டுவிடக்கூடும். ஆகவே, ஒவ்வொரு துறையும் மற்றத் துறையின் மீது, தடைகளையும் சமன்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியப்பாடு, இந்தச் சித்தாந்தத்தினூடாக முன்வைக்கப்படுகிறது.   

நவீன ஜனநாயகத்தின் அடிப்படைகளாக, இவை பரிணாமம் அடைந்திருக்கின்றன. ஆகவே, அதிகாரம் மீதான கட்டுப்பாடுகளை, மட்டுப்பாடுகளை எல்லாம் தகர்ப்பது, மிக ஆபத்தானது. அக்டன் பிரபு சொல்வது போல, “அதிகாரம் கெடுக்கும், அறுதியான அதிகாரம் அறுதியாகக் கெடுக்கும்” என்பதை, எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.   

ஜனநாயகக் கட்டமைப்பில், நிறையக் குறைகள் உள்ளன. ஆனால், சேர் வின்சன்ட் சேர்ச்சில் சொன்னது போல, “பல்வேறுபட்ட அரசாங்க முறைகள், முயற்சிக்கப்பட்டுள்ளன; பாவமும் துன்பமும் நிறைந்த உலகில், இன்னமும் பல வடிவங்கள் முயற்சிக்கப்படும். ஜனநாயகமே பூரணமானது என்றோ சகல ஞானமும் நிறைந்தது என்றோ, யாரும் சொல்லவில்லை. ஆனால், இதுவரை முயற்சிக்கப்பட்டுள்ள அத்தனை அரசாங்க வடிவங்களை விடவும் ஜனநாயகம் மோசமானதல்ல”.  

ஆகவே, சர்வாதிகாரிதான் சகலரோக நிவாரணி என்பது ஒரு போலி; ஒரு மாயை. நோயின் கொடூரத்தில் உழன்று கொண்டிருப்பவனிடம், எதையும் மருந்து என்று நம்பவைத்துவிடுவது இலகு என்பதால்தான், சிலவேகைளில் கொல்லும் விசம் கூட, மருந்தாகத் தெரியும். ஒருபோதும் ஏமாந்துவிடக்கூடாது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X