2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குள் பாடுமீன்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டச் சங்க கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் 64 அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் 32 அணிகள் பங்கேற்கும் சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

பிரபலமான நீர்கொழும்பு ஜூபிட்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டதன் மூலமே பாடுமீன் விளையாட்டுக் கழகம் 32 அணிகளுக்கான சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, ஏற்கெனவே தொடர்ந்து மூன்றாவது முறையாக 32 அணிகள் சுற்றுக்குள் பிரவேசித்துள்ள புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகத்தை குருநகர் பாடுமீன் 32 அணிகளுக்கான சுற்றில் ஏதிர்கொள்ளவுள்ளது.

நீர்கொழும்பு ஜூபிட்டர்ஸ், குருநகர் பாடுமீன் ஆகிய அணிகள் பங்கேற்ற மேற்குறித்த போட்டி, புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

முதல் பாதியின் எட்டாவது நிமிடத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதை தவறவிடப்பட்டது. எனினும் 18ஆவது நிமிடத்தில் அவ்வணி முதலாவது கோலைப் பெற்றது.  

இரண்டாவது பாதியில் முற்று முழுதான ஆதிக்கம் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்திடமே காணப்பட்டது. அந்த ஆதிக்கத்தின் காரணமாக அவ்வணி தொடராக கோல்களை செலுத்தியது.

இரண்டாவது பாதியில் 63, 69, 77, 79, 87 ஆவது நிமிடங்களில் குருநகர் பாடுமீன் தொடரான ஐந்து கோல்களை செலுத்தியதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் குருநகர் பாடுமீன் அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த 32 அணிகளுக்கான சுற்றுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

குருநகர் பாடுமீன் அணிக்காக, அதன் முன்வரிசை வீரர்களான எச். கெய்ன்ஸ், வீ. கீதன் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், ஆர். சாந்தன், எஸ். சேயன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக, எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.எம். பஸ்ரின், எம்.எம். சிபான் ஆகியோர் கடமையாற்றினர். 

உள்ளூர் போட்டிகளைக் கூட நடாத்த முடியாத நிலையில் புதரும், சகதியுமாக காணப்பட்ட புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானம் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் அயராத முயட்சியின் பலனாக புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்காக மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து பல தேசிய போட்டிகள் தற்போது புத்தளம் நகரில் தொடராக இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .